ஐக்கிய நாடுகள் சபைக்கு புதிய முன்மொழிவு – ஜனாதிபதி ஊடக நிறுவன தலைவர்களிடம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபைக்கு புதிய முன்மொழிவு –  ஜனாதிபதி ஊடக நிறுவன தலைவர்களிடம் தெரிவிப்பு

 ஐக்கிய நாடுகள் சபைக்கு புதிய முன்மொழிவு

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட வேண்டும்.

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் எதிர்வரும் வரவுசெலவு திட்டத்தின் பின்னர் தீர்மானம்.

நெருக்கடி ஏற்படும் வகையில் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பான விசேட நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கமைய செயற்படுவேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் வருடந்த பொதுச்சபை கூட்டத்தொடரில் இம்மாதம் 25 ஆம் திகதி இலங்கை தொடர்பில் புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு முன்வைத்துள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் சலுகைகளை பெற்றுக்கொள்ளல், நாட்டின் சுயாதீன தன்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கும் முப்படையினரின் கெளரவத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுதல் ஆகியன தொடர்பான விடயங்கள் அந்த முன்மொழிவில் உள்ளடக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் எமது பாதுகாப்பு படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை போன்றே கடந்த யுத்த காலத்தில் இருதரப்பினரிடையேயும் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பில் இன்னும் தீர்க்கப்படாதுள்ள பல பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்கு அதனூடாக வாய்ப்பு ஏற்படுமென்றும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

இந்த முன்மொழிவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடமும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடமும் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (14) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களை கடத்துதல், கொலை செய்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் காணப்படும் ஒரு சில குறைபாடுகள் தொடர்பிலும் இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு எதிராக இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்படாமையினால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலை குறித்தும் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், 2015 ஆகஸ்ட் மாதம் முதல் முப்படை அதிகாரிகளும் ஒரு சில விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்பதுடன், போதுமான சாட்சியங்கள் காணப்படுமாயின் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதைவிடுத்து அனாவசியமாக அவர்களை சிறையில் தடுத்து வைத்திருப்பதனால் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இவ்விடயம் தொடர்பில் தான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் கடுமையான பணிப்புரைகளை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் நாட்டின் தேசியப் பாதுகாப்பு பலவீனமடையவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். யுத்தமொன்று இல்லாத நாட்டில் இராணுவத்தை பராமரிக்கின்றபோது மீளொழுங்குபடுத்துதல் இடம்பெற்ற போதும் எந்தவொரு பலவீனப்படுத்தும் நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்றும் இன்று எமது பாதுகாப்பு படையினருக்கு கடந்த காலத்தை பார்க்கிலும் உலகின் முக்கிய நாடுகளின் பயிற்சி வாய்ப்புகளும் ஒத்துழைப்புகளும் கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இன்றும் கூட தேசிய வரவு செலவுத் திட்டத்தில் அதிக தொகை பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்து சிலர் முன்வைத்துவரும் பல்வேறு கூற்றுக்கள் தொடர்பாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சில தனிப்பட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டு அக்கூற்றுக்களை அவர்கள் வெளியிட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

எண்ணெய் விலையுடன் தொடர்புடைய விலை சூத்திரம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், விலை சூத்திரத்தை தொடர்ந்தும் பேணுவதா அல்லது தற்போதிருப்பதை பார்க்கிலும் மக்களுக்கு சிறந்த நிலைமையை ஏற்படுத்துவதற்காக தேவையான திருத்தங்களை மேற்கொள்வதா என்பது பற்றி எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெறும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நீர்ப்பாசன துறையின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் குளங்களை புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் தொடர்பாகவும் ஊடக நிறுவனங்களுக்கு விளக்கமளி்த்தார். இன்று நெல்லுக்கு உயர்ந்த விலை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஊடக நிறுவனங்களின் போதுமான விளம்பரம் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நெல்லின் விலை அதிகரித்தபோதும் அரசியின் விலை அதிகரிப்பதற்கு இடமளிக்காது நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்

வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றுவதாக முல்லைதீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள். கொள்கை ரீதியாக எந்தவொரு மக்கள் பிரிவினருக்கும் நாட்டின் எந்தவொரு இடத்திலும் குடியேறும் உரிமை உள்ளது எனத் தெரிவித்தார். மாகாண பேதங்களின்றி அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடனும் ஐக்கியத்துடனும் வாழும் நாட்டை உருவாக்குவதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் பிரச்சினைகள் ஏற்படும் வகையில் குடியேற்றங்களை அமைப்பது அரச தலையீட்டுடன் இடம்பெறவில்லை என்றும் எதிர்காலங்களிலும் இவ்வாறு இடம்பெறப்போவதில்லை என்றும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இது தொடர்பாக விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு தான் நிபுணர் குழுவொன்றை அமைத்துள்ளதாகவும் அதுபற்றிய விசாரணை நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெறுவதாகவும் இது பற்றிய கருத்துக்களை எவருக்கும் முன்வைக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த குழுவின் அறிக்கையின் மூலம் இந்த ஒப்பந்தத்தில் நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் இருப்பதாக பரிந்துரை முன்வைக்கப்படுமானால் அதனை நீக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பாரதூரமான நிலைமைகள் குறித்து அறிக்கையிடப்படுமானால் அது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பேண்தகு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பது உள்ளிட்ட சுற்றாடல் பாதுகாப்பிற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவும் அவற்றிற்கு மக்களை இணைத்துக்கொள்ளும் விளம்பர செயற்திட்டங்களுக்கு உதவுமாறும் ஊடக நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்யரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 2019.09.14  (கொழும்பு ஜனாதிபதி மாளிகை)

அனைத்து ஊடக நிறுவனங்களினதும் தலைவர்களையும் ஊடகவியலாளர்களையும் கௌரவத்துடன் வரவேற்கிறேன். இந்த அழகிய காலைப்பொழுதில் உங்களைச் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சிடையகிறேன். எனது அழைப்பையேற்று வருகை தந்தமைக்காக எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் எனக்கும் ஜனாதிபதி அலுவலகத்திற்கும் அரசாங்கத்திற்கும் வழங்கிவரும் ஒத்துழைப்பை பாராட்டுகின்றேன். இன்று இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத்தொடரில் எமது பிரதிநிதிகளுடன் அடுத்த வாரம் நான் பங்கேற்கவுள்ளேன். புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தை சந்திக்கவுள்ளேன். அவர் நீண்ட அரசியல் அனுபவங்களை கொண்ட, சர்வதேச ரீதியாக பரந்த தெளிவையும் அறிவையும் பெற்றுள்ள முதிர்ச்சியான ஒருவராவார். எமக்கு ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினூடாக முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் பற்றியும் நீங்கள் அறிவீர்கள். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் இறுதி யுத்தத்தின் போதும் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் உள்ளன. இவற்றில் சில முறைப்பாடுகள் எல்.ரீ.ரீ.ஈ சார்பான சில அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு ஆதரவளிக்கும் வேறு சர்வதேச அமைப்புகளும் உள்ளன. எமது நாட்டில் யுத்தம் நிறைவடைந்து சுமார் 10 வருடங்களாகியிருக்கின்ற நிலையில் அதன் முதல் ஆறு வருட காலம் ஆட்சியிலிருந்த அரசாங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை பேரவையுடன் இலங்கை அரசாங்கம் சில காலம் ஒதுங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டு இருந்தன.

எமது அரசியல் எதிர்த்தரப்பினர் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிபெற்று நாட்டை பொறுப்பேற்றபோது எமக்கு பொருளாதார தடை விதிக்கப்படுவதற்கான ஆரம்ப கட்டத்தில் இருந்தோம். இதற்கு சிறந்த சான்றாக ஐரோப்பிய சங்கத்தின் மூலம் மீன் ஏற்றுமதிக்கான தடை, ஜீ. எஸ். பி. சலுகை ஆகியவற்றை நீக்கியமையை குறிப்பிட முடியும். ஒரு நாட்டுக்கு எதிராக பொருளாதார தடையை ஏற்படுத்தும் ஆரம்ப சந்தர்ப்பம் இதுவாகும். இதனாலேயே முன்னாள் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தல் ஒன்றிற்கு சென்றார். ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினூடாகவும்  சர்வதேச சக்திகள் மற்றும் முக்கிய நாடுகளிடமிருந்து எழுந்த சவால்களுக்கு முகங்கொடுப்பதில் ஏற்பட்ட கஷ்டத்தின் காரணமாக தேர்தலுக்கு சென்றார் என நான் நம்புகிறேன். நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நிலைமையை மாற்றியமைத்தோம். விலகியிருந்த ஐக்கிய நாடுகள் சபையை மிகவும் நட்பு ரீதியான நிலைமைக்கு கொண்டு வந்தோம். மனித உரிமைகள் ஆணைக்குழு பெருமளவு எம்மை விட்டும் விலகியிருந்தது. இலங்கையின் ஐக்கிய நாடுகள் அலுலகத்திற்கு முன்னால் அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தையும் அப்போதைய அரச தலைவராக இருந்தவர் சென்று அவருக்கு இளநீர் வழங்கியதையும் நவனீதன்பி்ள்ளை மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திலுள்ள முன்னாள் பிரதியமைச்சர் ஒருவர் முன்வைத்த கூற்று தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு வாய்ந்தவர்கள் அறிந்திருந்தனர். என்றாலும் எமது அராசங்கம் அதிகாரத்திற்கு வந்து ஐக்கிய நாடுகள் சபையுடன் சி்றந்த நட்புறவை கட்டியெழுப்பியுள்ளது. 2015ஆம் ஆண்டு நான் ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றிருந்த வேளையில் முன்னாள் செயலாளர் பான்கி மூன் என்னை மகிழ்ச்சியுடன் சந்தித்து சுமூகமாக கலந்துரையாடினார். எமக்கு மத்தியில் ஒரு நல்ல பிணைப்பு உருவானது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனும் இதே போன்றதொரு உறவு கட்டியெழுப்பப்பட்டது. முன்னாள் ஆணையாளர் இளவரசர் ஹூஷைனுடன் நாம் சிறந்ததோர் பரஸ்பர உறவை கட்டியெழுப்பியிருந்தோம். எமக்கு மத்தியில் மிகச் சிறந்த நட்புறவை ஏற்படுத்தியிருந்தோம். எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இரு தரப்பினரும் மிகச் சிறந்த புரிதலுடன் செயற்பட வேண்டும் என்று உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு மோசமான நிலையினை நாம் நல்ல பக்கத்திற்கு மாற்றினோம்.

