கட்சிக்கும் கட்சி அங்கத்தவர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாராகவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு…

கட்சிக்கும் கட்சி அங்கத்தவர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாராகவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு…

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை குறைத்து மதிப்பிடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு இடம்பெறுமானால் கட்சியின் பலத்தை அவர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்ட தயாராக உள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் மகிழ்ச்சியடையக்கூடியதுமான நிகழ்ச்சித்திட்டமொன்றுக்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று (15) பிற்பகல் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட மட்டத்தில்  நடத்தவுள்ள மாநாட்டுத் தொடரின் முதலாவது மாநாடு பெரும் எண்ணிக்கையான கட்சி அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று பிற்பகல் இரத்தினபுரியில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் அபேட்சகராக களமிறங்கியபோதும் வாக்கு பின்புலத்தை கருத்திற்கொள்ளும்போது அந்த எவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாதென்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவியைப்போன்றே ஐந்து வருடங்களாக மக்கள் நலன்பேணலுக்காக மேற்கொண்ட தூய்மையான நிகழ்ச்சித்திட்டங்களின் பெறுபேறுகளுடனேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க உள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இருதரப்புகளிலிருந்தும் அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்விதமான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பொதுஜன முன்னணியுடன் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டிருப்பது தாய் நாட்டையும் கட்சியின் தனித்துவத்தையும் முன்னிறுத்தியே ஆகுமென்றும் குறிப்பிட்டார்.

பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை பாதுகாக்கப்பட்டிருப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சமர்ப்பித்துள்ள கடிதத்தின் காரணமாகவேயாகும் என்றும் அது குறித்து அதன் உயர்மட்டத் தலைவர்களுக்கும் கீழ்மட்ட கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி உணர்வு இருந்தபோதும் இடைநிலையில் உள்ள சிலர் அதனை மறந்து இருப்பது குறித்து தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தேர்தலுக்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தற்போது தூதுவராலயங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அவ்விதமான எந்த நிபந்தனையும் கிடையாதென்றும் நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மதிக்கும் ஊழல், மோசடியற்ற சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான ஒரு நாட்டுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க. லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, திலங்க சுமதிபால, வீரகுமார திசாநாயக்க, ரோஹண லக்ஷமன் பியதாச, சாந்த பண்டார, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க ஆகியோரும் அத்துல குமார ராகுபத்த, பானு மனுப்பிரிய உள்ளிட்ட இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களும் கட்சி உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரத்தினபுரி மாவட்ட மாநாட்டில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை. 2019.09.15

நாம் கடந்த 03ஆம் திகதி கட்சியின் 68வது ஆண்டு நிறைவு விழாவை கொழும்பில் நடத்தினோம். அதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் மாநாடுகளை நடத்துவதற்கு மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று இரத்தினபுரியில் இடம்பெறுவது மாவட்ட மாநாட்டுத் தொடரின் முதலாவது மாநாடாகும். நாம் இன்னும் ஒன்றரை மாத காலப் பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் மாநாடுகளை நடத்துவோம். நாம் கடந்த மே தினத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தோம். அதற்கு முன்னர் அனைத்து மே தினங்களும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளன. கடந்த ஐந்து வருடங்களில் கட்சியின் ஆண்டு நிறைவு விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி, கிராமங்கள் தோறும் சென்று நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்த மாநாட்டிற்கான ஏற்பாட்டு வேலைகளில் எமது சகோதரர்கள், ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டிருந்தபோது இங்குள்ள சில குண்டர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டதாக எனக்கு அறியக் கிடைத்தது. இரத்தினபுரி மாவட்டத்தில் இத்தாக்குதல் தொடர்பாக எனக்கு நல்ல அனுபவம் உள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி தேர்தல் நடவடிக்கைகளின்போது அபேட்சகராக இருந்த நான் மேடையில் பேச ஆரம்பித்ததும் அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் காயமடைந்தனர். எனினும் இறுதியில் தாக்குதலுக்குள்ளான நான் வெற்றிபெற்றேன். தாக்கியவர்கள் தோல்வியுற்றனர். எனவே எம்மீது தாக்குதல்களை அதிகரிக்க அதிகரிக்க நாம் வெற்றிபெறுவோம். தாக்குவோர் தோல்வியடைவர்.

நான் வெற்றிபெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் விருப்பம் எதுவாக இருந்தது? நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்து மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து ஏன் வெளியேறினேன்? அப்போது மக்கள் என்னிடம் உண்பதற்கு உணவையோ தொழில்களையோ கேட்கவில்லை. 6,252,000 மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் என்னை வெற்றிபெறச் செய்தது நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவாகும்.

அந்த இரண்டு விடயங்களையும் இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நான் செய்திருக்கின்றேன். பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் உள்ளன. எனினும் 2015 ஜனவரி 08 தேர்தலில் அப்போதைய அரசாங்கம் ஏன் தோல்வியுற்றது. அந்த தேர்தலில் நான் ஏன் வெற்றிபெற்றேன். கூட்டணி முன்னணி பற்றி பேசுகின்றபோது குறிப்பாக 2015 ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் அன்றைய அரசாங்கம் ஏன் தோல்வியுற்றது என்ற விடயத்தை அனைவரும் சிந்திக்க வேண்டுமென்பது பற்றி நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பயனில்லை. அதற்கு பலமும் இல்லை. 04, 05 இலட்சம் வாக்குகளுக்கு மேல் வாக்குகள் இல்லை. அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என சிலர் கூறுகின்றார்கள். என்றாலும் 2015 ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் நான் கட்சியின் செயலாளராக இருந்து வெளியேறி வெற்றிபெற்றேன். நான் அவ்வாறு வெளியேறியதன் பின்னர் அந்த செயலாளர் பதவியும் என்னிடம் இருக்கவில்லை. நான் அபேட்சகர் மாத்திரமே. இன்று நாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கையில் வைத்துக்கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருடன் ஜனாதிபதி பதவியையும் வைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகங்கொடுத்திருக்கிறோம் என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி பதவியில் கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் இந்த நாட்டு மக்களுக்கு தெளிவான நிகழ்ச்சித்திட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் நாட்டுக்கு ஒரு தூய்மையான நிகழ்ச்சித்திட்டம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நான் இங்கு குறிப்பிடுவது ஐக்கிய தேசியக் கட்சியினது வேலைத்திட்டம் பற்றியல்ல. எனது வேலைத்திட்டம் பற்றியே குறிப்பிடுகின்றேன். ஊழல், மோசடிகளின்றி எப்படி நாட்டை முன்கொண்டு செல்வது. நாட்டை சீரழிக்கும் போதைப்பொருளிலிருந்து நாட்டை எப்படி பாதுகாப்பது. காடுகளை, மரங்களை, சுற்றாடலை அழித்து வருபவர்களிடமிருந்து சுற்றாடலை எப்படி பாதுகாப்பது. இந்த நாட்டில் சீரழிந்துவரும் சிறுவர்களை எப்படி பாதுகாப்பது. இத்தகைய பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களுடனேயே நான் ஜனாதிபதி பதவியில் இருந்து வருகின்றேன். இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் பெறுபேறுகளுடனேயே நாம் அடுத்த தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.

எம்மைப் பற்றி குறைத்து மதிப்பிடுகின்றவர்கள் இருக்கின்றார்கள். என்றாலும் நான் ஒன்றைப்பற்றி கூற வேண்டும். கடந்த இரண்டு மாதங்களை எடுத்துக்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன முன்னணி என்பன நாட்டில் உள்ள சில தூதுவராலயங்களுடனும் நாட்டிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஜனாதிபதி அபேட்சகர் பற்றி நாட்டில் கருத்துக் கணிப்பொன்றை மேற்கொண்டனர். மூன்று வாரங்களுக்கு முன்னர் செய்த ஒரு கருத்துக் கணிப்பின் பெறுபேறுகள் வெளிவந்துள்ளன. நான் பெயர்களை குறிப்பிடவில்லை. ஜனாதிபதி அபேட்சகர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை நீங்கள் அறிவீர்கள். அதேபோன்று அபேட்சகர்களாக முயற்சித்து வருகின்றவர்களையும் நீங்கள் அறிவீர்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித், ரணில் அல்லது கரு ஜயசூரிய இவர்கள் மூவரில் யாரேனும் ஒருவராக இருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம். கடந்த இரண்டு மாதங்களில் ஒவ்வொரு நிறுவனங்கள், பிரதேச ரீதியாக, தூதுவராலயங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் செய்துள்ள கருத்து கணிப்புகளின் பெறுபேறுகள் என்ன?

பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது எதிர்பார்ப்பிலுள்ள எந்தவொரு அபேட்சகருக்கும் செய்யப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளின் படி 40 வீத வாக்குகளும் கிடைக்கவில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் அபேட்சகர் 51 வீத வாக்குகளுக்கும் அதிகம் பெற வேண்டும். நான் இன்று ஒரு உயர் மட்டத்தில் செய்யப்பட்ட கருத்து கணிப்பு அறிக்கையொன்றை படித்தேன். அது 51 வீதத்திற்கும் அதிக வாக்குகளை பெறுகின்றவர் அடுத்த தேர்தலில் 6,245,000 அதிகமான வாக்குகளை வெற்றிபெறும் அபேட்சகர் பெற வேண்டும். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளின் படி எந்தவொருவருக்கும் 40 வீதம் கிடையாது. யார் பீற்றிக்கொண்டாலும் 40 வீதத்திற்கும் அதிகம் பெற்றே ஆக வேண்டும். நூற்றுக்கு 12 வீத அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு நூற்றுக்கு 12 வீதத்தை இந்த தேர்தலில் அந்த எவருக்குமே பெற்றுக்கொள்ள முடியாது.

இந்த நாட்டில் கூட்டணிகளின் வரலாற்றை நீங்கள் அறிவீர்கள்.  1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவின் அரசாங்கமும் ஒரு கூட்டணி அரசாங்கமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முதலாவது அரசாங்கம் மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கமாகும். அது ஒரு கூட்டணி அரசாங்கமாகும். அதன் பின்னர் 1960 ஜூலை முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இந்த நாட்டில் அமைத்த அனைத்து அரசாங்கமும் கூட்டணி அரசாங்கமாகும். தனியாக மேற்கொள்ளவில்லை. தனியாக மேற்கொள்ள முடியவில்லை. எனவே இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டு அணிகளாக இருப்பது நீங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு சக்தியாகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் பொதுஜன முன்னணியில் இருப்பது மேலும் பலமாகும். கூட்டணி அமைக்கின்றபோது இந்த கூட்டணி வரலாற்றில் நான் அதிகம் அர்ப்பணிப்புகளை செய்திருக்கின்றேன். நான் 12, 13 வருடங்களாக கட்சியின் செயலாளராக தொடர்ச்சியாக இருந்தபோது நான் அதிக அர்ப்பணிப்புகளை செய்திருக்கின்றேன். 2004ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து கூட்டணி அமைப்பதற்கு நான் அதிகம் உழைத்திருக்கின்றேன். மாலை 7.00 மணி முதல் மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களுடன் அதிகாலை 1,2,3 மணி வரைக்கும் கலந்துரையாடியிருக்கிறோம். இது ஓரிரு நாட்கள் அல்ல. நான்கு மாதங்கள் இவ்வாறு கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறோம். நான்கு மாதங்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு கூட்டணி அமைத்து சந்திரிக்கா அம்மையாருடன் இணைந்து பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு சென்றோம்.

2015 ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இன்றுள்ள பொதுஜன முன்னணியும் இணைந்திருந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தோல்வியை தழுவியது. 2015 ஜனவரி 08ஆம் திகதி எனது வெற்றியை தொடர்ந்து எதிர்த்தரப்பினர் இது அமெரிக்காவின் சூழ்ச்சி எனக் கூறினார்கள். இந்திய சூழ்ச்சி எனக் கூறினார்கள். 2015 ஆகஸ்ட் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை தழுவியது. ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியும் தோல்வியை தழுவியது. அமெரிக்க, இந்திய சூழ்ச்சியின் மூலம் ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியடைச் செய்யப்பட்டது எனக் கூறினார்கள். அவ்வாறு கூறியவர்களிடம் 2015 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தேர்தலும் அமெரிக்கா அல்லது இந்தியாவின் சூழ்ச்சியா என நான் கேட்க விரும்புகின்றேன். எவருக்கும் 113 ஆசனங்கள் கிடைக்கவில்லை. நான் மட்டுமே பாராளுமன்ற பலமின்றி அரசாங்கத்தை செய்த ஜனாதிபதி ஆவேன். பாராளுமன்றத்தில் எனக்கு ஆளுங்கட்சியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது. ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆறில் ஐந்து அதிகாரத்துடன் ஜனாதிபதியாக இருந்தார். ரணசிங்க பிரமேதாசவின் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை பலமிருந்தது. சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் பெரும்பான்மை பலமிருந்தது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2010 தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. என்றாலும் எனக்கு அப்படியிருக்கவில்லை. நல்லதொரு அரசாங்கத்தை செய்யவே 2015 இல் நாம் ஆட்சிக்கு வந்தோம். சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பலப்படுத்தி தூய்மையான ஆட்சியை முன்னெடுக்கவே நாம் வந்தோம். ரணில் விக்ரமசிங்க வேறு திசையில் சென்றார். அப்படியென்றால் எதிர்காலத்தில் அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எந்த நிலையில் உள்ளது. எமக்கு பல விடயங்களையும் கூற முடியும். எனினும் அரசியல் யதார்த்தம் பற்றிய அளவீடுகளுடன் பார்க்கின்றபோது நாட்டின் வாக்குகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றது என்பது எமக்கு தெரியும். சிங்கள பௌத்தர்களின் வாக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்களின் வாக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன. மலையக மக்களின் வாக்குகள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு குழப்பமான நிலை உள்ளது என்பது உண்மை. அவர்கள் எல்லோரும் இணைந்து கூட்டணி அமைப்பது பற்றி கலந்துரையாடி வருகிறார்கள். தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழர் ஐக்கிய முன்னணி, சம்பந்தன், ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க, றிஷாத் பதியுதீன் ஆகிய அனைவரும் இணைந்து அதுபற்றி கலந்துரையாடி வருகிறார்கள். பொதுஜன முன்னணியின் கிராம மட்டத்திலுள்ள கட்சிக்காரர்கள் என்பவர்கள் யார்? பொதுஜன முன்னணியின் கிராம மட்டத்திலுள்ள அங்கத்தவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களாகும். மொட்டுக்கட்சியினர் பாராளுமன்றத்திலுள்ள முழு அணியினரும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களே ஆகும். மஹிந்த அமரவீரவின் ஒரு கடிதத்தினால் தான் இன்று மொட்டுக்கட்சியினர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி பாராளுமன்றத்தில் உள்ளது. எனவே மொட்டுக்கட்சியினரின் உயர் மட்டத்திலிருப்பவர்களுக்கும் கிராம மட்டத்திலுள்ள கட்சி உறுப்பினர்களுக்கு அது குறித்த நன்றியுணர்வு உள்ளது. என்றாலும் அக்கட்சியின் இடைநிலையிலுள்ள சிலருக்கு அந்த நன்றியுணர்வு இல்லை. அவர்கள் நாங்கள் சரி என்று நினைக்கிறார்கள். தேர்தலில் வெற்றிபெறுவதற்கு 51 வீதத்திற்கு அதிக வாக்குகள் தேவை. வாக்குகளின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு 6,250,000 க்கும் அதிகம் வாக்குகள் தேவை. நாங்கள் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற முடியுமா அதுதான் உண்மையான நிலைமை.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது. இரு சாராரும் எம்மை அழைக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியினரும் அழைக்கிறார்கள். பொதுஜன முன்னணியினரும் அழைக்கிறார்கள். எனினும் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடல்களை வெளிப்படையாகவோ? இரகசியமாகவோ? மேற்கொள்ளவில்லை. ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாம் தீர்த்துக்கொள்ள வேண்டிய பல கொடுக்கல் வாங்கல்கள் உள்ளன.  மத்திய வங்கி கொள்ளையுடன் சம்பந்தப்பட்ட தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகும்போதுதான் அக்கட்சிக்கு எதிர்காலம் உள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் பொதுஜன முன்னணியுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருக்கிறோம். நாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் சில முன்மொழிவுகளை முன்வைத்திருக்கிறோம். அதில் முதலிடம் வகிப்பது தாய்நாடாகும். நாட்டுக்கான அரசாங்கம் என்ற வகையில் எத்தகைய நிகழ்ச்சித்திட்டமென்பதை குறிப்பிட்டு இருக்கிறோம். அடுத்தது கட்சியின் தனித்துவம் பற்றியதாகும்.  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தில் கட்சியின் கொள்கை, பண்டாரநாயக்க அவர்கள் உருவாக்கிய இந்த நாட்டில் சமூக புரட்சியின் மூலமான அரசியல் முறைமை முக்கியமானதாகும். அந்த அரசியல் முறைமையின் அந்த அடிப்படையில் தான் பொதுஜன முன்னணி உருவானது. அவ்வாறன்றி வேறு ஒரு அடிப்படையில் உருவானதல்ல. எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் நாம் கலந்துரையாடல்களை நடத்துகின்றோம். நாம் கட்சி அங்கத்தவர்களையும் அமைப்பாளர்களையும் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை. எமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மகிழ்ச்சியடையக்கூடிய நிகழ்த்திட்டமொன்றிற்காக நாம் கலந்துரையாடலை நடத்துகின்றோம். எனவே இந்த கலந்துரையாடல்களில் எவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மதிப்பளிக்காது குறைத்து மதிப்பிடுவார்களேயானால் எமது மதிப்பை அனைவருக்கும் எடுத்துக்காட்டுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். எமது பாராளுமன்ற குழுவுக்கும் நான் அதனையே கூறுகின்றேன். எமது அமைப்பாளர்களுக்கும் அதனையே கூறுகின்றேன். எனவே நாம் கூட்டணிகளை இலகுவாக அமைத்துவிடவில்லை என்பதை சிந்திக்க வேண்டும். ஏனென்றால் ஒரு கூட்டணியை அமைப்பதென்றால் அந்த அனைத்து தரப்பும் தத்தமது கௌரவத்தை பற்றி சிந்;திப்பர். அந்த அனைத்து விடயங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பர். எனவே எமது நாட்டின் எதிர்காலத்திற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாம் முன்னெடுக்க வேண்டிய நிகழ்ச்சித்திட்டத்தை பலப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

