தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுங்கள். – ஜனாதிபதி சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை.

தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுங்கள். –  ஜனாதிபதி சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை.

தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றாடல் பாதுகாப்பின் பெறுமதியை இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் இனங் கண்டுள்ளதாக இன்று (12) முற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறைவு வைபவத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனை தெரிவித்தார்.

கௌரவ ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் பல்வேறு அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்த முறையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டம் முதல் மாவட்ட மட்டம் வரையில் மக்களுக்கு அதிகளவிலான சேவையையும் நன்மைகளையும் பெற்றுக்கொடுப்பதே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். அரச நிறுவனங்களினால் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து, அரச பொறிமுறையின் மூலம் உயர்ந்த வினைத்திறனுடன் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டம் கடந்த 08ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமானதுடன், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெரும் மக்கள் ஆதரவு கிடைக்கப் பெறுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்று ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிறைவு வைபவத்திலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, மாவட்ட மக்களுக்கு 5000 தென்னங் கன்றுகளும், 5000 மர முந்திரிகை கன்றுகள் பகிர்ந்தளித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கான கடனுதவி, இராணுவ வீரர்களுக்கான வீட்டுக் கடனுதவி, பேண்தகு பாடசாலை அபிவிருத்தி செயற்திட்டத்தின் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளித்தல், விவசாய ஓய்வூதிய திட்டத்தை வழங்குதல், வணக்க ஸ்தலங்களுக்கான நிதியுதவி, மருத்துவமனை அபிவிருத்திக்கான உபகரணங்களை வழங்குதல், குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்திட்டத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் உள்ள இரு பிள்ளைகளை அவர்களது குடும்பங்களுடன் மீளிணைத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் இதன்போது இடம்பெற்றன.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சட்ட விரோத போதைப்பொருட்கள் கிழக்கு மாகாணத்தின் ஊடாகவே அதிகளவு நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக இனங் காணப்பட்டுள்ளதோடு, தேடுதல் நடவடிக்கைகளை பலப்படுத்துவதோடு அதனை தடுப்பதற்கு பிரதேச மக்களின் ஒத்துழைப்பினையும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டலில் தற்போது அந்த மாகாணங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் மிகுந்த வினைத்திறனோடு முன்னெடுக்கப்பட்டு வருதல் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.

அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் வியாழேந்திரன், ஜி.சிறிநேசன், எஸ்.யோகேஸ்வரன் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனிடையே இளைஞர்களின் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டும் “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டல் மத்திய நிலையம் இன்று ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து தொழில் வழிகாட்டி நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டர். ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் எரிக் வீரவர்தன உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மட்டக்களப்பு மாவட்ட தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறைவு வைபவத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 2019.04.12

இந்த செயற்திட்டத்தை நாங்கள் முதலில் புத்தளத்திலேயே ஆரம்பித்தோம். இங்கிருப்பதைப்போன்றே புத்தளத்திலும் பல்வேறு நிகழ்ச்சி்த்திட்டங்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து மாவட்ட செயலாளர் மிகவும் சிறப்பாக தெளிவுபடுத்தினார். அதேபோன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வும் இதுபற்றி தெளிவுபடுத்தினார். நான் விசேடமான சில விடயங்களை இங்கு குறிப்பிட வேண்டும். நான் இந்த வேலைத்திட்டங்களுக்காக தெரிவு செய்திருக்கும் மாவட்டங்களில் ஒரு சிறப்பு தன்மையுள்ளது. எனவே தான் இந்த மாவட்டங்களை நான் முதலில் தெரிவு செய்தேன். அடுத்ததாக இதேபோன்று பல்வேறு விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் திருகோணமலை மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த மாவட்டங்களில் அபிவிருத்தியில் பிரச்சினை உள்ளது. அதுதான் இந்த மாவட்டங்களுக்கு சேவை செய்வதற்கு அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இல்லை. எனவே இங்கு மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒரு தாமதம் இருந்தே வருகின்றது. நிதி ஒதுக்கீடுகளும் மீளச் செல்கின்றன. இந்த செயற்திட்டங்களின் ஊடாக அமைச்சர்கள், ஆளுநர்கள், அரச அதிகாரிகள் ஆகிய அனைவரும் கிராமங்களுக்கு உள்ளாகின்றார்கள்.
முழுநாடும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராமங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில தினங்களாக அத்தகைய 842 நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பௌதீக வள அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, கட்டிங்களை நிர்மாணித்தல் மட்டுமன்றி இந்த கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போதைப்பொருள் ஒழிப்பில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. போதைப்பொருள் பற்றி கூறுகின்றபோது இது ஒரு சட்டவிரோத செயலாகும். பல்வேறு வகையான நச்சு போதைப்பொருட்கள் கிழக்கு மாகாணத்தினூடாகவே கடல் மார்க்கமாக நாட்டினுள் கொண்டுவரப்படுகின்றன. இதனைத் தடுப்பதற்காக முப்படையினரும் பாரிய அர்ப்பணிப்பை செய்து வருகின்றனர். எனவே இந்த போதைப்பொருள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு எங்களுக்கு தேவைப்படுகிறது.

சிறுநீரக நோய் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய் என்று உங்களுக்குத் தெரியும். நாங்கள் சிறுநீரக நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பெருமளவு நிதியினை செலவிட்டு வருகிறோம். அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களிலிருந்து பொலன்னறுவை ஊடாக பயணிக்கின்ற போது சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பாரிய வைத்தியசாலை ஒன்றை நாங்கள் நிறுவி வருவதை நீங்கள் காணலாம். சிறுநீரக நோயினால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காகவே நாங்கள் அதனை உருவாக்கி வருகிறோம்.
அதேபோன்று இன்று காலையில் எமது அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா என்ற புதிய அலுவலகத்தை திறந்து வைத்தேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர்கள், யுவதிகள் பல பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு வேலையொன்றினை பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டலாகவே அந்த நிறுவனம் இயங்கி வருகின்றது.

இதேபோன்று சிறுவர்களை பாதுகாப்போம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தை பற்றியும் உங்களுக்கு தெரியும். எமது நாட்டின் சிறுவர்களை பாதுகாப்பதற்காக நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும். போதைப்பொருள் போன்ற மோசமான பழக்கங்களுக்கு பிள்ளைகள் அடிமையாகின்றார்கள். பிள்ளைகளுக்கு பலவிதமான அநீதிகள் இழைக்கப்படுகின்றன. எனவேதான் எமது பிள்ளைகளை பாதுகாப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள், கல்வித் திணைக்களம், சுகாதார உத்தியோகத்தர்கள் போன்று பல்வேறு பிரிவினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இதற்கான வழிகளை சீரமைத்துக்கொண்டு செல்லும் போது நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை கூறியிருக்கிறோம். இந்த வேலைத்திட்டங்களுக்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.

எமது சிங்கள, தமிழ் புத்தாண்டு பிறப்பதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு தான் நான் உங்களை இங்கு சந்திக்க வந்துள்ளேன். சிங்கள, தமிழ் மக்கள் இந்த புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இச்சமயத்தில் எமது முஸ்லிம் மக்களும் இதனுடன் இணைந்து கொள்கின்றார்கள். இன்று நான் உங்களுக்கு பரிசொன்றை வழங்கப்போகிறேன். சிங்கள, தமிழ் புத்தாண்டில் மரம் நடுவதற்கென்று நல்ல நேரம் ஒன்று இருக்கின்றது. எனவே தான் இவ்வாறான மரம் நடுவதற்கான நல்ல நேரம் இலேசாக வருவதில்லை. அதனால் இந்த நாட்டு மக்கள் அனைவரிடமும் அந்த புண்ணிய நேரத்தில் மரக்கன்றொன்றை நாட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இதேபோன்று தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பாக உங்களுக்கு தெரியும். இன்று நாங்கள் இங்கு வந்திருப்பவர்களுக்கு 5000 தென்னங் கன்றுகளையும் 5000 மர முந்திரிகை கன்றுகளையும் வழங்க இருக்கிறோம். அந்த நல்ல நேரத்தில் இம்மரக்கன்றுகளை நட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். ஒரு தென்னங்கன்று மரமாக வளர்ந்தால் அதன் பெறுமதி பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அதேபோன்று மர முந்திரிகையைப் பற்றியும் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