தற்போது யுத்தத்துடன் தொடர்புபட்ட வகையில் சர்வதேசத்தில் எஞ்சியிருக்கும் விடயங்கள் எவை? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினூடாக எமக்கு முன்வைக்கப்பட்டிருந்த முன்மொழிவுடன் தொடர்புடைய சில செயன்முறைகளுக்கு பிரவேசிக்கின்றபோது எமக்கு தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றின்போது எமது நாட்டின் சுயாதீனத் தன்மை, தேசிய பாதுகாப்பு, முப்படையினரின் கௌரவம் ஆகியவற்றை பாதுகாத்து நாம் செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஐக்கிய நாடுகள் சபை இன்று கட்டுப்பாடான, ஒழுக்கப் பண்பாட்டையுடைய இராணுவம் என்று கூறி எமது இராணுவத்தினரை  அங்கீகரித்துள்ளது. அந்த வகையில் அமைதி காக்கும் படையில் எமது இராணுவத்தினரை ஆட்சேர்ப்பு செய்துள்ளது. எமது இராணுவம் ஐக்கிய நாடுகள் சபையினால் புறக்கணிக்கப்பட்டிருந்தால் ஒருபோதும் அமைதி காக்கும் படைக்கு எமது இராணுவத்தினரை ஆட்சேர்ப்பு செய்திருக்காது. வருடாந்தம் அமைதி காக்கும் படைக்கு நாம் இராணுவத்தினரை அனுப்பி வருகிறோம்.

எனினும் எமது பாதுகாப்பு படை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் எமக்கு சாதகமானதல்ல. அதனை சாதகமான நிலைக்கு கொண்டு வருவது எப்படி என்பது எம் முன்னால் இருக்கும் பிரச்சினையாகும்.  எப்படி அனைவருக்கும் பிரச்சினைகள் இல்லாத வகையில் அதனை தீர்த்துக் கொள்வது. எமக்கு எதிராக அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதைப் மறு  பக்கத்தில் இலங்கைத் தமிழ் சமூகத்திலுள்ள குடும்பங்களின் சிறையிலுள்ள உறவினர்கள் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புடன் தொடர்புபட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக சிறை தண்டனை அனுபவிப்பவர்களையும் இன்னும் வழக்குத் தொடரப்படாமல் உள்ளவர்களையும் விடுவிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த இரு தரப்பிலும் எஞ்சியுள்ள பிரச்சினைகளை நாம் எப்படி சுமுகமாக தீர்த்துக் கொள்வது என்பது பற்றி மாநாட்டில் 25ஆம் திகதி ஆற்றவுள்ள எனது உரையின்போது விசேட முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க நான் எதிர்பார்த்துள்ளேன். அது என்ன என்பது பற்றி இப்போது கூறப்போவதில்லை. அந்த முன்மொழிவை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும் எழுத்து மூலம் சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன். புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டதும் இலங்கை அரசாங்கம் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி எமக்கு மகிழ்ச்சியானதொரு செய்தியை அவர் வழங்கினார். தற்போது செயற்படும் விதம், தேசிய நல்லிணக்கம் தொடர்பில் எமக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைக்காது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் சில விடயங்கள் தொடர்பில் அவர் சாதகமாக கருத்து வெளியிட்டுள்ளார். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இங்கு குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு பின்னால் இன்னும் சில விடயங்களும் உள்ளன.  எமது நாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் சில விசாரணைகள் உள்ளன. லசந்த விக்ரமதுங்க படுகொலை, கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டமை, 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை, ஊடகவியலாளர் எக்னலிகொட காணாமல் போனமை போன்ற பல விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. என்றாலும் நேற்று நான் கூட்டிய விசேட அமைச்சரவை கூட்டத்தில் பொலிஸ்மா அதிபரிடமிருந்து புதிதாக பெற்றுக்கொண்ட அறிக்கையின் படி நான் அமைச்சரவைக்கு விடயங்களை முன்வைத்தேன். நாட்டு மக்கள் குறிப்பாக ஊடகவியலாளர்கள் என்ற வகையில் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் படுகொலை, தாக்குதல்கள் போன்ற விடயங்கள் குறித்து எவருக்கும் இதுவரையில் வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. விசாரணைகள் மேற்கொள்ளபடுகின்றன. பிணைகள் வழங்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை பணிப்பாளர் ஐந்து மாதங்கள் தடுத்து வைத்திருந்து விடுதலை செய்யப்பட்டார். அவருக்கெதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. கடற்படையின் தசநாயக்க என்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் நீண்ட காலமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் வழக்குகள் இன்றி விடுதலை செய்யப்பட்டார்.

அண்மையில் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி தொடர்பான விடயங்கள் ஊடகங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு இளைஞர்களை கடத்தி கொலை செய்த குழுவிலுள்ள ஒருவருக்கு நாட்டைவிட்டு வெளியேறிச் செல்வதற்கு பாதுகாப்பளித்தார் என்பதாகும். இந்த 11 இளைஞர்களையும் கடத்திச் சென்று கொலை செய்தவர்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது. அவர்களை தடுப்புக் காவலில் வைத்த பின்னர் பிணையில் விடுவித்தது. ஒருவர் மட்டும் தடுத்து வைக்கப்பட்டு மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு வழக்குகள் இல்லை. குற்றப் பத்திரிகை வழங்கப்படவும் இல்லை.

சுமார் 3 நாட்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் சட்டாமா அதிபருக்கும் நான் கடுமையான பணிப்புரையை வழங்கினேன். ஏன் இந்த இளைஞர்களை கடத்திச் சென்று கொலை செய்தவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று கேட்டேன். பிணையில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருக்கின்றார்கள். ஒருவர் மட்டுமே உள்ளே இருக்கின்றார். அவர்களுக்கு வழக்கின்றி குற்றப் பத்திரிகை வழங்கப்படாது. இத்தகைய கொலை குற்றத்துடன் தொடர்புபட்டவர்கள் எனப்படும் ஒருவருக்கு நாட்டைவிட்டு வெளியேறிச் செல்ல உதவினார் எனக் கூறி பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானியை கைது செய்வதற்கு நீதிமன்றத்திற்கு பத்திரம் அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானியிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை. இது போன்ற விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு சரியான தகவல்கள் கிடைக்காத காரணத்தினால் ஊடகங்களின் மூலம் சில செய்திகள் வெளியிடப்படுவதன் மூலம் குழப்பங்கள் ஏற்படுகின்றன. சாதாரணமாக இன்றைய நாட்களில் நாட்டு மக்கள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி தான் இந்த இளைஞர்களின் கொலையுடன் தொடர்புபட்டிருப்பாரென எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கருத்தின்படி அந்த கொலைகளுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியே செல்ல ஒத்துழைத்தார் என்பதே அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும். அதுபற்றி அவரிடமேனும் வாக்குமூலம் பெறப்படவில்லை. அதேபோன்று 2015ஆம் ஆண்டு 08ஆம் மாதத்திலிருந்து இந்த முப்படை அதிகாரிகளில் ஒரு சிலர் விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு எதிராகவேனும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலைமை தொடர்பாக நான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் சட்டமா அதிபருக்கும் ஏன் இவ்வாறு நடக்கின்றது என்று கடுமையாக கேட்டேன். இவற்றுக்கு வழக்குகளை தாக்கல் செய்யுங்கள். அப்போது சிரேஷ்ட அதிகாரிகள் முதல் நீண்ட காலம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் உள்ளவர்கள் வெளியில் விடப்படுவர். அப்போது இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படும். எனவே இந்த நிலைமையை சாதாரண பொதுமக்கள் பிழையாக விளங்கிக் கொள்கின்றனர். அதேபோன்று ஊடகங்களுக்கு கிடைக்கும் தகவல்களை கொண்டு அவர்கள் அறிக்கையிடுகின்றனர். இதன் மூலம் மக்கள் பிழையாக வழி நடத்தப்படுகின்றனர். சர்வதேச ரீதியாக பிழையான கருத்துக்கள் உருவாகின்றன. எனவே இவற்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு நான் கூறினேன். வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருப்பது பிரச்சினையாகும். இப்படியான பலவீனங்கள் இந்த துறைகளில் உள்ளன. அதுபோன்று சிறியவர் பெரியவர் என்ற பேதமின்றி வழக்கு தாக்கல் செய்ய முடியவில்லையானால் ஒருவரை கைது செய்வதும் பிழையானது. கைது செய்து நீண்ட காலமாக உள்ளே தடுத்து வைத்திருந்து வெளியில் விடுவதும் தவறானது. குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென்பதே எனது தேவையாகும். தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் பணியாகும். லசந்த விக்ரமதுங்க படுகொலை, கீத் நொயார் இந்த பட்டியலை நீங்கள் அறிவீர்கள். 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகளில் அவர்களது குடும்பங்களிலிருந்து கப்பம் பெறுவதற்காகவே கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது பாரதூரமான குற்றமாகும்.  இக்குற்றத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். எனவே இது தொடர்பில் நான் விடயங்களை முன் வைத்திருக்கிறேன். ஏனென்றால் இந்த விடயமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எமக்கு எதிராக உள்ள விடயமாகும்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்பு நிலைமை எந்த வகையிலும் பலவீனப்படவில்லை. எங்குமே இராணுவத்தினர் பலவீனப்படவில்லை. இராணுவத்தினருக்கு புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன, பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கடந்த காலத்தில் விசேடமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் ஏற்படுத்திக்கொண்ட நட்புறவின் காரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சீன, இந்தியா, பாகிஸ்தான் போன்ற உலகின் பலமிக்க நாடுகளில் எமது இராணுவத்தினருக்கு பயிற்சி வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எமக்கு வழங்கப்படும் உதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் எமக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கப்பல் ஒன்றை கையேற்க எமது கடற்படை தளபதி அமெரிக்காவுக்கு சென்றார். அவர் அந்த கப்பலை பெற்றுக்கொண்டார் என நான் நினைக்கின்றேன். அதேபோன்று எமது பாதுகாப்பு துறையினருக்கு தேவையான யுத்த கருவிகள் அன்பளிப்பாக பல நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.

ஏற்கனவே காணப்பட்ட பல இராணுவ முகாம்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக. அச்சு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. எல்ரீரீஈ. யுத்த காலத்தில் இருந்த அச்சுறுத்தலான நிலையை நாம் அறிவோம். அந்த யுத்தம் எவ்வளவு பயங்கரமானதென்பதையும் நாம் அறிவோம். எமது பாதுகாப்பு படையினரால் உலகின் பிரபல பயங்கரவாத இயக்கத்தினரே தோல்வியடைச் செய்யப்பட்டனர். அவர்களது கொரில்லா குழுவினருக்கும் எமது பாதுகாப்பு படையினருக்குமிடையே யுத்தம் தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் எமது பாதுகாப்பு படையினர் பல இடங்களில் தற்காலிக முகாம்களை அமைத்தனர். தற்காலிக முகாம்கள் அமைத்து யுத்தம் இடம்பெறுவது நாட்டில் ஒரு பொதுவான நிகழ்வாகும். யுத்தம் நிறைவடைந்து பூரண அமைதி ஏற்பட்டதன் பின்னர் அந்த தற்காலிக முகாம்களும் நடவடிக்கைகளும் மாற்றமடைந்து யதார்த்த நிலைமை ஏற்படும்.

யுத்தம் நீண்டகால வரலாற்றை கொண்டது. 1976ல் இடம்பெற்ற அல்பிரட் துரையப்பாவின் கொலை சம்பவமே பிரபாகரனின் முதலாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாகும். பிரபாகரனே அந்த துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டார். ஆயினும் 1983 அளவிலேயே யுத்த நிலைமை ஏற்பட்டது.  1983 ஆம் ஆண்டு முதல் எமது படையினர் தாக்குதல் நடத்தியவாறு முன்னோக்கி செல்லும்போது பல இடங்களில் முகாம்களை அமைத்தனர். அரச காணிகளிலும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் பொதுமக்களின் தனியார் காணிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டன. பாடசாலைகளில் கூட முகாம்கள் அமைக்கப்பட்டன. வைத்தியசாலைகள் மாத்திரமே மிகுதியாகியிருந்தன. இந்த நிலைமைக்கு அப்போதிருந்த யுத்த சூழ்நிலையே காரணமாகும்.

