முத்துராஜவெல சுற்றாடல் அழிவுக்கு தற்போதைய அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

முத்துராஜவெல சுற்றாடல் அழிவுக்கு தற்போதைய அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நீக்கும் முன்மொழிவு சட்டபூர்வமானதல்ல என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்  –  ஜனாதிபதி

கம்பஹா மாவட்டத்திலுள்ள பெறுமதியான வளமான முத்துராஜவெல சூழலை அழிவுக்குள்ளாக்குவதில் தற்போதைய அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக இந்த பாரிய சுற்றாடல் அழிவை தவிர்க்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். இன்று (05) முற்பகல் திவுலபிட்டிய பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” கம்பஹா மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நீக்கும் முன்மொழிவு சட்டபூர்வமானதல்ல என்று சட்டமா அதிபரினால் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

போதைப்பொருளுக்கெதிரான போராட்டத்திற்கு எதிராக எழும் குரல்களின்மூலம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றவர்கள் நாட்டின் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளுமாவர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவர்களது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள ஒருபோதும் இடமளிக்க கூடாதென்றும் தெரிவித்தார்.

கடந்த 29ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட நாட்டுக்காக ஒன்றிணைவோம் 6வது நிகழ்ச்சித்திட்டம் 6 நாட்களாக 13 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன். சுமார் மூன்று இலட்சத்து இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பயன்களை வழங்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்காக 123 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சித்திட்டம் இதற்கு முன்னர் புத்தளம், மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் மக்களின் பொருளாதார, சுகாதார, சமூக, நிர்வாக மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பை பெற்றுக்கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முக்கியமான தேசிய செயற்திட்டங்களான கிராமசக்தி, சிறுநீரக நோய் ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர்களை பாதுகாப்போம், ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா, சுற்றாடல் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் போசணை ஆகிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கான மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தி முறைமையின் ஊடாக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபை மற்றும் வேறு நிறுவனங்களினால் குறித்த துறைகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவும் நிதி வசதிகள், முதலீடு மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்றைய தினமும் கம்பஹா மாவட்ட மக்களுக்கு பல்வேறு நன்மைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன். “கமரெக்கும” அமைப்பு பதிவு உறுதிப்பத்திரம் வழங்குதல், சமூர்த்தி வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தலா 2 இலட்சம் ரூபா காசோலை வழங்குதல், என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா கடனுதவி, விவசாய, கமநல சபையின் விவசாய ஓய்வூதிய புத்தகங்கள் வழங்குதல், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கடன் உதவிகள், சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், கலை நிறுவனங்களுக்கான உபகரணங்கள், சுயதொழில் உபகரணத் தொகுதிகளை வழங்குதல், ரணவிரு சேவா அதிகார சபையினூடாக வீடுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

“புனரோதய” சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாட்டுக்காக ஒன்றிணைவோம் கம்பஹா மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக காணி பயன்பாட்டு திணைக்களத்தின் வழிகாட்டலில் நீரேந்துப் பிரதேசங்களை பாதுகாக்கும் 6 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் வழங்கப்படும் நிதி ஏற்பாடுகள் ஜனாதிபதி அவர்களினால் கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்திடம் கையளிக்கப்பட்டன.

மேலும் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா திட்டத்தில் பொறுப்பளிக்கும் கடிதங்கள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, ஹர்ஷன ராஜகருணா, சந்தன ஜயக்கொடி, அஜித் பஸ்நாயக்க உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Share This Post

NEW