தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கான ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றிருப்பதாக திரிபீடகத்தை பாதுகாப்பதற்கான சபை தெரிவித்துள்ளது.

தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எதிர்பார்ப்புக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றிருப்பதாக திரிபீடகத்தை பேணிப் பாதுகாப்பதற்கான திரிபீடக பாதுகாப்புச் சபையின் தேரர்கள் தெரிவித்துள்ளனர் 

தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தி யுனெஸ்கோ உலக ஞாபக பதிவேட்டில் உள்ளடக்குவது குறித்த ஊடகச் சந்திப்பொன்று நேற்று (08) அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே தேரர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். 

திரிபீடகத்தை பாதுகாத்து அதனை தேசிய மரபுரிமையாக ஆக்குவது ஒரு முக்கியமாக பாராட்டப்பட வேண்டிய பணியாகும். இந்த நாட்டின் எந்தவொரு தலைவரும் செய்யாத அந்த உன்னத பணியை தற்போதைய ஜனாதிபதி செய்திருப்பதாகவும் தேரர்கள் சுட்டிக்காட்டினர். 

1992ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு முன் வைத்த ஆவணப்படுத்தப்பட்ட மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான சமவாயத்தின் ஏற்பாடுகளுக்கமைய தற்போதைய ஜனாதிபதி அவர்களினால் திரிபீடகத்தை பாதுகாப்பதற்காக நிக்காய பேதங்களின்றி திரிபீடகத்தை பாதுகாப்பதற்கான நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டதென்றும் அதில் ஆரம்ப காலம் முதல் இருந்துவந்த திரிபீடகத்தினை அவ்வாறே தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக இந்த பாதுகாப்புச் சபையினூடாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சங்கைக்குரிய மகுலெவே சுதஸ்ஸன நாயக்க தேரர் தெரிவித்தார். 

167 நாடுகளில் 1121 உலக மரபுரிமைகள் யுனெஸ்கோவினால் உலக மரபுரிமையாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அவை பல்வேறு புனித தலங்கள் மற்றும் வரலாற்று நினைவு தூபிகள் என்றபோதும், திரிபீடகம் ஒரு சமயம் சார்ந்த ஒன்று என்பதால் இவ்வாறான ஒன்றை உலக மரபுரிமையாக பெயரிடுவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டிருப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. 

அதேபோன்று திரிபீடகத்தை உலக மரபுரிமையாக அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது. 

திரிபீடகத்தை உலக ஞாபகப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதி அவர்களினால் நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பாலி, பௌத்த கற்கைகள் பிரிவின் தலைவர் சங்கைக்குரிய பேராசிரியர் மெதகம்பிட்டிய விஜித்த தம்ம தேரரின் ஆலோசனையின் பேரில் அந்த குழுவின் மூலம் தயாரிக்கப்பட்ட விண்ணப்பமும் நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கையும் அண்மையில் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 

நிபுணர் குழுவினால் கடந்த 05 மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட நிபுணத்துவ அறிக்கை பரிசீலனையை தொடர்ந்து தற்போது ஓலைச் சுவடிகளில் உள்ள திரிபீடகம் உள்ள இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாப்பதற்கான முன்மொழிவுகளும் இடைக்கால அறிக்கையினூடாக முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதுபற்றியும் இதன்போது ஊடகங்களுக்கு விளக்கப்பட்டது. 

அநுராதபுரம் இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் பௌத்த கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கைக்குரிய அக்மீமன தம்மபால நாயக்க தேரர், பதிற் கடமைப்புரியும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பீ.பி.மண்டாவல, பேராசிரியர் சந்திம விஜயபண்டார, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் சுனந்த காரியவசம் ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர் 

 

Share This Post

NEW