இலங்கையின் தொலைத்தொடர்பு துறையின் புதியதோர் திருப்பு முனையாக தாமரைக் கோபுரம் மக்களிடம் கையளிப்பு

இலங்கையின் தொலைத்தொடர்பு துறையின் புதியதோர் திருப்பு முனையாக தாமரைக் கோபுரம் மக்களிடம் கையளிப்பு
  • தேசிய வளமாக இதனைப் பாதுகாப்பதும் நாட்டின் முன்னுள்ள சவால்களை விளங்கிச் செயற்படுவதும் அவசியமானதாகும்.  – ஜனாதிபதி 

  • தாமரைக் கோபுரத்தின் நிர்வாகம் ஒரு அரச நிறுவனத்தின் கீழ்

கொழும்பு நகரை அலங்கரிக்கும் வகையிலும் இலங்கையை ஒரு பாரிய தொலைத்தொடர்பு நாகரிகத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் தெற்காசியாவில் நவீன வசதிகளுடன்கூடிய உயரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (16) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், இந்த கட்டிடமானது இலங்கையின் தொலைத்தொடர்பாடல் துறையில் புதியதோர் திருப்புமுனையாகும் என்றும், கட்டிடத் தொழிநுட்பத்துறையில் புதியதோர் பாய்ச்சலுமாகுமென்றும் தெரிவித்தார்.

ஒரு தேசிய வளமாகவும் தொலைத்தொடர்புத் துறையின் ஒரு திருப்பு முனையாகவும் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பணி குறித்து மகிழ்ச்சியடைவதைப்போன்று இதற்கு பின்னால் உள்ள கதை அவ்வளவு தூரம் மகிழ்ச்சியடையக்கூடியதொன்றல்ல என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

உத்தேச மொத்த செலவு 19 பில்லியன் ரூபாவான தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக 16 பில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கத்திற்கு கடனாக வழங்குவதற்கு சீனாவின் EXIM வங்கி உடன்பட்டிருந்தது. அந்த உடன்பாட்டிற்கமைய இந்த நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் 2012.01.03ஆம் திகதி சீனாவின் CEIEC மற்றும்  ALIT ஆகிய நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்குமிடையே ஒரு முத்தரப்பு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் 02 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்தபோதும், அந்த 02 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் முகவரியும் போலியானது என்பது பற்றி தகவல்கள் வெளியாகின.

அதன் பெறுபேறாக சீனாவின் EXIM வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட 16 பில்லியன் கடன் 12 பில்லியன் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் அதுவரையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த அக்கடன் தொகைக்காக ஒவ்வொரு வருடமும் கடன் தவணைப் பணமாக 2400 மில்லியன் ரூபா அதாவது 240 கோடி ரூபா பணத்தை இலங்கை செலுத்தி வந்தது. 2018ஆம் ஆண்டுக்காகவும் இலங்கை அக்கடன் தவணைக்கான 240 கோடி ரூபாவை செலுத்தியுள்ளதுடன், அதனை இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு அவ்வாறே வருடாந்தம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டுக்கான கடன் தவணைப் பணத்தில் முதலாவது அரையாண்டுக்கான 120 கோடி ரூபா தற்போது செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தாமரைக் கோபுரத்தின் அடுத்தகட்ட நிர்மாணப் பணிகளுக்கு மேலும் 300 கோடி ரூபா தேவை என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வளத்தை பாதுகாக்க வேண்டியதன் பொறுப்பு பற்றி சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக அதனை ஒரு அரச நிறுவனமாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். அதற்காக பணிப்பாளர் குழுவொன்றை அமைத்து தனியார் நிறுவனமொன்றையொத்த வகையில் செயற்படும் அரச நிறுவனமாக நடாத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் திறந்து வைக்கப்படும் தாமரைக் கோபுரத்தின் அடித்தள பரப்பு 45 மீற்றர்களாகும் என்பதுடன், உயரம் 356 மீற்றர்களாகும். கோபுரத்தின் பிரதான அங்கமாக தொலைத்தொடர்பு உள்ளதுடன், கோபுரத்தின் மேற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள என்டனா 90 மீற்றர் உயரமானதாகும். இந்த டிஜிட்டல் என்டனா வடக்கே 60 கிலோமீற்றரும் தெற்கே 60 கிலோமீற்றரும் கிழக்கே 50 கி.மீ, மேற்கே 15 கி.மீற்றரும் செயலெல்லையை கொண்டதாகும். இதில் 20 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 50 எப்.எம் அலைவரிசைகளும் தொலைத்தொடர்பு செயற்பாட்டாளர்களுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப திட்டமிடல் 2008ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதுடன், 2012ஆம் ஆண்டு அதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. திட்டத்தின் தலைமை ஆலோசனை மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்றது. பொறியியல் துறை கொங்கிரீட் தொழிநுட்பம், உயர்ந்த கட்டிட நிர்மாணத்துறை மின் பொறியியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கை நிபுணர்கள், பொறியியலாளர்கள் 70க்கும் மேற்பட்டவர்கள் இதற்கு பங்களிப்பை வழங்கிவருவதுடன், அரச தனியார்துறை பல்கலைக்கழகங்களில் கல்விகற்றுவரும் நூற்றுக்கணக்கான பொறியியலாளர்கள், மாணவர்கள் களப் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பையும் இது ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

