சுற்றாடலை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதில் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப செயற்பட வேண்டாம். – ஜனாதிபதி

சுற்றாடலை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதில் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப செயற்பட வேண்டாம். – ஜனாதிபதி

சுற்றாடலை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருக்கின்ற ஒரு யுகத்தில் அப்பொறுப்பை நிறைவேற்றுவதில் எவரும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட கூடாதென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

அடுத்த தலைமுறைக்காக சுற்றாடலின் சமநிலையான இருப்பை உறுதிப்படுத்துவதற்கு நாட்டில் பொறுப்புவாய்ந்த அனைவரும் அரப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். இன்று (21) முற்பகல் இரத்தினபுரி நிவித்திகலை சுமன மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கபடவுள்ள மூன்று மாடி கட்டிட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாம் அடைந்துகொள்ள வேண்டிய இலக்காகவுள்ள நாட்டின் வன அடர்த்தியை 32% வீதமாக அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அரசியல்வாதிகளினதும் அரசாங்க அதிகாரிகளினதும் பாடசாலை மாணவர்களினதும் அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மாவட்டத்தின் வறுமை நிலை அதிகரிப்பதற்கு போதைப்பொருட்கள் முக்கிய காரணமாகும் என்றும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்பிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவது நாட்டின் வறுமையை ஒழித்து அனைத்து மக்களினதும் வாழ்க்கையை சுபீட்சமானதாக ஆக்கும் நோக்குடனேயேயாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஜூன் மாதம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்துடன் இணைந்ததாக ஜூன் 23 ஆம் திகதி முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தி பல விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள மூன்று மாடி கட்டிட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கான நினைவுப்பலகையை ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்.

பாடசாலையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசில்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார். ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க, நிவித்திகலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் மியுறு பாஷித லியனகே, கல்லூரியின் அதிபர் கே.ஏ.வீரசிங்க, பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Share This Post

NEW