“திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரத்தின் முதலாவது நாளான இன்று நாடு முழுவதும் அன்னதான நிகழ்வுகள்

“திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரத்தின் முதலாவது நாளான இன்று நாடு முழுவதும் அன்னதான நிகழ்வுகள்

இலங்கை பிக்கு பரம்பரையின் உன்னத பங்களிப்பில் பேணப்பட்டு வந்த தூய பௌத்த போதனைகள் உள்ளடங்கிய உன்னத தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு முன்மொழிவினை சமர்ப்பிப்பதனை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “திரிபீடகாபிவந்தனா” வாரம் இன்று ஆரம்பமாகின்றது.

புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக அறிவித்து, பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கமைய இன்று (16) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை “திரிபீடகாபிவந்தனா” வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் முதலாவது நாளான இன்று பொலிஸ் பிரிவு மட்டத்தில் நாடளாவிய ரீதியில் அன்னதான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதற்கமைய தேசிய அளவிலான பிரதான நிகழ்ச்சியாக கொழும்பு 07, குறுந்துவத்த பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வில் 67 பிக்குகள் பங்குபற்றியதுடன், இன்று முற்பகல் சுதந்திர சதுக்கம் முதல் விபஷ்சணா தியான மண்டபம் வரை பிக்குகள் நடை பயணமாக வந்தனர்.

வீதியின் இருபுறமும் கூடியிருந்த பக்தர்கள் அன்னதான நிகழ்வுகளில் ஈடுபட்டதுடன், விபஷ்சணா தியான மண்டபத்தில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

அதன் பின்னர் பிரிகரைகள் மற்றும் ஏனைய பூஜைப் பொருட்களை பிக்குகளுக்கு தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பிரதான விகாரையொன்றை மையமாகக்கொண்டு பிரதான பொலிஸ் நிலையம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்படும் இவ்வாறான அன்னதான நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெறுகின்றன.

“திரிபீடகாபிவந்தனா” வாரத்தின் இரண்டாவது தினமான நாளை அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளையும் மையமாகக்கொண்டு விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் இடம்பெறவுள்ளன.

தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு அனைத்து பௌத்த நாடுகளினதும் ஒத்துழைப்புடன் இலங்கை முன்மொழிவினை சமர்ப்பிக்கும் தேசிய மகோற்சவம் மூன்று நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் தலைமையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால அவர்களின் பங்குபற்றலில் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் இடம்பெறவுள்ளது.

Share This Post

NEW