ஜனாதிபதி நேபாளத்திலுள்ள இலங்கையர்களுடன் சந்திப்பு  

ஜனாதிபதி நேபாளத்திலுள்ள இலங்கையர்களுடன் சந்திப்பு   

நான்காவது பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் நேபாளத்தில் வசிக்கின்ற இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (02) காத்மண்டு நகரில் இடம்பெற்றது.
 
இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு இலங்கையர்களினால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடி விபரங்களை கேட்டறிந்தார்.
 
பிம்ஸ்டெக் அமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் தமது தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர்கள், இலங்கை தாய்நாட்டை சர்வதேச மட்டத்தில் உன்னத நிலைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்தனர்.
 
நேபாளத்திலுள்ள இலங்கைத் தொழில்வாண்மையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 

இதேநேரம் காத்மண்டு நகரிலுள்ள முதலாவது தேரவாத பௌத்த விகாரையான ஆனந்த குடி விகாரைக்கு ஜனாதிபதி அவர்கள் இன்று விஜயம் செய்தார்.
 
ஜனாதிபதி அவர்களை வரவேற்கும் முகமாக அங்கு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
விகாராதிபதி நேபாளத்தின் பிக்கு சங்க சபையின் தலைவர் சங்கைக்குரிய மைத்ரி மகாதேர தேரரை ஜனாதிபதி அவர்கள் சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். மகா சங்கத்தினர் பிரித் பாராயனம் செய்து ஜனாதிபதி அவர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கினர்.
 
ஆனந்த குடி பௌத்த விகாரை நேபாளத்தில் உள்ள முதலாவது தேரவாத பௌத்த விகாரையாகும் என்பதுடன், 1931ஆம் ஆண்டு இலங்கை நேபாள தேரவாத உறவுகள் இந்த விகாரையின் ஊடாகவே ஆரம்பிக்கப்பட்டது.
 
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தினால் சேதமடைந்த இந்த பௌத்த விகாரையை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரையின் பேரில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் 2016ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் அதன் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 
இலங்கை இராணுவத்தினால் இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இதற்காக 300 மில்லியன் இலங்கை ரூபா செலவாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்மாணப் பணிகள் புத்தசாசன அமைச்சு, தொல்பொருள் திணைக்களம் மற்றும் நேபாளத்திலுள்ள இலங்கை தூதுவராலயம் ஆகியவற்றினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிர்மாணப் பணிகளின் கண்காணிப்பு தொடர்பான கலந்துரையாடலிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார்.

 

 

 

 

Share This Post

NEW