கடந்த நான்கு வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் காரணமாக நாட்டின் வன அடர்த்தி அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

கடந்த நான்கு வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் காரணமாக நாட்டின் வன அடர்த்தி அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

கடந்த சுமார் ஐந்து தசாப்தங்களாக ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களினதும் ஆட்சிக் காலப்பகுதியில் நாட்டின் வன அடர்த்தி குறைவடைந்துள்ளதாகவும், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வன வளத்தை அதிகரிப்பதற்காக கடந்த நான்கு வருட காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் காரணமாக நாட்டின் வன அடர்த்தி குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாகவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இன்று (12) முற்பகல் ஹபரண, கல்ஓயா பாதுகாப்பு வனப் பகுதியில் இடம்பெற்ற “வனரோபா” தேசிய மர நடுகைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து துறைகளும் ஊழல், மோசடிகளினால் மலிந்து காணப்பட்ட சந்தர்ப்பத்தில் பெறுமதி வாய்ந்த இயற்கை வளமும் அதனால் அழிவுக்குள்ளானதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், கடந்த சில தசாப்த காலமாக இடம்பெற்ற பாரிய சுற்றாடல் அழிவுகளுக்கு அரசியல்வாதிகளும் மோசடி வர்த்தகர்களும் அதற்கு உதவிய அரச அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் நெறிப்படுத்தலில் 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் “புனருதய” தேசிய சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் வனப் பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து அனைத்து அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் “வனரோபா” தேசிய மர நடுகைத் திட்டம் ஒக்டோபர் மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் தேசிய மர நடுகை மாதத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான தனியார் துறையின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இலங்கை வங்கியின் 80ஆவது ஆண்டு நிறைவுடன் இணைந்ததாக அவ்வங்கியின் அனுசரணையின் கீழ் ஹபரண, கல்ஓயா பாதுகாப்பு வனப் பகுதியில் சுமார் 100 ஹெக்டயர் நிலப்பரப்பில் காடாக்கும் திட்டம் வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வனப் பாதுகாப்பு பிரதேசத்தில் அழிவுக்குள்ளான 100 ஹெக்டயர் பகுதியை உள்ளடக்கிய வகையில் 80,000 மரக் கன்றுகளை நடுவது இதன் இலக்காகும்.

இலங்கையின் வனப் பரம்பலை 2030 ஆண்டாகுகின்றபோது 32 சதவீதமாக அதிகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான சமவாயத்திற்கு ஏற்ப இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக இந்த ஆண்டும் பல்வேறு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மர நடுகை மாதத்தை ஆரம்பித்து வைக்கும் பாதுகாப்பு வனப் பிரதேசத்தில் ஜனாதிபதி அவர்களினால் மரக் கன்றொன்று நடப்பட்டது.

மாத்தளை, கண்டி, குருணாகல், நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 9,900 ஹெக்டயர் நிலப்பரப்பை வனப் பாதுகாப்பு பிரதேசமாகவும் 14,800 ஹெக்டயர் சதுப்பு நிலப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாகவும் வர்த்தமானி மூலம் அறிவிக்கவும் இதன்போது ஜனாதிபதி அவர்களினால் கைச்சாத்திடப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.ஏ.சி.வேரகொட, இலங்கை வங்கியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW