பன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்

பன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்

பொல்பித்திகம பிரிவின் பன்சியகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன தலைமையில் இன்று (16) முற்பகல் இடம்பெற்றது.

பொதுமக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 600 பொலிஸ் நிலையங்களை அமைக்கும் செயற்திட்டத்தில் இலங்கையில் 498 வது பொலிஸ் நிலையமாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இப்பிரதேச மக்கள் பொலிஸாரின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பெரும் பண செலவில் 30 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பொல்பித்திகம பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கலேவல, வாரியபொல மற்றும் கொக்கரெல்ல பொலிஸ் நிலையங்களுக்கோ செல்ல வேண்டியிருந்தது. இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக புதிய பொலிஸ் நிலையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாகப் பிரிவு, குற்றவியல் தடுப்பு பிரிவு, சிறிய குற்றங்களுக்கான முறைப்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் நிலையத்திற்கான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த புதிய பொலிஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய பொலிஸ் நிலையத்தை வடமேல் மாகாண ஆளுநர் திறந்து வைத்தார்.

பிரதேச மகாசங்கத்தினர் பலர் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்ததுடன், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க, குருணாகல் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்த்தன, நிக்கவரட்டிய பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்க ஆகியோரும் பொல்பித்திகம பிரதேச சபையின் தவிசாளர், பொல்பித்திகம பிரதேச செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஊடகப் பணிப்பாளர் தர்மஸ்ரீ பண்டார ஏக்கநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW