இலங்கை விஜயம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கான விஜயம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லெவ்ரோவ் தெரிவித்தார்.

தான் இலங்கையில் ரஷ்ய தூதரகத்தில் சேவையில் இருந்த போது இருந்த நிலைமைகளை பார்க்கிலும் நல்ல மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போதே ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி, மனிதாபிமான அபிலாஷைகள், இராணுவ ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கும் அமைச்சர் லெவ்ரோவ் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கு விஜயம் செய்தமைக்காக ஜனாதிபதி அவர்கள் ரஷ்ய வெளிவிவகார அமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் புதிய விமானப் பயணத்தை ஆரம்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ரஷ்யா கெடட் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்தமையை நினைவுகூர்ந்த வெளிவிவகார அமைச்சர் தற்போது அம்மாணவர்களின் தொகை 70ஆக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெட்ரி உள்ளிட்ட ரஷ்ய பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயனாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share This Post