கைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு

கைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு

பாதுகாப்பு படையினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள 765 கிலோகிராமிற்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருட்கள் நாளை (01) முற்பகல் களனிய மகுறுவெலவில் அமைந்துள்ள சுரவீர களஞ்சிய வளாகத்தில் வைத்து அழித்தொழிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அதனை பார்வையிடுவதற்கு கௌரவ ஜனாதிபதி அவர்களும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன் இந்த நடவடிக்கைகளை பார்வையிட ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைமையில் சர்வதேச விதிமுறைகளுக்கமைவாக போதைப்பொருட்கள் அழித்தொழிக்கப்படவுள்ளது.

பொலிஸாரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் பொதுமக்கள் இடையே தோற்றுவித்திருக்கும் சர்ச்சைகளுக்கு தீர்வளிக்கும் முகமாக ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், கடந்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி 926 கிலோகிராம் கொகெயின் போதைப்பொருள் பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களே அவ்வாறு அழிக்கப்பட்டது. இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பகிரங்கமாக அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகள் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 03ஆம் திகதிக்கு பின்னர் சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பான சுற்றிவளைப்புகளை மேலும் தீவிரப்படுத்துவதுடன், போதைப்பொருட்களை இலங்கையிலிருந்து முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து செல்வதற்கு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Share This Post

NEW