தாமரைக் கோபுரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வை குறிக்கும் வகையில் ஜனாதிபதி அவர்களினால் நினைவு முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. தாமரைக் கோபுரத்திற்கான இணையத்தளத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது திறந்து வைத்தார்.

ஜனாதிபதி அவர்களுக்கும் சீன பிரதிநிதிகளுக்குமிடையே நினைவுப் பரிசில்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் தலைவர், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் சீன தூதுவர் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கொழும்பு தாமரைக் கோபுர திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை… (2019.09.16)

எமது நாட்டில் குறிப்பாக இந்த யுகத்தில் கட்டிட தொழிநுட்பத் துறையில் ஒரு புதிய திருப்பு முனையாக திகழும் கொழும்பு தாமரைக் கோபுரத்தை இன்று திறந்து வைக்கக்கிடைத்ததையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த தாமரைக் கோபுரம் கட்டிட தொழிநுட்ப துறையிலும், தொடர்பாடல் தொழிநுட்ப துறையிலும் புதியதோர் பாய்ச்சலாகும். குறிப்பாக தொழிநுட்ப ரீதியாக உலகில் பல மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்துவரும் சூழலில், எமது நாட்டிலும் இந்த புதிய கட்டிடம் புதியதோர் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றே நான் நம்புகிறேன்.

இந்த தாமரைக் கோபுரம் எமது நாட்டின் சுற்றுலாத் துறையில் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் மற்றுமொரு முக்கிய எட்டாகும். எமது நாடு அநுராதபுர யுகம், பொலன்னறுவை யுகத்திலிருந்து கண்டி யுகம் வரை நீர்ப்பாசனத் தொழிநுட்பம், கட்டிடத் தொழிநுட்பம் ஆகிய பல்வேறு துறைகளினூடாக கட்டியெழுப்பப்பட்ட இத்தகைய உயர்ந்த தொழிநுட்ப உருவாக்கம் குறித்த மரபுரிமையைக் கொண்டுள்ள ஒரு நாடாகும். கொழும்பு தாமரைக் கோபுரம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற தொழிநுட்ப வெற்றியாகவே நான் கருதுகின்றேன். எனவே தேசிய சர்வதேச சுற்றுலா பயணிகளுக்காக கொழும்பு தாமரைக் கோபுரம் ஒரு முக்கிய இடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோன்று இக்கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை என்றாலும், தற்போது நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற அளவில் அது திறந்து வைக்கக்கூடிய நிலையில் இருப்பதால் நாம் அதனை திறந்து வைக்க தீர்மானித்தோம். எஞ்சிய பகுதியையும் நிறைவுசெய்து திறந்து வைப்பதற்கு இன்னும் கொஞ்சம் காலமும் அதேபோன்று இன்னும் குறிப்பிடத்தக்க நிதியும் தேவையாகும். இந்த நிலைக்கு இக்கட்டிடத்தை கொண்டு வருவதற்கு 07 வருடங்கள் ஆகியுள்ளன.

2012ஆம் ஆண்டு இக்கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 07 வருட காலப்பகுதியில் இதன் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றன. இந்த கட்டிடம் ஒரு அன்பளிப்பல்ல. இது கடன்பெற்று நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமாகும். இக்கட்டிட நிர்மாணத்திற்கு சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து இலங்கை பெருந்தொகை கடனைப்பெற்றுள்ளது. இந்த பெருந்தொகை கடனுடன் இக்கட்டிட நிர்மாணிப்புக்காக 2012ஆம் ஆண்டு அப்போதிருந்த எமது அரசாங்கம் முத்தரப்பு ஒப்பந்தமொன்றை செய்துள்ளது. அவ்வொப்பந்தத்திற்கு இலங்கை அரசாங்கம் சார்பில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவும் சீனாவின் எக்சிம் வங்கியும் அதேபோன்று சீனாவின் இரண்டு நிறுவனங்களும் கைச்சாத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்த கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கத்துடன் உடன்பட்டுள்ள தொகை 16 பில்லியன் ரூபாவாகும். அதாவது 1600 கோடி ரூபாவாகும். அத்தொகையில் 12 பில்லியன் ரூபா அதாவது 1200 கோடி ரூபா எமக்கு கிடைக்கப்பெற்றது. 2017ஆம் ஆண்டு எஞ்சிய தொகை நிறுத்தப்பட்டது. சீனாவின் எக்சிம் வங்கி 2017ஆம் ஆண்டு 12 பில்லியனுடன் கடன்தொகையை நிறுத்தியது. எஞ்சிய நிதியை வழங்குவதை தவிர்த்துக்கொண்டது.

இக்கட்டிடம் எமக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசிய வளமாகும். இது தொழிநுட்ப துறையிலும் தொடர்பாடல் துறையிலும் புதியதோர் திருப்பு முனையாகும். இந்த அனைத்திலும் வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு பணியின் முக்கியத்தவம் குறித்து மகிழ்ச்சியடைவதைப்போன்று இங்கு குறிப்பிட வேண்டிய வேறு சில விடயங்களும் உள்ளன. அதுதான் 2012ஆம் ஆண்டு இக்கட்டிட நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் 2 பில்லியன் ரூபா அதாவது 200கோடி ரூபாவை முற்பணமாக செலுத்தியுள்ளது. அவ்வாறு செலுத்தப்பட்டிருப்பது சீனாவின் எலிட் என்ற ஒரு நிறுவனத்திற்காகும். 2016ஆம் ஆண்டாகும்போது அந்நிறுவனம் தலைமறைவாகிவிட்டது. அந்நிறுவனத்திற்கு என்ன நடந்ததென்பதே தெரியாது. இலங்கை அரசாங்கம் வழங்கிய 200 கோடி ரூபாவிற்கும் என்ன நடந்தது என்று தெரியாது. அந்த 200 கோடி ரூபா முற்பணம் 2012ஆம் ஆண்டு செலுத்தப்பட்டுள்ளது.

நாம் இதுபற்றி தெரிந்துகொண்டதன் பின்னர் அது குறித்த விசாரணை ஒன்றை ஆரம்பித்தோம். சீனாவின் இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கிற்கு நான் தனிப்பட்ட முறையில் உத்தியோகபூர்வமாக அறிவித்து இந்த எலிட் நிறுவனம் பற்றி தேடிப்பார்க்குமாறு கூறினேன். ஏனெனில் அந்த நிறுவனம் முத்தரப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஒரு நிறுவனமாகும். என்றாலும் தலைமறைவானதன் பின்னர் எலிட் என்ற ஒரு நிறுவனத்தை உலகில் எங்குமே கண்டுகொள்ள முடியவில்லை. அப்போது எமது நாட்டில் இருந்த சீன தூதுவருக்கும் நாம் அறிவித்தோம். சீனாவில் உள்ள எமது தூதுவருக்கும் தெரியப்படுத்தினோம். முத்தரப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள எலிட் நிறுவனத்தின முகவரி பீஜிங் நகரத்தில் உள்ள ஒரு முகவரியாகும். எனவே சீனாவில் வெளிவிவாகர அமைச்சிற்கும் தெரியப்படுத்தி இதுபற்றி தேடிப்பார்க்குமாறு இலங்கை தூதுவரிடம் நான் குறிப்பிட்டேன். எமது தூதுவர் அந்த இடத்தை தேடிப்பார்க்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அந்த முகவரியில் அப்படியொரு நிறுவனம் இருக்கவில்லை. எனவே முற்பணத்திற்கு என்ன நடந்தது எனத் தெரியாது. இத்தகையதொரு நிலையில்தான் சீனாவின் எக்சிம் வங்கி 16 பில்லியன் ரூபா கடன் தொகையை 12 பில்லியன் ரூபாவுடன் மட்டுப்படுத்திக்கொண்டது. அதன் பின்னர் எமது பணத்தைக்கொண்டு இந்த கோபுரத்தை அமைக்க வேண்டியதாயிற்று. இந்த முழு கோபுரமும் இந்த நாட்டு மக்களின் பணத்தினால்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த 12 பில்லியன் ரூபாவும் கடனாகும்.  நாம் வருடம் ஒன்றுக்கு 2400 மில்லியன் ரூபா எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது.  இவ்வாறு 10 வருடங்களுக்கு செலுத்த வேண்டும். 2018ஆம் ஆண்டுக்கும் அவ்வாண்டுக்கான 2400 மில்லியன் ரூபா கடனை நாம் செலுத்தியிருக்கிறோம். அதாவது 240 கொடி ரூபாவை நாம் செலுத்தியிருக்கிறோம். 2019ஆம் ஆண்டுக்கு இதுவரையில் 1200 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. எனவே வருடம் ஒன்றுக்கு 240 கோடி ரூபா அல்லது 2400 மில்லியன் ரூபா வீதம் 10 வருடங்களுக்கு இந்த கடனை நாம் செலுத்த வேண்டும். அதேபோன்று இந்த கட்டிடத்தின் எஞ்சிய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு எமக்கு மேலும் 3000 மில்லியன் ரூபா அல்லது 300 கோடி ரூபா தேவையாகும்.

