அமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு

அமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு

இலவசக் கல்வி பற்றிய பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் இந்த சந்தர்ப்பத்தில் அமரர் கன்னங்கராவின் இலவசக் கல்விக்கொள்கை மற்றும் கோட்பாடு என்ன என்பது பற்றி  சமூகத்திற்கு சரியான புரிந்துணர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் தேவை காணப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

இதற்காக அமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை தொடர்பான ஆய்வு நிறுவகமொன்றினை விரைவில் ஸ்தாபிக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

இலவசக் கல்வியின் தந்தையாக போற்றப்படும் இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சரான அமரர்  சி.டப்ளியு.டப்ளியு.கன்னங்கராவின் ஐம்பதாவது ஞாபகார்த்த நிகழ்வு இன்று (16) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் ஐம்பது வருடங்கள் கடந்த பின்னரும் அமரர் கன்னங்கரா நினைவு கூரப்படுவதற்கு இன்றைய அரசியலில் அத்தகைய உன்னத நபர்களின் தேவைப்பாடு அதிகமாக காணப்படுவதே காரணமாகும். 

சுமார் 40 வருடங்களாக இந்நாட்டு அரசியல் முறையற்ற நபர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இலவசக் கல்வி அபிவிருத்தி மற்றும் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் பேசப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரில் குறைந்தது 25 பேராவது அமரர் கன்னங்கராவை போன்றவர்களாக இருப்பின் எமது நாடு இன்னும் வெகுதூரம் முன்னேறி இருக்குமென குறிப்பிட்டார். 

இதனால் இலவசக் கல்வி தொடர்பில் பேசுவதைப் போன்றே சி.டப்ளியு.டப்ளியு.கன்னங்கரா போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வது புதிய அரசியல்வாதிகளுக்கு முக்கியமாகுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார். 

களனி பல்கலைக்கழகத்தின் தேசிய மின்கற்றல் வள மையம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கன்னங்கரா அவர்களால் 1945ஆம் ஆண்டில்  சமர்ப்பிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க இலவசக் கல்விச் சட்டம், எமது நாட்டிலும் வெளிநாட்டிலும் அமரர் கன்னங்கரா ஆற்றிய உரைகள் மற்றும் கடிதங்கள் அடங்கிய “இலவசக் கல்வியின் முன்னோடி” என்ற நூல் இதன்போது வெளியிடப்பட்டது. 

“கன்னங்கராவின் செயற்பணிகளும் எதிர்கால சவால்களும்” எனும் தொனிப்பொருளில் களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நிகழ்வில் பிரதான உரையாற்றினார்.

களனி பல்கலைக்கழகத்தின் சிங்கள கற்கைப் பிரிவின் பீடாதிபதி பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் பேராசிரியர் வண. மல்வானை சந்திரரத்ன நாயக்க தேரர், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பல்கலைக்கழக உபவேந்தர்கள், கலாநிதிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்களும் திருமதி அசித்தா பாலசூரிய உள்ளிட்ட அமரர் கன்னங்கராவின் பேரப்பிள்ளைகளும் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

 

Share This Post

NEW