அதேபோன்று எமது வரவுசெலவு திட்டத்தில் பெருந்தொகையான நிதி பாதுகாப்பு அமைச்சிற்கே ஒதுக்கப்படுகின்றது. இவ்வருடம் எனது ஞாபகத்தில் உள்ளவாறு அது 230 பில்லியன்களுக்கும் அதிகமாகும். யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களின் பின்னரும் பாதுகாப்பு அமைச்சிற்கே அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது. யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் ஆனபோதிலும் யுத்த சூழ்நிலையற்ற நாட்டில் இராணுவம் மறுசீரமைக்கப்படும். அது சாதாரண ஒரு நிலையாகும். மறுசீரமைக்கப்பட்ட போதிலும் இராணுவம் பலவீனமடைவதில்லை. இன்றும் இராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். விசேடமாக விமானப்படை, கடற்படை ஆகியவற்றை நாம் பலப்படுத்துகின்றோம். யுத்தம் இடம்பெறாதபோதிலும் தொழில்நுட்ப ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சர்வதேச தொடர்புகளிலும் விமான மற்றும் கப்பற் படைகள் பலப்படுத்தப்படுவது அவசியமாகும் ஏனெனில் விமான ஓட்டிகளை பயற்றுவித்தால் தேவையான சந்தர்ப்பங்களில் சேவையில் ஈடுபடுத்த முடியும். கப்பற் படையினருக்கு வழங்கப்படும் பயிற்சிகளாலும் அவர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம்.

அவ்வாறே விமானங்கள் மற்றும் கப்பற் தொழில்நுட்பம் தொடர்பில் பயிற்சிபெற்று சான்றிதழ்களை பெற்று உலக நாடுகளில் உரிய வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். எமது படைகளில் பணியாற்றுவதற்கு மேலதிகமாக பல்வேறு சர்வதேச நாடுகளிலும் சேவையாற்ற முடியும். இன்றும் விமானப் படையினர் பயிற்சிகளை பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

நேபாள சுற்றுப் பயணத்தின்போது எமது விமானப் படையில் பணிபுரிந்தவர்கள் அங்கு விமான ஓட்டிகளாக தற்போது பணியாற்றுவதை என்னால் அறிய முடிந்தது. எமது விமானப் படையினரும் கப்பற் படையினரும் மிகவும் பலமாக உள்ளனர். அதேபோல் இராணுவமும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவம் சிறிதளவு கூட பலவீனமடையவில்லை.

நான் உங்களோடு சுமூகமாகவே உரையாற்றுகின்றேன். யுத்த காலத்திலும் ஆரம்ப முதலே ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இராணுவ தளபதிகளுக்கிடையே சுமூக உறவு, நட்புறவு காணப்பட்டதைப்போன்று பிரச்சினைகளும் காணப்பட்டன. அவை இரகசியமல்ல. அவ்வாறான நிலை தற்போதும் காணப்படுகின்றது. ஓய்வுபெற்ற இராணுவத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெளியிட்ட சில புத்தகங்கள் காணப்படுகின்றன. அவற்றை வாசிக்கும்போது அந்த புத்தகத்தை எழுதியவரே மிகப் பெரிய வீரர். ஒரு மாதத்திற்கு முன்னர் தற்போது உயிருடன் உள்ள, யுத்தத்துடன் தொடர்புடைய, 80களில் பதவியில் இருந்த இராணுவ தளபதிகளை கலந்துரையாடலுக்கு அழைத்தேன். எமது நாட்டில் இன்னும் 100 வருடங்களுக்கு பின்னர் கடந்த கால யுத்தம் தொடர்பான உண்மை நிலையை அறிந்துகொள்வதற்கு உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதுவும் காணப்படுகின்றதாவென நான் அவர்களிடம் விசாரித்தேன். அவ்வாறு எதுவும் இல்லை. யுத்தம் ஏன் ஏற்பட்டது. அதன் பின்னணி என்ன? எல்ரீரீஈ. இயக்கத்தினர் யார்? 80 களில் இருந்து காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்பட்ட ஜயசிக்குறு போன்ற இராணுவ நடவடிக்கைகள், நாம் வெற்றிகொண்ட சந்தர்ப்பங்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்கள், இந்திய இராணுவத்தின் வருகை இவை தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் வெளியிடப்பட்ட எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கைகளும் எங்கும் இல்லை. தற்போது வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இது தொடர்பாக பேசுவார்கள். யுத்தம் செய்தவர்கள் இறந்ததன் பின்னர் அந்த உரையாடல்களும் இல்லாது போகும். ஆகையினால் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் முப்படை தளபதிகளையும் அழைத்து இவ்விடயம் தொடர்பில் உரையாடி இதற்கான தகவல்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும்படி கூறினேன். இதற்காக பாதுகாப்பு அமைச்சில் ஒரு சிறிய பிரிவொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியன இந்த நடவடிக்கையுடன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதனை பக்கச்சார்பின்றி நடுநிலையோடு மேற்கொள்ள வேண்டும். யுத்தத்திற்கான பின்னணியின் ஆரம்பம், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட வெற்றி தோல்விகள் ஆகியன உள்ளடக்கப்பட்ட புத்தகம் ஒன்றை தயாரிக்க நாம் எதிர்பார்க்கின்றோம். அது எமது வரலாற்றிற்கு மிக முக்கியமாகும். சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கவும் அவசியமாகும். ஒரு சில நாட்களிலோ மாதங்களிலோ அதனை நிறைவு செய்துவிட முடியாது. குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம். ஆயினும் நான் அந்த நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்துள்ளேன். சில வேளைகளில் எவ்வளவு வயதானபோதிலும் சிலரது குருர எண்ணங்கள் அவரை விட்டுப் போவதில்லை. குரூரம், கோபம் அரசியல்வாதிகளுக்கிடையிலும் காணப்படுகின்றது. திடீரென நித்திரையில் இருந்து விழித்துக்கொண்டால் போல் சிலர் ஏதேனும் கூறுவார்கள். பாதுகாப்பு, இராணுவம் போன்ற விடயங்களுடன் சம்பந்தப்பட்ட கருத்துக்களை வெளியிடுவார். நீங்களும் செய்திகள் தேவை என்பதால் அவற்றை எல்லாம் பிரசுரிப்பீர்கள்.

பெற்றோலிய விலை சூத்திரம் தொடர்பாக பல விமர்சனங்கள முன்வைக்கப்படுகின்றன. உலகின் பல நாடுகளில் இந்த விலை சூத்திரத்திற்கு அமையவே பெற்றோலிய விலை ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றனவென அரசாங்கம் தீர்மானித்தே இதனை நடைமுறைப்படுத்தியது. ஆயினும் இதற்கமைவாக விலை ஒருபோதும் வீழ்ச்சியடையாது அதிகரித்துக்கொண்டே செல்லுகின்றது. எமது துரதிஸ்டம் இந்த விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து விலை அதிகரித்தே செல்கின்றது. இதனால் பொதுமக்கள் குறைகூறுகின்றனர். நேற்றும் ஒரு குழுவினர் என்னை சந்தித்து பஸ் உரிமையாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்கள். உண்மையில் இவ்விடயம் தொடர்பில் பாரிய விமர்சனம் காணப்படுகின்றது. இந்த விலை சூத்திரத்தை தொடர்ந்தும் நாம் பேணுவதா திருத்தம் செய்வதா எனவும் மக்களுக்கு உகந்த நிலைமையை ஏற்படுத்துவதற்கு எதிர்வரும் வரவுசெலவு திட்ட முன்மொழிவின்போது தீர்மானிக்க நான் எதிர்பார்க்கின்றேன்.

