இன ரீதியில் பிரிந்து பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்க வேண்டாம் – ஜனாதிபதி சகல இலங்கையரிடமும் வேண்டுகோள்…

இன ரீதியில் பிரிந்து பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்க வேண்டாம் – ஜனாதிபதி சகல இலங்கையரிடமும் வேண்டுகோள்…

இன ரீதியில் பிரிந்து ஒருவருக்கொருவர் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதன் ஊடாகவே பயங்கரவாதிகளின் குறிக்கோள்கள் நிறைவேற்றப்படுகின்றன என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன ரீதியில் பிரிந்து பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்க வேண்டாமென இன்று (17) முற்பகல் காலி, ஹிக்கடுவ, தொடகமுவ  புராண ரத்பத் ரஜமகா விகாரையில் இடம்பெற்ற அரச வெசாக் வைபவத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கடந்த 21ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதல் எமது நாட்டுக்கு மட்டுமான பிரச்சினையல்ல அது சர்வதேச பிரச்சினையாகும் எனவும் அதனை எமது நாட்டுக்குரிய பிரச்சினையாக கருதி செயற்படுவோமேயானால் அதனூடாக எமது நாடு எதிர்நோக்க நேரிடும் அசௌகரியம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காகவும் அத்தாக்குதலின் பின்னர் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காகவும் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

உண்மை மிக மெதுவாக பரவுகின்ற போதிலும் பொய் துரிதமாக பரவுகின்றதென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். சமத்துவம். சமூக நீதி மற்றும் சகல உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்துதல் போன்ற பௌத்த கோட்பாடுகளின் ஊடாக சிறந்த வழிகாட்டல்கள் வழங்கப்படும் அதேவேளை எந்தவொரு ஆன்மீக கோட்பாட்டிலும் மனிதர்களை கொலை செய்யுமாறு கூறப்படவில்லையென ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

நாட்டில் வாழ்ந்த ஈடிணையற்ற மொழி புலமைவாய்ந்த தொடகமுவே ஸ்ரீ ராகுல தேரர் வாழ்ந்த புண்ணிய பூமியாகிய தொடகமுவ புராண ரத்பத் ரஜமகா விகாரையை மையப்படுத்தி ஆன்மீக அபிவிருத்திக்கு முக்கியத்துவமளித்து இம்முறை அரச வெசாக் வைபவம் மிக கோலாகலமாக இடம்பெற்றது.

இன்று பிற்பகல் விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், தொடகமுக புராண ரத்பத் ரஜமகா விகாரை அமைந்துள்ள பிரதேசத்தினை புண்ணிய பூமியாக பிரகடனப்படுத்துவதற்கான நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

அதனை தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தின்போது அதற்கான உறுதியையும் சான்றுப் பத்திரத்தையும் விகாராதிபதி தேரர்கள் மூவரிடமும் கையளித்தார்.

விகாரை மற்றும் அறநெறி பாடசாலைக்கு நிதியுதவி வழங்குதல், உபசம்பதா சான்றிதழ்களை பிரதேச சபைகளினூடாக வழங்குவதனை அடையாளப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

பிக்குகள் பல்கலைக்கழகத்தின் கலாநிதி துபுல்லே சீலக்கந்த நாயக்கத் தேரர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் மகா சங்கத்தினர், புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக்க, அர்ஜூன ரணதுங்க, தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா உள்ளிட்ட பல மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, புத்தசாசன அமைச்சின் செயலாளர், பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம், காலி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பெருந்திரளான பிரதேச பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனிடையே வரலாற்று சிறப்புமிக்க தெவொல் கோவில் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) முற்பகல் இடம்பெற்றது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், புத்த பகவானின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்த ஜனாதிபதி அவர்கள், அவற்றை வணங்கி ஆசிபெற்றதோடு,  இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக கோவில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.

அமைச்சர்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா, வஜிர அபேவர்தன, தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா மற்றும் சீனிகம தெவொல் கோவில் பொறுப்பாளர் சரத் திசெந்துவாஹந்தி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW