நவீன தொழிநுட்ப அறிவுடன் ஒழுக்கப் பண்பாடான சிறுவர் தலைமுறையொன்று நாட்டில் உருவாக வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

நவீன தொழிநுட்ப அறிவுடன் ஒழுக்கப் பண்பாடான சிறுவர் தலைமுறையொன்று நாட்டில் உருவாக வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

நவீன தொழிநுட்பத்தின் பெறுபேறுகள் இன்று கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் உரித்தாகவுள்ளது என்பதுடன், அவர்கள் அந்த அனைத்து தொழிநுட்ப கருவிகளையும் நாட்டினதும் தமது எதிர்கால நன்மைக்காகவும் பயன்படுத்துவார்கள் என தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இன்று கிராமிய பாடசாலைகளிலுள்ள பிள்ளைகளுக்கும் நவீன தொழிநுட்ப கருவிகள் பற்றிய விரிவான அறிவு உள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தான் அப்பாடசாலைகளுக்கு செல்கின்ற போது அப்பிள்ளைகள் கதிரை, மேசைகளை போன்று கணனிகளையும் பெற்றுத்தருமாறு கோருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

அந்த அனைத்தையும் எவ்வித பேதமுமின்றி பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவது, நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதினால் ஆகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நவீன தொழிநுட்பத்துடன், ஒழுக்கப் பண்பாடான சிறுவர் தலைமுறை ஒன்று நாட்டில் உருவாக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (11) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

கல்லூரியின் பழைய மாணவரான டி.வீ.சாந்த சில்வாவின் தனிப்பட்ட நிதி அன்பளிப்பில் இந்த விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் தேர்ஸ்டன் கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

முதலில் கல்லூரி வளாகத்திலுள்ள படையினரின் நினைவுத்தூபிக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் அதற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டரங்கை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டார்.

கல்லூரியின் அதிபர் கே.வீ.ஏ.எல்.டயஸ் அவர்களினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

கல்லூரியின் பழைய மாணவரான எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

“கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை… 2019.01.11”

இப்பாடசாலையின் கிரிக்கெட் விளையாட்டரங்கை திறந்து வைக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று இப்பாடசாலையின் 69ஆவது ஆண்டு விழாவுமாகும். நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் இப்பாடசாலைகக்கு மூன்று முறை வருகை தந்துள்ளளேன்.

பிறந்திருக்கும் 2019ஆம் ஆண்டில் நாம் கடந்த வருட அனுபங்களுடன் எமது பணிகளை முன்னெடுத்து வருகிறோம். இந்த ஆண்டின் முதலாவது நிகழ்வாக நான் கடந்த 05ஆம் திகதி மாத்தளை அலுவிகாரையில் இடம்பெற்ற திரிபீடகத்தை தேசிய உரிமையாக பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டேன். இரண்டாவதாக ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற புதிய களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்விலும் இலங்கையின் முதலாவது பசுமை நகரமான லக்கல நகரை மக்களிடம் கையளிக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டேன். இலங்கையில் மட்டுமன்றி உலகின் பெரும்பாலான நாடுகளில் நகரங்கள் கொங்றீட் காடுகளாகவே காணப்படுகின்றன. பசுமையான இயற்கை வளங்களை அங்கு காணக்கிடைப்பது அரிதாகவே உள்ளது.

என்றாலும் இலங்கையில் முதன்முறையாக பசுமை நகரமொன்றை திறந்து வைக்கக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கப் பிரதேசத்திற்குச் சென்றால் அண்மையில் இந்நாட்டில் அமைக்கப்பட்ட பாரிய நீர்த்தேக்கத்தையும் திட்டமிட்ட அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பசுமை நகரையும் காண முடியும். அங்கு ஒரு நகரத்தில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் உள்ளன. புதிதாக 112 கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. களுகங்கை நீர்த்தேக்கத்தின் பணிகளை இரண்டரை வருடங்களில் எமக்கு நிறைவு செய்யக்கூடியதாக இருந்தது.

நான் இவற்றை கூறுவது மற்றுமொரு விடயத்தை கூறுவதற்கான முன்னுரையாகவே ஆகும். அன்று லக்கல நகரில் பல்வேறு அபிவிருத்தி பணிகள், கட்டிடங்கள் அமைச்சர்களினால் திறந்து வைக்கப்பட்டன. லக்கல நகரில் புதிய பாடசாலையொன்றும் திறந்து வைக்கப்பட்டது. அப்பாடசாலைக்காக 30 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. அந்த பாடசாலைக்கு நான் சென்றிருந்த போது சில பிள்ளைகள் என்னை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் 10, 11 வயதுகளையுடையவர்கள். உங்களது பாடசாலையில் உங்களுக்கு என்ன குறைபாடுகள் உள்ளன என்று நான் அவர்களிடம் கேட்டேன். ஜனாதிபதி அவர்களே! எங்களுக்கு பாடசாலை அமைத்துத் தரப்பட்டாலும் கதிரை, மேசைகள் கிடையாது. கணனி வசதிகள் இல்லை எனக் கூறினார்கள். வேறு என்ன இல்லை எனக்கேட்டேன். அதற்கவர்கள் எங்களுக்கு மேக்கப் செட்கள் இல்லை எனக் கூறினார்கள். இவற்றை 10, 11 வயதையுடைய பிள்ளைகளே என்னிடம் கேட்டவர்கள்.

நான் ஐந்தாம் வகுப்பு வரையில் மிகவும் பின்தங்கிய ஒரு பாடசாலையில் தான் கல்வி கற்றேன். நான் அன்று அந்த விழா முடிவடைந்து வீட்டுக்கு வந்ததும் இந்த பிள்ளைகள் என்னிடம் கூறியவற்றை எண்ணிப் பார்த்தேன்.
நான் பொலன்னறுவையில் மிகவும் பின்தங்கிய ஒரு பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை கற்று அங்கிருந்து ஆறாம் வகுப்பிற்கு நகர பாடசாலைக்கு சென்றேன். எனக்கு 10 வயதாகின்றபோது கணனியை பற்றி தெரிந்திருக்கவும் இல்லை கேள்விப்பட்டிருக்கவும் இல்லை. அதேபோன்று தான் மேக்கப் செட் என்ற சொல்லையே கேட்டிருக்கவில்லை. இந்த பிள்ளைகளின் இந்த இரண்டு கோரிக்கையும் முக்கியமானது.

லக்கல போன்ற பின்தங்கிய கிராமமொன்றின் பாடசாலை ஐந்தாம் ஆண்டு பிள்ளைகள் ஜனாதிபதியிடம் கணனி, கதிரை, மேசைகள் இல்லையென கூறுகின்றார்கள். அவர்கள் கணனி தமக்கு கிடைக்காவிட்டாலும் அதனை உள்ளத்தால் எண்ணிப் பார்க்கிறார்கள். இவர்கள் மேக்கப் செட் வேண்டும் என்ற போது அது ஏன் உங்களுக்கு தேவையென கேட்டேன். இன்றைய இந்த விழாவில் எமது அக்காமார்களுக்கு நடனம் பயிற்றுவிக்க ஒப்பனைசெய்வதற்கு தேவையான பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே அது எங்களுக்கு தேவை எனக் கூறினார்கள்.

நவீன கலாசார சூழலில் பிள்ளைகளின் அந்த கோரிக்கை சமூக, கலாசார தாக்கத்தினால் ஏற்பட்ட ஒன்றாகும். பிள்ளைகள் புதிய உலகில் பிரவேசித்து அறிவு, அனுபவங்களினூடாக இவற்றை பார்த்தும் அனுபவித்தும் வருகிறார்கள். மாலை வேளைகளில் தொலைக்காட்சி பார்க்கின்றபோது அதில் தேவையானது, தேவையற்றது, சரியானது, பிழையானது என எல்லா விடயங்களும் ஊடகங்களினூடாக பாரத்தாலும் இந்நாட்டு பிள்ளைகளுக்கு நல்லதோர் எதிர்காலம் உள்ளது. நான் அன்று அந்த நிகழ்விலேயே அவர்களுக்கு தேவையான கதிரை, மேசைகளை பெற்றுத் தருவதாக கூறினேன். கல்வியமைச்சிடம் அல்லது மாகாண சபையிடம் கேட்டு அதனை ஒரு சில மாதங்களில் பெற்றுத்தர முடியும் என கூறினேன். நான் அப்படி கூறக் காரணம் கதிரை, மேசைகளை பெற்றுக்கொள்வதற்கு கடந்த மூன்று வருடங்களில் நாம் கண்டுவரும் கால தாமதத்தின் காரணமாகவாகும். கடந்த 03 வருடங்களாக ஜனாதிபதி அலுவலகத்தினால் டென்டர் மூலம் கதிரை, மேசைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் புதிய உலகை வெற்றி கொள்வதற்கு தொழிநுட்பம் மற்றும் நவீன அறிவுடன் பல்வேறு துறைகளில் பெற்றுள்ள முதிர்ச்சியும் அனுபவமும் முக்கியமானதாகும். கல்லூரியின் பழைய மாணவர்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் பயனுள்ள விடயங்களை செய்ததைப் போன்று தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து புகழ்பெற்ற தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் சிறந்த கல்விமான்கள் உருவாகியிருக்கிறார்கள். நாட்டின் மதிப்பை பெற்ற ஒரு பாடசாலையாக இப்பாடசாலை உள்ளது. இங்கு என்னிடம் ஒரு சிறுவர் ஒரு கடிதமொன்றை சமர்ப்பித்தார். அதில் கட்டிடம் ஒன்றின் தேவைபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நான் கல்வியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என கூறிக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.

 

Share This Post

NEW