குற்றங்களுக்கான நியாயத்தை விரைவாகவும், வினைத்திறனாகவும் வழங்குவதற்கான விதந்துரை அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது

குற்றங்களுக்கான நியாயத்தை விரைவாகவும், வினைத்திறனாகவும் வழங்குவதற்கான விதந்துரை அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது

குற்றங்களுக்கான நியாயத்தை விரைவாகவும், வினைத்திறனாகவும் வழங்குவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சட்டபூர்வ செயற்பாடுகள் (ஊழல் எதிர்ப்பு) மற்றும் ஊடக செயற்பாடுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வை செயற்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா அவர்களால் ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீதி, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுக்களின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல், அவற்றின் உற்பத்தித்திறன் மற்றும் செயற்திறனை மதிப்பிடுதல், மேற்பார்வை மற்றும் தொடர்ச்சியான மீளாய்வு செய்வதற்காக சட்டபூர்வ செயற்பாடுகள் (ஊழல் எதிர்ப்பு) மற்றும் ஊடக செயற்பாடுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வை செயற்குழுவில் அஜித் மான்னப்பெரும தலைமையில் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பை வெற்றிகரமாக பேணுவதாயின் மிகவும் சரியான, நியாயமான நீதிமன்ற தீர்ப்புகள் தாமதமின்றி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்காக நீதித்துறையின் முன்னோடிகளாக செயற்படும் சட்ட மா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சமகால சமூக தேவைக்கேற்றவாறு குறித்த நிறுவனங்கள் செயற்படக்கூடிய சூழலை ஏற்படுத்துவதன் மூலம் செயற்திறனை இற்றைப்படுத்த வேண்டும் என்பதனால் அதற்கான தேவைகளை இனங்கண்டு பொருத்தமான விதந்துரைகளை சமர்ப்பிப்பது அறிக்கையின் நோக்கமாகும்.

நீதித்துறை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் நீதித்துறையின் மனித வளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்து நவீன தொழில்நுட்பத்துக்கமைய இற்றைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள, ராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, பிரதி அமைச்சர்களான கருணாரத்ன பரணவிதான, அஜித் பீ பெரேரா, துஸ்மந்த மித்ரபால, பா.உ எம்.ஏ.சுமந்திரன், சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட உள்ளிட்ட நீதித்துறை நிபுணர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This Post

NEW