நான் 2015ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பட்ட ரீதியாக முன்வைத்த பல உறுதிமொழிகள் உள்ளன. இந்த நாட்டில் மக்களுக்கு வழங்கக்கூடிய ஜனநாயக்தையும் சுதந்திரத்தையும் நான் அதிகபட்சம் வழங்கியிருக்கிறேன். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி என்னிடம் எதிர்பார்க்கப்பட்ட விடயங்களை நான் அவ்வாறே நிறைவேற்றியிருக்கிறேன். நாட்டின் ஜனாதிபதி ஒருவர் மீது மிக மோசமாக தூற்றுவதற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பற்றி மிக மோசமான கேலிச்சித்திரங்களை சமூக ஊடகங்களில் பிரசுரிப்பதற்கும் சுதந்திரம் உள்ளது. அது பற்றி நான் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. நாம் செய்ய வேண்டியது சிறந்த மனிதர்களை உருவாக்குவதேயாகும். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் ஜனாதிபதி மாளிகையில் குடியிருக்கப்போவதில்லை என கூறினேன். நான் அப்படிச் செல்லவுமில்லை. நான் இன்றி எனது மனைவியோ அல்லது பிள்ளைகளோ விமானங்களை பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறினேன். என்றாலும் இந்த 05 வருட காலப்பகுதியில் எனது பிள்ளைகளோ, மனைவியோ நான் இன்றி அப்படிச் சென்றதில்லை. கொழும்பிலிருந்து பொலன்னறுவைக்கு சென்றதுமில்லை. பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு வந்ததுமில்லை. ஊழல், மோசடிக்கெதிராக நான் மேற்கொண்ட தீர்மானங்களை நீங்கள் அறவீர்கள். இந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நான் ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்தேன். இம்மாதம் 12ஆம் திகதி பிரதமர் அந்த ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டியிருந்தது. என்றாலும் அதற்கு 19ஆம் திகதி அவகாசம் கோரப்பட்டுள்ளது. எந்த அரசாங்கத்திலும் எந்த ஜனாதிபதியும் தனது அரசாங்கத்தின் பிரதமரை ஆணைக்குழுவிற்கு அனுப்பியது இல்லை. மத்திய வங்கி கொள்ளையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டியிருந்தது. இந்த நாட்டை கட்டியெயழுப்புவதிலுள்ள முக்கிய சவால் என்ன? அவை ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் என்பனவாகும். ஊழல், மோசடி என்ற அரசியல் கோஷங்கள் எமது நாட்டின் வரலாற்றின் தேர்தல் மேடைகளில் மாத்திரமே ஒலித்தன. என்றாலும் மிகப்பெரும் கோஷமாக ஊழல் பற்றிய கோஷம் 94 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் தேர்தலில் நின்றபோதே எழுந்தது. அவர் எல்லா இடங்களுக்கும் சென்று ஊழல், மோசடியை ஒழித்துக்கட்டுவதற்கு எனக்கு வாக்களியுங்கள் என்று கூறியது உங்களுக்கு நினைவிருக்கும். நானும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதிய தேர்தலில் அதனைக் கூறினேன். என்றாலும் எந்தவொரு அரசாங்கத்தாலும் ஊழலை நிறுத்த முடியவில்லை. அதற்கு காரணம் அரசியல்வாதிகளிடமுள்ள பாரிய குற்றங்களாகும். அரசியல்வாதிகள் ஊழலுக்கு தலைமை வகிக்கின்ற போது அதிகாரிகள் அதனையும் தாண்டிச் செல்வார்கள்.