எனவே தான் இந்த மரக்கன்றுகளை நட்டு, நீர் ஊற்றி உரிய முறையில் பராமரித்து அதனுடைய முழு பலாபலன்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த காலகட்டத்தில் எமது நாட்டில் பெரும் வரட்சி நிலவி வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த காலத்தில் ஒரு சாதனையை படைத்திருக்கிறோம். இலங்கை வரலாற்றில் 2018, 19ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் பெருமளவு நெல் விளைச்சலை நாம் பெற்றிருக்கிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தின் பெருமளவு மக்கள் நெற் செய்கையில் ஈடுபடுகின்றார்கள். அந்த விவசாய சமூகத்திற்கு இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எமது மன்னர் கால வரலாற்றிற்கு பின்னர் நாம் இந்த வருடங்களிலேதான் கூடுதலான நெல் விளைச்சலை பெற்றிருக்கின்றோம். எனவே அது அரசாங்கத்தின் செயற்பாடல்ல. இது கடவுளின் ஆசிர்வாதத்தாலும் இயற்கையின் அருட்கொடையினாலும் நல்ல மழையினை பெற்றோம். அதனால் குளங்கள் நிறைந்து வழிந்தன. நீரோடைகளில் நன்றாக தண்ணீர் ஓடியது. இதற்கு முன்னர் மூன்று வருடங்கள் தொடர்ச்சியான வரட்சி எமது நாட்டில் நிலவியது. கஷ்டப்படும் எமது நாட்டு விவசாய மக்கள் நல்ல மழையின் காரணமாக நன்றாக விளைச்சலை மேற்கொண்டார்கள். சிலர் இது அரசாங்கத்தின் செயற்பாடு என்றும் சொல்கிறார்கள். அது முடியாத காரியம் அரசாங்கத்தினால் மழை பொழிய வைக்க முடியாது. அது இயற்கையின் அருட்கொடையாகும். விவசாய சமூகத்தின் கண்ணீர், கஷ்டம், வியர்வை ஆகியவற்றின் மூலம்தான் இந்த விளைச்சலை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

எனவே நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். நான் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக எந்தளவு பணி புரிகிறேன் என்று இங்கிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் மாதத்திற்கு ஒருமுறையேனும் பாராளுமன்றத்திலோ அமைச்சரவையிலோ சந்திக்கின்றோம். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்.

அவர்களைப்போன்று ஏனைய மாகாணங்களை சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளும் அந்த கூட்டங்களுக்கு வருகைதருகின்றனர். இதன் மூலம் பாரிய வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம்.

எதிர்வரும் காலங்களிலும் அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் அபிவிருத்திற்காக எங்களால் இயன்ற அனைத்தையும் நாங்கள் செய்வோம். மட்டக்களப்பு மாவட்டத்தை போன்றே திருகோணமலை மாவட்ட அபிவிருத்தியும் எமக்கு அவசியமானதாகும். அங்கு சுற்றுலாத்துறை சார்ந்த பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்ய முடியும். மீன்பிடித்துறையையும் முன்னேற்ற முடியும். எனவே இந்த அனைத்து துறைகளையும் நாம் மேம்படுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு கல்வித்துறையில் இருக்கின்ற பிரச்சினைகளை நிவர்த்திசெய்து மேலும் பல்வேறு அபிவிருத்திகளை பெற்றுக்கொடுப்போம். வைத்தியசாலை வசதிகளையும் சுகாதார வசதிகளையும் சிறந்த முறையில் பெற்றுக்கொடுப்போம். அதனால் தான் நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்று கூறுகிறேன்.

எனவே இந்த மக்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய இந்த சேவைகளும் அர்ப்பணிப்புகளும் என்றும் தொடர வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

Share This Post

NEW