டெம்பிட்ட விகாரை பாதுகாப்புக்கு விசேட நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

டெம்பிட்ட விகாரை பாதுகாப்புக்கு விசேட நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

பௌத்த விகாரை பாரம்பரியத்தின் தனித்துவமான கட்டிட மரபைக்கொண்ட டெம்பிட்ட விகாரைகளின் பாதுகாப்புக்கு விசேட நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

இலங்கையில் டெம்பிட்ட விகாரைகளின் பாதுகாப்பு குறித்து இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தூண்களின் மீதமைந்த விகாரைகள் டெம்பிட்ட விகாரைகள் என அழைக்கப்படுகின்றன. இலங்கையில் இந்த விகாரைப் பாரம்பரியம் கண்டி மற்றும் கம்பளை இராஜ்ஜியத்தில் பிரசித்திபெற்று விளங்கியது. இலங்கையில் இதுவரையில் 204 டெம்பிட்ட விகாரைகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இவற்றில் ஆறு விகாரைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் 85 விகாரைகளில் முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்குத் தேவையான மனித வளத்தையும் நிதியையும் குறைவின்றி வழங்குமாறு ஜனாதிபதி குறித்த தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.

களனி பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஆய்வு மையத்தினால் தொகுக்கப்பட்ட இலங்கை டெம்பிட்ட விகாரைகள் தொடர்பான ஆய்வுநூல் அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. டெம்பிட்ட விகாரைகள் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் உள்ளடங்கிய அறிவித்தல் பலகைகளை அமைத்தல், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு டெம்பிட்ட விகாரைகளைப் பார்வையிடுவதற்காக சுற்றுலா மார்க்கங்களை ஏற்படுத்தல் மற்றும் பிரசித்தப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக வன பாதுகாப்பு பிரதேசங்கள் மற்றும் மக்கள் நடமாட்டமில்லாத பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள தொல்பொருள் இடங்கள் அழிவுக்குட்பட்டு வருவதுடன் இந்த இடங்களைப் பாதுகாப்பதற்கு பொலிஸ், சிவில் பாதுகாப்புப்படை மற்றும் தொல்பொருள் திணைக்களம் இணைந்து ஒரு விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களின் பாதுகாப்புக்கு தற்போது சிவில் பாதுகாப்புப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குமாறு சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பிங்கிரிய தேவகிரி ரஜமகாவிரையின் விகாராதிபதி சங்கைக்குரிய சோரத்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், கலாசார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, அமைச்சுக்களின் செயலாளர்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, சிவில் பாதுகாப்புப்படை பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம, களனி பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவியாளர் கங்கா திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

Share This Post

NEW