எனவே இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் எமது நாடு என்ற உணர்வைப் பெற வேண்டும். இந்த நான்கரை வருட காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான ஒரு விடயம்தான் ரணில் விக்ரமசிங்கவும் அவரது அணியினரும் எமது சுதேச பாரம்பரியங்களை கவனத்திற்கொள்ளாது செயற்பட்டமையாகும். என்னுடன் ஏற்பட்ட முரண்பாட்டிற்கு அதுவே காரணம். எனவே நாம் எமது கலாசாரத்தை மதிக்கின்ற ஊழல், மோசடியற்ற சிறந்ததோர் சமூகத்தை உருவாக்க வேண்டும் சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான சமூகமொன்றை உருவாக்குவதற்காக நாம் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சிக்கு அர்ப்பணிப்புக்களை செய்து வருகிறோம். அதற்காகவே இந்த மாநாட்டை நடத்துகிறோம். அதற்காகவே மாவட்டங்கள் தோறும் கட்சி மாநாடுகளை நடத்தி வருகிறோம்.

எனவே எதிர்காலத்தில் அமைக்கப்படும் அரசாங்கத்தில் ஜனநாயகம், சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்துகின்ற ஊழல், மோசடியற்ற சமத்துவத்தை பேணுகின்ற விடயங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும். எமது கலாசாரம், தேசிய பாரம்பரியங்களில் மதிக்கப்படும். நாம் மட்டும் தான் வெளிநாட்டு தூதுவராலயங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை. அரசாங்கத்திலுள்ளவர்களும் எதிர்க்கட்சியிலுள்ளவர்களும் தூதுவராலயங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கின்றனர். என்ன பேசுகின்றார்கள் என்று எனக்குத் தெரியாது. தேர்தலொன்றை நெருங்கிய வேளையில் கலந்துரையாடலை மேற்கொள்வதுதான் பிரச்சினைக்குரியதாகும். இந்த நாட்டில் தேர்தல் நடவடிக்கையை பலப்படுத்துவதற்கும் தேர்தலை நடாத்துவதற்கும் எந்தவொரு தூதுவராலயத்துடனும் கலந்துரையாட வேண்டியதில்லை. எமக்கு அது தேவையற்றதாகும். நாம் அதைச் செய்யப்போவதில்லை. அது எமது கொள்கையாகும் நாம் கட்சி என்ற வகையில்  முன்னோக்கி செல்வோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை நாம் அனைவருக்கும் காட்டுவோம். எமது பாராளுமன்ற அணியினர், தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், எமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து மக்கள் நேய இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்தியொன்றை கட்டியெழுப்பி எமது பாரம்பரியங்களை முன்னிறுத்தி முன்னேறிச் செல்வோம். அதற்காக நாம் ஒன்றுபடுவோம். வெற்றி நிச்சயம். தோல்வி என்பது கிடையாது. நாம் வெற்றிபெறுவோம்.

நன்றி

Share This Post

NEW