திரிபீடகத்தை உலக நினைவுப் பட்டியலில் உள்ளடக்குவதற்கான நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

திரிபீடகத்தை உலக நினைவுப் பட்டியலில் உள்ளடக்குவதற்கான நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

திரிபீடகத்தை உலக நினைவுப் பட்டியலில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

இலங்கை பிக்கு பரம்பரையினரால் பேணிப் பாதுகாக்கப்பட்ட புத்த பகவானின் போதனைகளை உள்ளடக்கியுள்ள தேரவாத திரிபீடகம் ஜனாதிபதி அவர்களால் 2019 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி 2109/13 இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானி அறிக்கை மூலம் இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

2019 மார்ச் 23ஆம் திகதி கண்டி தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்குவதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கை இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதி ஹெனார் சிங்கரிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய திரிபீடகத்தை உலக நினைவுப் பட்டியலில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பத்தை தயாரிக்கும் நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கைப் பிரிவின் பிரதானி வண. பேராசிரியர் மெதகம்பிட்டிய விஜித தம்ம தேரரின் ஆலோசனைக்கமைய குழுவினரால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் மற்றும் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

நிபுணர் குழுவினால் கடந்த ஐந்து மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளையும் ஆவணப் பரிசோதனைகளையும் தொடர்ந்து ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டுள்ள திரிபீடகம் இருக்கும் இடத்தை இனங்கண்டு, அவற்றைப் பாதுகாப்பதற்கான யோசனைகளும் இந்த இடைக்கால அறிக்கையினூடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், இப்பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பொறுப்பு வாய்ந்த குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் இந்தப் புனிதப் பணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தேவையான தலையீடுகளை தான் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆளணிப் பிரதானி எச்.எம்.பி.ஹிட்டிசேகர, குழுவின் தலைவர் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எசல வீரக்கோன் ஆகியோரும் நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW