சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் விசேட செய்தி

Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

வணக்கம்,
மும்மணிகளின் ஆசிகள்.

பிறந்திருக்கும் இந்த சிங்கள, தமிழ் புத்தாண்டு இலங்கை வாழ் அனைவருக்கும் அதிர்ஷ்டமும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றேன்.

புத்தாண்டு பிறப்புடன் எம்முள் பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்படுவதுடன், பல்வேறு விடயங்கள் பற்றி பல இலக்குகளையும் நாம் ஏற்படுத்திக் கொள்கின்றோம். இப்புத்தாண்டு பிறப்புடன் குறிப்பாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகச் சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நாம் அதிர்ஷ்டமிக்க நாடொன்றிலேயே வாழ்ந்து வருகிறோம். அத்தோடு இது இயற்கை வளங்கள் நிறைந்த நாடாகவே இருக்கின்றது. ஆகையால் இந்த அதிர்ஷ்டமிக்க நாட்டில் வாழும் உங்களுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் பிறந்திருக்கும் இந்த புத்தாண்டு அனைத்து வகையிலும் அதிர்ஷ்டமிக்கதாக ஆக்குவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் வினைத்திறன் மிக்க வகையிலும் செயற்பட வேண்டும். அத்தோடு அப்பொறுப்புக்களையும் கடமைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்கால சந்தியினருக்காக இந்த நாட்டை உலகின் உன்னத நாடாக உயர்த்துவதற்கு உங்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் தியாகமும் மிகவும் அத்தியவசியமாகும் என்பதை என்னைப்போன்றே நீங்களும் அறிவீர்கள்.

புத்தாண்டு மலரும் இச்சந்தர்ப்பத்தில் நாம் மகிழ்ச்சியடையக்கூடிய பல விடயங்கள் இருப்பதோடு, கவலைபடக்கூடிய பல விடயங்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக தற்போது நாட்டில் சுமார் மூன்று இலட்ச மக்கள் குடிப்பதற்கு கூட நீரின்றி வரட்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். ஆகையால் அம்மக்களுக்கு உங்களால் செய்ய முடிந்த உதவிகளை செய்வது நல்லதென இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்தோடு இந்நாட்டு மக்களுக்கு பாரிய சவாலாகவும் எதிர்கால சந்ததியினருக்கு பாரிய அழிவை ஏற்படுத்தும் ஒரு விடயமாகவும் இருந்து வருகின்ற போதைப்பொருள் பற்றிய நாட்டின் தற்போதைய நிலைமைகள் பற்றியும் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீறீர்கள். தற்போது சிறைவாசகம் அனுபவித்துவரும் சிறைக்கைதிகளில் நூற்றுக்கு எண்பது வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களாகும். ஆகையால் உங்களது பிள்ளைகளையும் உங்களையும் போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்றி போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டில் வாழ்வதற்கும், அத்தகையதொரு அதிர்ஷ்டமிக்க சூழலை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு இந்த புத்தாண்டு தினத்தில் உங்களிடம் மிக அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு வரட்சி மற்றும் காலநிலை மாற்றங்கள் பற்றி கவனத்தை செலுத்த வேண்டிய இருக்கின்ற இப்புத்தாண்டில், மரம் நடுவதற்கு 15ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் 11.17க்கு அமைந்திருக்கும் முக்கொத்து சுபநேரம் மிகவும் முக்கியமானதாகும். எனவே நாட்டுக்கு மிகுந்த நன்மையைத்தரும், சுற்றாடல் பாதுகாப்புக்கு வழிவகுக்கும், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் மரம், செடி, கொடிகள் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களுக்கும் பாதுகாப்பை அளிக்கும் வகையிலும் நமது நாட்டை அதிர்ஷ்டமிக்க தேசமாக மாற்றும் வகையிலும் 15ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 11.17 ல் அமையும் முக்கொத்து சுபநேரத்தில் மரக்கன்றொன்றை நடுமாறும் உங்கள் அனைவரிடமும் மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மலரும் இப்புத்தாண்டு நீங்கள் எதிர்நோக்கும் அனைத்து சவால்களையும் பிரச்சினைகளையும் தடைகளைகளையும் வெற்றிகொள்ளத்தக்க அதிர்ஷ்டமிகு ஆண்டாக அமைய வேண்டும் எனவும், இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் இப்புத்தாண்டு அனைத்து வகையிலும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டுமென்றும் எனது ஆசிர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்.

Share This Post

NEW