கென்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

கென்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

இலங்கைக்கும் கென்யாவுக்குமிடையிலான நட்பை உறுதிப்படுத்தும் வகையில் இருநாடுகளுக்கிடையே புதிய ஒத்துழைப்புடனான பயணத்திற்கு வழிவகுக்கும் முகமாக கென்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (17) முற்பகல் நாடு திரும்பினார்.

ஐநா சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வின் விசேட அதிதியாக கலந்துகொள்ளுமாறு கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவினால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பின் பேரில் கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் கென்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன, மடகஸ்கார் ஜனாதிபதி என்ட்ரி ரஜொய்லினா (Andry Rajoelina) ஆகியோரின் தலைமையில் 58 நாடுகளைச் சேர்ந்த சுற்றாடல் அமைச்சர்களும் சுமார் 5,000 பிரதிநிதிகளுக்கும் மேற்பட்ட குழுவினரின் பங்குபற்றலில் மார்ச் 14ஆம் திகதி நைரோபி நகரில் ஐநா சுற்றாடல் ஒருங்கிணைப்பு தலைமையகத்தில் உலக சுற்றாடல் மாநாடு ஆரம்பமானதுடன், மூன்றாவது பேச்சாளராக ஜனாதிபதி அவர்கள் மாநாட்டில் தனது சிறப்புரையை ஆற்றினார்.

இதன்போது இலங்கையின் இணை அனுசரணையுடன் விசேட நான்கு யோசனைகளும் சுற்றாடல் மாநாட்டில் முன்வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

சுற்றாடல் அமைச்சர் என்ற வகையிலும் அரச தலைவர் என்ற வகையிலும் சுற்றாடலை பாதுகாப்பதற்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, கொள்கை ரீதியான பல முடிவுகளை மேற்கொண்ட தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆற்றிப்பட்ட உரை மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரினதும் கவனத்தை ஈர்த்ததுடன், ஜனாதிபதி அவர்களின் சுற்றாடல் நேய அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் அவர்களின் பாராட்டை பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஜனாதிபதி அவர்களுக்கும் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா அவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மார்ச் 15ஆம் திகதி அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதுடன், இருநாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் புதிய வழிமுறைகளினூடாக வலுப்படுத்திக் கொள்வதற்கும் சர்வதேச தரத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் இருநாட்டு தலைவர்களும் உறுதியளித்தனர்.

ஜனாதிபதி அவர்கள் தனது விஜயத்தின்போது நைரோபி நகரில் அமைந்துள்ள சர்வதேச விவசாய வன வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தின் தலைமையகத்திற்குச் சென்றிருந்ததுடன், அந்நாட்டில் வாழும் இலங்கையர்களையும் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கும் நேரத்தை ஒதுக்கியிருந்தார்.

கென்யாவுக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி அவர்களுக்கு பிரியாவிடை அளிப்பதற்காக அந்நாட்டு நீர் வழங்கல் அமைச்சர் சைமன் கிப்றோனோ செலுகி (Simon Kiprono Chelugui) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழாமினர் நைரோபி ஜொமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Share This Post

NEW