தேர்தல் நோக்கிலன்றி மக்களின் உயிர்வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவே சுற்றாடல் பற்றிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் – ஜனாதிபதி

தேர்தல் நோக்கிலன்றி மக்களின் உயிர்வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவே சுற்றாடல் பற்றிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் வன வளத்தினை பாதுகாப்பதற்காக எந்தவொரு அரசியல் தலைவரும் மேற்கொண்டிராத தீர்மானங்கள் பலவற்றை கடந்த நான்கு வருடங்களில் தாம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பிற்கான அவ்வனைத்து தீர்மானங்களும் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கிலன்றி மனிதர்களின் உயிர்வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டன என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தச்சு வேலைத்தளங்கள், மர ஆலைகளுக்கான புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் என்றவகையில் தான் மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்து பலரும் போதிய புரிந்துணர்வின்றி காணப்படுகின்ற போதிலும் நாட்டின் வனப் பரம்பல் துரிதமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக இன்னும் 15 – 20 வருடங்களுக்குள் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆகையினால் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அரசியல் நோக்கங்களின்றி பிரச்சினைகளை தெளிவான கண்ணோட்டத்துடன் நோக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

இன்று (08) முற்பகல் முல்லைத்தீவு பிரதேச சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” முல்லைத்தீவு மாவட்ட செயற்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கடத்தல்காரர்களே நாட்டில் 95 சதவீதமான காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் மர ஆலைகளுக்காக வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களின் பேரிலேயே இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அதிகளவிலான மரங்கள் வெட்டப்படுவதனால் நீர் ஆதாரங்களுக்கும் சுற்றாடலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றமை சூழலியலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஆகையினால் மக்களின் உயிரைப் போன்றே வன வளங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எந்தவொரு அரசியல்வாதியும் தேர்தலை இலக்காகக் கொண்டு இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டக்கூடிய கருத்துக்களை வெளியிடக்கூடாதெனவும் தெரிவித்தார்.

இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு தற்போது அரசியல்வாதிகள் பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், இதன்போது இனவாத, மதவாதக் கருத்துக்களை வெளியிடுதல் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுவெடிப்புக்களை நடத்திய பயங்கரவாதிகளின் நோக்கங்களை வெற்றியடையச் செய்வதற்கு உதவியளிப்பதற்கு சமமாகும் எனவும் இத்தகையதொரு பின்னணியில் நாட்டிற்காக ஒன்றிணைந்து அனைவரும் தத்தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி செயலகத்தினாலும் அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் சமூக நலன்பேணல் செயற்திட்டங்களின் பெறுபேறுகளை வினைத்திறனான முறையில் விரைவாக அதன் பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுப்பதே ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டத்தின் நோக்கமாகும். இதுவரை தீர்க்கப்படாத மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு இச்செயற்திட்டத்தின் ஊடாக விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அதன் நான்காவது கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த 03ஆம் திகதி முதல் பல்வேறு வேலைத்திட்டங்கள் மாவட்டத்தின் 06 பிரதேச செயலக பிரிவுகளிலும் 136 கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் 1178க்கும் அதிகமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், சுமார் 52.4 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக முப்பதாயிரம் குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.

இன்றைய தினம் இடம்பெற்ற இறுதி நிகழ்வின்போது மாவட்ட மக்களுக்கான காணி உறுதிகள் வழங்குதல், புதிய பயனாளி குடும்பங்களுக்கான சமுர்த்தி முத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதனிடையே, துனுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லாவி மருத்துவமனையில் 37 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவினை டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது திறந்துவைத்ததுடன், முல்லைத்தீவு மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா பிராந்திய அலுவலகத்தையும் திறந்துவைத்தார்.

அமைச்சர்கள் தயா கமகே, காமினி ஜயவிக்ரம பெரேரா, கயந்த கருணாதிலக்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், காதர் மஸ்தான், எஸ். சிவமோகன் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், முப்படை மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

மேலும் மகாவலி எல் வலயத்திற்குட்பட்ட வெலிஓயா கிரிஇப்பன்வெவ நீர்த்தேக்கம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் அதனை இன்று ஜனாதிபதி அவர்கள் மக்களின் பாவனைக்காக கையளித்ததுடன், நீர்த்தேக்கத்தில் பத்தாயிரம் மீன்குஞ்சுகளையும் விடுவித்தார்.

மகாவலி எல் வலயத்தின் கிரிஇப்பன்வெவ பிரதேசத்தில் ஜனகபுர பிரிவில் 8 மீற்றர் நீளமான மின்சார வேலியை நிர்மாணிப்பதற்காக 55 இலட்ச ரூபாய் பெறுமதியான காசோலையையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வழங்கினார்.

2440 ஏக்கர் அடிகள் கொள்ளளவுடைய கிரிஇப்பன்வெவ நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 900 ஏக்கர் வயல் நிலங்களுக்கும் 520 குடும்பங்களுக்கும் நீர் வழங்கப்படுகின்றது.

30 வருடங்களின் பின்னர் இக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்பதுடன், இதற்காக 103 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

Share This Post

NEW