களுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீரோட்டம் மற்றும் புதிய அம்பன நகரத்தை மக்களிடம் கையளித்தல் நாளை ஜனாதிபதி தலைமையில்

களுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீரோட்டம் மற்றும் புதிய அம்பன நகரத்தை மக்களிடம் கையளித்தல் நாளை ஜனாதிபதி தலைமையில்

21ஆம் நூற்றாண்டில் இலங்கையின் இந்நாட்டின் பாரிய நீர்ப்பாசன புரட்சியாக கருதப்படும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீரினை சுபவேளையில் திறந்துவிடும் மங்கள நீரோட்டம் மற்றும் புதிய அம்பன நகரத்தை அண்டியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களை மக்களிடம் கையளித்தல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நாளை (07) முற்பகல் இடம்பெறும்.

மாத்தளை மாவட்டத்தின் தும்பர பள்ளத்தாக்கில் நக்கில்ஸ் மலைத் தொடரின் களுபஹன பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் களுகங்கையை இடைமறித்து குறுக்காக லக்கல, பல்லேகம  பிரதேசத்தில் களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்தக் கொள்ளளவு 248 மில்லியன் கனமீற்றர்களாகும். அதாவது 200,880 ஏக்கர் அடிகளாகும். இந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணைக்கட்டு 618 மீற்றர் நீளத்தையும் 68 மீற்றர் உயரத்தையும் கொண்டுள்ளது. அணைக்கட்டின் உச்சியின் அகலம் 08 மீற்றர்களாகும். அதன் கற்களால் ஆன மற்றைய அணைக்கட்டு நீர்த்தேக்கத்திற்கு வலது பக்கத்தில் நிர்மாணிக்கப்படுவதுடன், அது 719 மீற்றர் நீளமும் 28 மீற்றர் உயரமும் உடையது. நீரேந்து பிரதேசம் 128 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்டுள்ளதுடன்,  நீர்த்தேக்கத்தின் பரப்பளவு 14.5 சதுர கிலோமீற்றர்களாகும்.

களுகங்கை பள்ளத்தாக்கு பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்படும் 3,000 குடும்பங்களுக்கு களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்கப்படுவதுடன், பழைய ஹத்தொட்ட கால்வாயினால் நீரைக் கொண்டு சென்று அபிவிருத்தி செய்யப்பட்ட சுமார் 2,000 ஏக்கர் அளவிலான காணியில் தொடர்ச்சியாக பயிர்ச்செய்வதற்கான நீர் வழங்கப்படும். அதன் பின்னர் எஞ்சும் நீர் மொரகஹகந்த நீர்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படும். இதற்காக 9 கிலோமீற்றர் நீளமான சுரங்க கால்வாய் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இக்கால்வாயினூடாக களுகங்கை நீர்த்தேக்கத்தில் நிரம்பும் நீரானது செக்கனுக்கு 35 கன மீற்றர் வேகத்தில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த சுரங்க கால்வாய் 25 அடி அகலத்தை கொண்டுள்ளது. இவ்வனைத்து நடவடிக்கைகளும் சூழல் நேயமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டதனால் மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்தின் மேல் எலஹெர கால்வாயினூடாக மஹாகனதராவ வரை கொண்டு செல்லப்படும் நீரின் அளவும் பழைய அம்பன் கங்கை, யோத கால்வாய் ஊடாக மின்னேரியா, கிரித்தலை, கவுடுல்ல, கந்தளாய் வரை கொண்டு செல்லப்படும் நீரின் அளவும் மேலும் அதிகரிப்பதனால் அப்பிரதேச விவசாயம் மேலும் வளர்ச்சியடையும். அது மட்டுமன்றி பழைய அம்பன் கங்கையின் ஊடாக போவத்தென்ன நீர்தேக்கத்திலிருந்து மொரகஹகந்த எலஹெர கால்வாய் பிரதேசத்திற்கு செல்லும் நீர் வடமேல் மாகாணத்தில் உள்ள 40,000 குடும்பங்களுக்கு வருடம் முழுவதும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும் ஏனைய குடிநீர் மற்றும் கைத்தொழிலுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கு ஏற்றவாறு களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் மொரகஹகந்த நீர்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படும்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், ரஜரட்ட மக்களுக்காக கண்ட நீண்டகால கனவினை நனவாக்கி, அவரது அளவற்ற அர்ப்பணிப்புடன் மகாவலி பாரிய அபிவிருத்தி திட்டத்தின் இறுதி செயற்திட்டமாக மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்தேக்கங்கள் நாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட புதிய அம்பன நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மருத்துவமனை, சமூர்த்தி வங்கி, கமநல சேவை நிலையம், பஸ் தரிப்பிடம் உள்ளிட்ட அரச கட்டிடங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வம் நாளை ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

Share This Post

NEW