நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்கு மகாசங்கத்தினரின் அறிவுரை, ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய செயற்படுவது முக்கியமாகும் – ஜனாதிபதி

நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்கு மகாசங்கத்தினரின் அறிவுரை, ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய செயற்படுவது முக்கியமாகும் – ஜனாதிபதி

மன்னர் காலத்தை போன்று நாட்டில் நல்லாட்சியை கொண்டு செல்வதற்கு மகாசங்கத்தினரின் அறிவுரை, ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுவது மிக முக்கியம் என்பதை உணர்ந்து அன்றும் இன்றும் தான் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (03) பிற்பகல் உடரட்ட அமரபுர சங்க சபைக்கு சொந்தமான மகாவலி நதிக்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதனை  மண்டபத்தை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உடரட்ட அமரபுர சாசன ஜோதிகா சங்க சபைக்கு சொந்தமான இந்த இடத்தில் மூன்று மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 2006ஆம் ஆண்டு ஜனாதிபதி அவர்கள் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

நன்கொடையாளர்களின் நிதி மற்றும் இலங்கை இராணுவத்தினரின் மனிதவலு பங்களிப்புடன் இந்த கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், புத்த பெருமானால் மகாசங்கத்தினருக்கு போதிக்கப்பட்ட ஒழுக்கக் கோட்பாடுகள் பௌத்த சாசனத்தின் அடிப்படையாகவே காணப்பட்டது என தெரிவித்தார்.

தேவநம்பியதிஸ்ஸ மன்னர் ஆட்சி காலம் முதல் சிங்கள மன்னர்கள் பௌத்த மதத்தை நிலைநாட்டுவதற்கும் பௌத்த துறவர கிரியைகளை மேற்கொள்வதற்கும்  அரச அனுசரணை வழங்கியதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இலங்கை ஆயிரம் வருடத்திற்கும் மேலாக தர்ம இராஜ்ஜியமாக விளங்குவதற்கு அதுவே காரணமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆயிரக் கணக்கான வருடங்களாக மகாசங்கத்தினர் பின்தங்கிய கிராமங்களில் வசித்து தர்ம போதனைகளை மேற்கொண்டதன் காரணத்தினால் இலங்கை சமூக, பொருளாதார, ஆன்மீக வளர்ச்சியை அடைந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பிரித் பாராயணத்திற்கு மத்தியில் நினைவுப் பலகையை திரைநீக்கம் கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனைப் பார்வையிட்டார்.

உடரட்ட அமரபுரவின் சங்கநாயக்கர் சங்கைக்குரிய வத்தேகம தம்மாவாச தேரருக்கு சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரினால் நடாத்தப்பட்டதுடன், ஜனாதிபதி அவர்கள் சங்கநாயக்கருக்கு சான்றுப் பத்திரத்தை வழங்கி வைத்தார்.

சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்கதேரரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், சங்கைக்குரிய வத்தேகம தம்மாவாச நாயக்க தேரர், சங்கைக்குரிய மாதிபொல தம்மிக்க நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Share This Post

NEW