பொருளாதார மறுமலர்ச்சிக்காக சுற்றுலா துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்த திட்டம்

பொருளாதார மறுமலர்ச்சிக்காக சுற்றுலா துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்த திட்டம்
  • 2025ஆம் ஆண்டளவில் 10 மில்லியன் அ.டொ. வருமானம்..…
  • அச்சமின்றி தீர்மானங்களை மேற்கொள்ளத் தயார்……
  • ஜனாதிபதி வலியுறுத்தினார்

சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கான முறையான திட்டமொன்றினைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

2025ஆம் ஆண்டளவில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக வருமானத்தைப் பெறும் இலக்கினை அடைவதற்கான துரித பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய பிரதான துறையாக சுற்றாலா துறையை மேம்படுத்த வேண்டுமென சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

“இந்த துறையில் அனுபவமும் அர்ப்பணிப்புமிக்க திறமையான குழுவொன்று எமக்கு அவசியமாகும். அனைத்து படிமுறைகளிலும் துரித பெறுபேறுகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். நாட்டு மக்களின் நன்மைக்காக தேவையான அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ள நான் தயாராக உள்ளேன். மேற்கொள்ளும் அந்த அனைத்து தீர்மானங்களினதும் பெறுபேறுகளை நாட்டுக்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். குறித்த நோக்கத்துடனான வேலைத்திட்டங்கள் காணப்படுமாயின் எந்தவித சவால்களையும் வெற்றிகொள்ள நான் தயாராக உள்ளேன்.” என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சுற்றுலா துறையில் இனங்காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் துறையின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் குறித்து இதன்போது விரைவாக கலந்துரையாடப்பட்டது.

நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படல் வேண்டும். விமான நிலைய வசதிகள் முதல் அனைத்து சேவைகளும் மேம்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இடங்களை மேம்படுத்துதல் மற்றும் அவற்றை பிரபல்யப்படுத்துவதற்கான விரிவான பிரசார நடவடிக்கைகளின் தேவைப்பாடு குறித்தும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

உள்நாட்டு ஆயுர்வேத சிகிச்சை முறை சுற்றுலா பிரயாணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. கடலலை விளையாட்டுக்கள், இலங்கை தேயிலை உள்ளிட்ட இலங்கைக்கு உரித்தான விசேட, தனித்துவமான சுற்றுலா பிரயாணிகளைக் கவரக்கூடிய துறைகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

சுற்றுலா பயணிகளின் தேவைகள் இனங்காணப்பட்டு அதற்கமைய வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு சுற்றுலா பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு முறையான பொறிமுறையொன்று தேவையாகும் என்பதை ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார். இலங்கையின் பிரதிபிம்பத்தை உயர்த்துவதற்கும் இலங்கை சுற்றுலா செய்வதற்கு பொருத்தமான நாடாகும் என பிரபல்யப்படுத்துவதற்கும் வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் சுற்றுலா சபையினருக்கு பணிப்புரை வழங்கினார்.

ஸ்ரீ லங்கன் உள்ளிட்ட விமான சேவைகள் சிறந்த தரத்துடன் மேம்படுத்தப்படல் வேண்டும். 04 நிறுவனங்களாக செயற்பட்டுவரும் சுற்றுலா சபை ஒன்றிணைந்து சகல நிறுவனங்களும் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

நேரடி விமான சேவைகளை ஸ்தாபிப்பதன் மூலம் இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து நேரடி விமான சேவைகளை ஆரம்பித்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறை தொடர்பான பட்டப்படிப்பினை தொடரும் மாணவர்களுக்கு ஹோட்டல் பாடசாலையில் பயிற்சியளித்து ஹோட்டல் முகாமையாளர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலா பொலிஸ் சேவையை மீண்டும் ஸ்தாபிக்கவும் அத்துறைக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

சுற்றுலா துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சட்டதிட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் தேவையற்ற அனுமதி பெறும் நடவடிக்கைகள் அகற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.மொஹமட், சுற்றுலா மேம்பாடு பற்றிய இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.பெர்னாண்டோ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் துறைசார் நிறுவன தலைவர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Share This Post