“அஸ்கிரிய விகாரையும் 1818 முதலாவது சுதந்திர போராட்டமும்” நூல் வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

“அஸ்கிரிய விகாரையும் 1818 முதலாவது சுதந்திர போராட்டமும்” நூல் வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

பிரித்தானிய ஆட்சிக்கெதிராக 1818 இல் முன்னெடுக்கப்பட்ட முதலாவது சுதந்திரப் போராட்டத்தை உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ள “அஸ்கிரிய விகாரையும் 1818 முதலாவது சுதந்திரப் போராட்டமும்” என்ற நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்கேற்பில் இன்று (30) பிற்பகல் அஸ்கிரிய விகாரையில் இடம்பெற்றது.

முதலாவது சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அந்த சுதந்திர போராட்டத்திற்கு அஸ்கிரிய பீடத்தின் தேரர்களினால் வழங்கப்பட்ட பங்களிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தொகுக்கப்பட்ட இந்த நூலிற்கு சங்கைக்குரிய எட்டிபொல மஹிந்த தேரர், சங்கைக்குரிய கெட்டிகும்புரே தம்மாராம தேரர்,  சங்கைக்குரிய எஹெலேபொல மஹிந்த தேரர், கலாநிதி அஜித் தல்வத்த ஆகியோர் பங்களிப்பு செய்துள்ளனர்.

முதலாவது சுதந்திர போராட்டம் தொடர்பான வரலாற்று மூல நூல்களை அடிப்படையாகக்கொண்டு சுதந்திரப் போராட்டம் சம்பந்தமான அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளதுடன், இதனை தேசிய ரீதியாகவும் சாசனத்திற்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான முயற்சியாக குறிப்பிட முடியும்.

தீர்க்கமானதொரு சந்தர்ப்பத்தில் அஸ்கிரிய விகாரை உரிய தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன், ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக சுதேச சிந்தனையில் முதலில் செயற்பட்டதும் அப்போதைய அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரராக இருந்த சங்கைக்குரிய வாரியபொல ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரராவார்.

இன்று பிற்பகல் அஸ்கிரிய விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் முதலில் சமயக்கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன நாயக்க தேரரை சந்தித்து அவரது சுக துக்கங்களை கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டார். முதலாவது சுதந்திரப் போராட்டத்திலிருந்து இதுவரையில் எமது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்காகவும் இறைமைக்காகவும் உயிர்த்தியாகம் செய்த அனைத்து இராணுவ வீரர்களையும் நினைவுகூர்ந்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

நிகழ்வின் தலைமை உரை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன நாயக்க தேரரினால் நிகழ்த்தப்பட்டதுடன், பேராதனைப் பல்கலைக்கழத்தின் வரலாற்று கற்கைகள் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் மஹிந்த சோமதிலக நிகழ்வில் விசேட உரையாற்றினார்.

அஸ்கிரிய பீடத்தில் மகாநாயக்க தேரரினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

மல்வத்தை பீடத்தின் அநுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி அநுநாயக்க தேரர், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர், சங்கைக்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி அநுநாயக்க தேரர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ,  மத்திய மாகாண ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன், வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Share This Post

NEW