புனித தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரவச் செய்யும் செயற்பாடுகளில் கம்போடியாவுடன் இலங்கை இணைகிறது

புனித தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரவச் செய்யும் செயற்பாடுகளில் கம்போடியாவுடன் இலங்கை இணைகிறது

விரைவில் கம்போடியாவில் இலங்கை தூதரகம் அமைக்கப்படும்

தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான ஆன்மீக பிரச்சார நடவடிக்கைகளில் இலங்கையும் கம்போடியாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கம்போடியாவின் தலைநகராகிய நொம் பென்னில் அமைந்துள்ள Wat Langka Preah Kosomaram விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் இன்று (10) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த நடவடிக்கைகளுக்காக இருநாட்டு தூதரக நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

மேலும் கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக கம்போடியாவில் கொன்சுலர் ஒருவரையும் இலங்கையில் கம்போடிய கொன்சுலர் ஒருவரையும் நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பௌத்த மதத்தை அடிப்படையாகக்கொண்ட இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான தொடர்பினை பொருளாதார, வர்த்தக ரீதியாகவும் வலுவடையச் செய்வதுடன், தேரவாத பௌத்த தர்மத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதற்கான செயற்பாடுகளிலும் கரங்கோர்க்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அந்த செயற்பாடுகளுக்காக கம்போடிய மன்னர், பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இரு நாட்டு மகாசங்கத்தினரின் பங்களிப்பில் அச்செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்ததாகவும், கம்போடிய பிரதமருக்கு இலங்கைக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி  அவர்கள் தெரிவித்தார்.

பிரா குசுமாராம் விகாரையின் நாயக்க தேரராகிய வண. சம்தேவ் பிரா மகா அரியவம்ச கலாநிதி சாஓ ஷன்தோல் தேரர், இலங்கை ஜய ஸ்ரீ மகாபோதியின் மரக் கன்று ஒன்றும் இலங்கையிலிருக்கும் கௌதம புத்தபெருமானின் புனித சின்னங்களையும் கம்போடிய மக்களின் வழிபாட்டிற்காக அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி  அவர்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.

அதற்கமைய வண. கலாநிதி ஓமல்பே சோபித்த நாயக்க தேரரின் ஆலோசனைகளுக்கமைய எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜ தர்மாயதன விகாரையின் பூர்வீக உரிமையாக கருதப்படும் புனித சின்னத்தையும் ஜய ஸ்ரீ மகா போதியின் கிளையொன்றையும் ஜனாதிபதி அவர்களின் விஜயத்துடன் இணைந்ததாக கம்போடியாவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பிரா குசுமாராம் விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், புனித சின்னங்களை விகாரையில் பிரதிஸ்டை செய்து மலர் தூவி வழிபட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜய ஸ்ரீ மகா போதியின் மரக் கன்று ஒன்றையும் வழங்கிவைத்தார்.

கம்போடிய மகாசங்கத்தினர், கம்போடிய பிரதி பிரதமர் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விகாராதிபதி நாயக்க தேரரினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்று வழங்கப்பட்ட அதேவேளை, விகாராதிபதி நாயக்க தேரருக்கு ஜனாதிபதி அவர்கள் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

 

Share This Post

NEW