ஏனைய அபிவிருத்தி தொடர்பில் கருதுகையில் மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டம் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெறுகின்றன. வடமேல் கால்வாய், மினிப்பே கால்வாய் மற்றும் வட மத்திய கால்வாய் திட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இவற்றுடன் தொடர்புடைய 2400 குளங்களின் புனரமைப்பும் இடம்பெற்று வருகின்றது. வட மாகாண குளங்களை புனரமைத்தல் உள்ளிட்ட பல செயற்திட்டங்கள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் இந்த வருடத்தின் காலநிலை. வானிலை நிலைமைகள் கடந்த வருடத்தைபோல் மோசமடையவில்லை. கடந்த மூன்று வருடத்தைவிட இவ்வருடம் ஓரளவு அதிக மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. ஆகையினால் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதை எம்மால் நிறுத்த முடிந்தது. தற்போது நெல்லுக்கு சிறந்த விலை காணப்படுகின்றது. ஆனால் அது தொடர்பில் ஊடகங்களோ வேறு யாருமோ பேசுவதேயில்லை. நெல்லின் விலை வீழ்ச்சியடைந்தால் மாத்திரமே நெல் ஆலைகள் செயற்படும் விதம், நெல் ஆலை மாப்பியா, தனியார் துறையினரின் செயற்பாடுகள் பற்றி ஊடகங்களில் குறிப்பிடுவீர்கள். தற்போது ஈரமான நாட்டரிசி நெல் மூட்டை ஒன்று 40 ரூபாவைவிட அதிகமாகும். கீரி சம்பா 60 ரூபாவிற்கும் அதிகமாகும். நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு இன்னும் ஒரு நெல்கூட வந்து சேரவில்லை. வரவும் போவதில்லை தனியார் துறையினர் மிகுந்த போட்டித்தன்மையோடு வயல்களுக்கே சென்று நெல்லை கொள்வனவு செய்கின்றனர் நெல் விலை மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் நெல் விலை அதிகரித்தாலும் அரிசி விலையை அதிகரிக்க விடாது கட்டுப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். முறையற்ற விதத்தில் நெல் விலை அதிகரித்து அது அரிசி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தினால் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த போட்டித்தன்மைக்கு முகங்கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர் என முல்லைத்தீவு பிரதேசத்தில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொள்கை ரீதியில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என பேதமில்லை. சிங்களவர், தமிழ், முஸ்லிம், பறங்கியர் என்ற பேதமின்றி எவரும் நாட்டின் எப்பிரதேசத்திலும் குடியிருக்கும் உரிமை உள்ளதென நான் எண்ணுகிறேன். ஆயினும். இங்கு குறிப்பிடப்படுவதைப் போன்று சிங்கள மக்களின் குடியேற்றங்கள் ஒருபோதும் இடம்பெறவில்லை. வவுனியா மாவட்டத்திலேயே மகாவலி எல் வலயம் காணப்படுகின்றது. வெலிஓயா சிங்கள குடியேற்றம் 80களில் காமினி திசாநாயக்க அமைச்சரால் ஏற்படுத்தப்பட்டது. அப்பிரதேசங்களில் அந்த குடும்பங்களின் அதிகரிப்பிற்கமைய அப்பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு அந்த கிராமத்தில் காணிகள் வழங்கப்பட்டிருக்கலாம் ஒருபோதும் வெளியிலிருந்து சிங்கள மக்கள் அங்கு குடியேற்றப்படவில்லை ஆயினும் அவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். வடக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அதில் பங்குபற்றினர். அரசாங்கம் ஒருபோதும் அவ்வாறு செயற்படவில்லை. அந்த ஆர்ப்பாட்டங்களின்போது அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளை நான் முழுமையாக மறுக்கின்றேன். அப்படியொரு விடயம் இடம்பெறவில்லை நாட்டில் மாகாண, மாவட்ட பேதங்களின்றி சகோதரத்துவத்துடன் நல்லிணக்கத்துடன் தேசிய ஒற்றுமையோடு வாழவேண்டுமென்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எனவே அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வகையில் குடியேற்றங்களை உருவாக்குதல், குடியமர்த்துதல் போன்ற எந்தவொரு விடயங்களும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் இடம்பெறவில்லை என்பதை நான் தெரிவித்தேயாக வேண்டும்.

சிங்கப்பூர் ஒப்பந்தம் தொடர்பாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை இன்று நான் வருகைதரும் போதும் அவதானித்தேன். இவ்விடயம் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன. ஊடகங்களும் இவ்விடயம் தொடர்பில் சில கருத்துக்களை முன்வைத்தன. அதனால் இது தொடர்பில் அவதானிப்புகளை சமர்ப்பிக்க நிபுணர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களை கொண்ட குழுவொன்றை நான் நியமித்தேன். அவர்கள் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்கள் காணப்படுமாயின் நாட்டில் எந்தவொரு குடிமகனும் அந்த குழுவில் தமது கருத்துக்களை முன்வைக்கலாம். அந்த விசேட நிபுணர் குழுவின் செயற்பாடுகள் மிக வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. எந்தவொரு நபரும் கருத்துகளை முன்வைக்க இடமளிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் பாதிப்பான விடயங்கள் காணப்படுமாயின் அது தொடர்பில் அக்குழு அரசாங்கத்திற்கு பிரேரணைகளை முன்வைக்கும். அவ்வாறு பிரேரணைகள் முன்வைக்கப்படின் அதற்கமைய அந்த ஒப்பந்தத்திலிருந்து அவ்விடயம் முற்றாக நீக்கப்படும். அதற்கான முழுமையான பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இந்த அறிக்கையில் எத்தகைய தவறுகள் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும், உள்நாட்டு கைத்தொழில் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்கள் காணப்படுகின்றதாவென்பதை சுட்டிக்காட்ட வேண்டியது புத்திஜீவிகளினதும் ஏனைய துறையினரதும் பொறுப்பும் கடமையுமாகும். ஆகையினால் இவ்விடயம் தொடர்பில் மேலும் அக்கறையோடு செயற்பட்டு பிரச்சினைகள் காணப்படுமாயின் அது தொடர்பில் நிபுணர் குழுவிற்கு தெரிவிக்குமாறு சகலரிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

எனது சார்பில் தெரிவிக்க நினைத்த விடயங்கள் இவை மாத்திரமே. வேறு விசேட தகவல்கள் ஏதும் இல்லை. உங்கள் அனைவரிடமும் இருந்து விடைபெறுகின்றேன்.

நன்றி.

Share This Post

NEW