கடந்த சுமார் 5 வருட காலப்பகுதியில் 2, 3 மாதங்களுக்கொருமுறை திறைசேரிக்கு பணம் வழங்குவது தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவாகும். தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு பெருமளவு வருமாணம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த வருமானத்தின் மூலமே பணம் செலுத்தப்படுகின்றது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க திறைசேரியில் பணம் இல்லை என்றதும் நாம் தான் பணம் வழங்குகிறோம். இந்த பணம் இந்த நாட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உள்ள பணமாகும். நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டிய பணமாகும். நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கவும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் உள்ள பணத்தின் மூலம் தான் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு இக்கட்டிடத்தின் எஞ்சிய பணிகளை நிறைவு செய்ய மேலும் 300 கோடி ரூபாய் தேவையாகும். எதிர்வரும் காலங்களில் அந்த பணிகளை நிறைவு செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம். எனவே இந்த விடயங்களை நான் விளக்கிக்கூறியது நீங்கள் காணும் இந்த அழகிய தோற்றத்திற்குப் பின்னல் இருக்கின்ற சவாலை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமென்ற காரணத்தினாலேயே ஆகும். இத்தகைய பின்னணியை கொண்டிருந்தபோதும் இதுபோன்றதொரு புதிய கட்டிடம் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று தொடர்பாடல் துறையிலும் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்தகூடியது என்ற வகையில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு மொரட்டுவை பல்கலைக்கழகம் தான் ஆலோசனை சேவைகளை வழங்கியது. மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஆலோசனை சேவைகளை வழங்கினர். அதேபோன்று கடந்த சில வருடங்களாக தொழிநுட்ப பொறியியல் சேவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதனூடாக அவர்களது அறிவை வளர்த்துக்கொள்ளவும் புதிய அறிவை பெற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது. எனவே எமக்கு கிடைத்த வளத்தை நாம் பாதுகாத்து சிறப்பாக பராமறிக்க வேண்டும்.

அதேபோன்று நாம் நிதி அமைச்சுடன் கலந்துரையாடி இதனை ஒரு அரச நிறுவனமாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளோம். அரச நிறுவனமாக மாற்றுவதற்கான அனுமதி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த வகையில் இன்னும் இரண்டுவார காலப் பகுதியில் இந்த நிறுவனத்திற்கான பணிப்பாளர் சபையொன்றை அமைத்து இதனை ஒரு தனியார்துறை நிறுவனத்தை ஒத்த வகையில் செயற்படும் அரச நிறுவனமாக உருவாக்க நாம் நடவடிக்கை எடுப்போம். இந்த  கட்டிடத்தில் இருக்க வேண்டிய ஏனைய விடயங்கள், கடைத் தொகுதிகள், உணவு விடுதிகள் எதிர்காலத்தில் திறந்து வைக்கப்படவுள்ளன. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அமைச்சரவை அங்கீகாரத்துடன் உருவாக்கப்படும் நிறுவனத்தின் மூலமாகும். அந்நிறுவனத்தின் மூலம் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு அந்நிறுவனங்களை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இது எமது நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசிய வளமாகும். தொழிநுட்ப துறையிலும் தொடர்பாடல் துறையிலும் புதியதோர் எட்டாகும். இதனை பொதுமக்களிடம் கையளிக்க கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். அதேபான்று இதற்காக சீன எக்சிம் வங்கி வழங்கிய கடனுக்காக சீன அரசாங்கத்திற்கும் எக்சிம் வங்கிக்கும் நாம்  நன்றி தெரிவிக்கிறோம். அதேபோன்று நிர்மாணப் பணிகளில் இதுவரையில் எம்முடன் இருந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ஏனைய நிறுவனங்கள் பாரிய அர்ப்பணிப்பை செய்துள்ளன. அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவிக்கிறோம். அதேபோன்று மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஆலோசனை சேவைகளையும் தொழிநுட்ப உதவிகளையும் வழங்கியமைக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், இதுவரையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்களுக்கும் அரசாங்கத்தின் சார்பில் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறேன். இந்த தொழிநுட்ப கோபுரத்தை மக்களிடம் கையளிப்பதன் மூலம் அதன் சேவைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென ஆசீர்வதித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

நன்றி

Share This Post

NEW