சவால்களை வெற்றி கொள்வதற்கான மனோதிடம் என்னிடமிருக்கின்றது – ஜனாதிபதி

சவால்களை வெற்றி கொள்வதற்கான மனோதிடம் என்னிடமிருக்கின்றது – ஜனாதிபதி

நல்லதொரு நாட்டுக்கான எமது குறிக்கோள்களைச் சுற்றி தடைகள் சூழ்ந்திருந்த போதிலும், அவையனைத்தையும் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடமிருப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

ராவய பத்திரிகையின் முப்பது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற அறிஞர்கள் கருத்தாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராவய உட்பட்ட ஊடகங்களின் விமர்சனங்களுக்கு தான் தொடர்ச்சியாக முகங்கொடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்> அனைவரினதும் மரியாதைக்கும் நம்பிக்கைக்குமுரிய அழகிய நாட்டைக் காண்பதே ராவய பத்திரிகையைப் போன்று தனதும் குறிக்கோளாகுமெனவும் அந்த குறிக்கோளை அடைவதற்கான பயணத்தில் ஒத்தாசையுடனும் புரிந்துணர்வுடனும் பயணித்தால் அப்பயணம் மிக இலகுவானதாக அமையுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை தான் பொறுப்பேற்றது விக்டர் ஐவன் உள்ளிட்ட நீண்டகால நண்பர்கள் பலரின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதாகவும் 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுதல் உட்பட்ட நல்லாட்சி அரசின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அதன்மூலம் கிடைத்த ஒத்துழைப்பை குறைத்து மதிப்பிட முடியாதெனவும் நினைவூட்டினார். எதிர்க்கட்சி பலமுள்ளதாக இருந்தனிலையிலேயே ஜனவரி 08 வெற்றிக்கு பின்னர் 100 நாள் வேலைத்திட்டம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அந்த சவாலை வெற்றி கொள்வதற்காக தனது கட்சித் தலைமைப் பதவி உறுதுணையாக இருந்ததனையும் மறக்கக்கூடாதெனவும் குறிப்பிட்டார்.  

தேசிய பட்டியலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவர்கள் முன்னாள் தலைவரின் திட்டமிட்ட பிரச்சாரங்கள் காரணமாகவே தோல்வியடைந்ததாகவும், 100 நாள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் தொடர் நடவடிக்கைகளுக்கும் கட்சியின் நம்பகமான அணியொன்று தன்னை சுற்றியிருப்பது இன்றியமையாததெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.  

ராவய பத்திரிகையின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இளம் விமர்சகர்களின் போட்டியில் போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கள, எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ராவய பத்திரிகையின் ஆசிரியபீட ஆலோசகர் விக்டர் ஐவன் ஆகியோர் இங்கு இடம்பெற்ற கருத்தாடலில் கருத்துத் தெரிவித்தனர்.  

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகைகளின் உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் பங்குபற்றினார்கள்.

 

Share This Post

NEW