நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை பலமாக முன்கொண்டு செல்ல நேபாள பிரதமர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு..

நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை பலமாக முன்கொண்டு செல்ல நேபாள பிரதமர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு..

இலங்கைக்கும் நேபாளத்திற்குமிடையில் நெருங்கிய உறவை கட்டியெழுப்பி இரண்டு நாடுகளினதும் மக்களின் நலனுக்காக பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இரு நாடுகளினதும் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு நேபாளத்திற்கு சென்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் நேபாள பிரதமர் கே.பீ. ஓலி அவர்களுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (01) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போதே தலைவர்கள் இது குறித்து கலந்துரையாடினர்.

காத்மண்டு நகரிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களை நேபாள பிரதமர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்குமிடையிலான இருதரப்பு உறவுகளை அனைத்து துறைகளிலும் மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது தலைவர்கள் கவனம் செலுத்தினர்.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, முதலீட்டு மற்றும் சுற்றுலா துறைகளில் உறவுகளை மேலும் பலப்படுத்தவும், இரண்டு நாடுகளுக்குமிடையிலான இணைந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை செயற்படுத்தி மிகவும் நெருக்கமான உறவை கட்டியெழுப்புவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

லும்பினி புனித பூமியை தரிசிக்க வரும் இலங்கையர்களின் வசதிகளை விரிவுபடுத்துவது குறித்து ஜனாதிபதி அவர்கள் நேபாள பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

சர்வதேச மன்றங்களில் மிகவும் நெருக்கமாக செயற்படுவதற்கு இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் உறுதியளித்ததுடன், பிராந்திய விவகாரங்களில் ஒத்துழைப்புடன் செயற்படவும் இணக்கம் தெரிவித்தனர்.

பிம்ஸ்டெக் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தலைவர்கள் கலந்துரையாடியதுடன், பிம்ஸ்டெக் அமைப்பின் புதிய தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த நேபாள பிரதமர், அதன் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தார்.

அனுபவம் நிறைந்த முதிர்ச்சியான அரசியல் தலைவர் என்ற வகையில் பிம்ஸ்டெக் அமைப்பின் நடவடிக்கைகளை பலமாக முன்கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முடியும் என்றும் நேபாள பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

நேபாளத்தில் இடம்பெற்ற நான்காவது பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பாகவும் தனக்கு வழங்கப்பட்ட மகத்தான வரவேற்பு மற்றும் உபசரிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் நேபாள பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

Share This Post

NEW