பொலிஸ் திணைக்களத்தில் நிறைவேற்று தரத்திலுள்ள அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பதவியுயர்வு வழங்குவதற்கும் முறையான நடைமுறைகள்

பொலிஸ் திணைக்களத்தில் நிறைவேற்று தரத்திலுள்ள அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பதவியுயர்வு வழங்குவதற்கும் முறையான நடைமுறைகள்
  • நீண்ட காலமாக பதவியுயர்வு கிடைக்கப்பெறாத 31,500 பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒரே தடவையில் பதவியுயர்வு

பொலிஸ் திணைக்களத்தின் நிறைவேற்றுத் தரத்திலுள்ள அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பதவியுயர்வு வழங்குவதற்கும் முறையான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக பொலிஸ் திணைக்களத்தில் நிறைவேற்றுத் தரங்களிலுள்ள அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வுகள் உரிய விதிமுறைகளுக்கும் உரிய கால எல்லைக்கும் ஏற்ப மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், அது பற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் கடந்த பல கூட்டங்களின்போது வழங்கிய பணிப்புரைகளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வுகளுக்கான இந்த புதிய நடைமுறைகளுக்கு தற்போது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதேநேரம் பொலிஸ் திணைக்களத்தின் இரண்டாம் தரங்களிலுள்ள அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பதவியுயர்வுகளை வழங்குவதற்காகவும் புதிய நடைமுறையொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நீண்டகாலமாக பதவியுயர்வு வழங்கப்படாத பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்திலிருந்து பொலிஸ் பரிசோதகர் தரத்திற்கு சுமார் 31,500 பேர்களுக்கு பல குழுக்களாக ஒரே தடவையில் நடைமுறைக்கு வரும் வகையில் பதவியுயர்வு வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்குமிடையே இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பொலிஸ் பிரிவில் கீழ்நிலை தரங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் நலன்பேணல் நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொலிஸ் சேவையில் முகாமைத்துவ உதவியாளர், அலுவலக உதவியாளர், மொழிபெயர்ப்பாளர் போன்ற வெற்றிடமுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வது குறித்தும் வடக்கில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியை அமைக்கும் நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் கொழும்பு, கோட்டை பொலிஸ் தலைமையகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக காணியை பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கடந்த யுத்த காலத்தில் உயிர்நீத்த சுமார் 25,000 பொலிஸ் அதிகாரிகளையும் “நமக்காக நாம்” நிதியத்தில் உள்ளடக்கி, அதனூடாக அக்குடும்ப உறுப்பினர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பதில்கடமை புரியும் அமைச்சர் புத்திக பத்திரன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பதில் கடமை பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW