இந்த ஆண்டை நாட்டின் பொருளாதாரத்தின் திருப்புமுனையாக மாற்றுவதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு

இந்த ஆண்டை நாட்டின் பொருளாதாரத்தின் திருப்புமுனையாக மாற்றுவதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு

• சுற்றாடல் பாதுகாப்பிற்காக ஜனாதிபதியின் மற்றுமொரு முக்கிய தீர்மானம்…

• மரம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய சென்சோ இயந்திரம் முதல் பாரிய இயந்திரங்கள் வரை அனைத்திற்கும் அனுமதிப் பத்திரம்…

தேர்தல் வருடமான இவ்வருடத்தில் அரசியல்வாதிகள் தத்தமது தேர்தல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள வேளையில் நாடு என்ற வகையில் நாம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகத்தை அதிகரிக்கும் சவாலுக்கு முகங்கொடுத்து, இவ்வருடத்தை நாட்டின் பொருளாதார துறையில் திருப்புமுனையாக மாற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்வாறு இல்லாதபோது நாடு என்ற வகையில் பொருளாதார ரீதியாக நாம் ஒரு மோசமான நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தேர்தல் காரணங்களினால் அபிவிருத்தியும் மக்கள் சேவையும் ஒருபோதும் பாதிப்படையக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

நாடு முகங்கொடுத்துள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை மீட்டு, சிறந்ததோர் சமூகத்தையும் சட்டத்தை மதிக்கின்ற நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஒருபோதும் பின்னடையக்கூடாது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இன்று (11) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அதனுடன் இணைந்த பொதுமக்கள் நலன்பேணலுக்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட திட்டங்கள் தொடர்பான 2019ஆம் ஆண்டு இலக்குகள் பற்றி அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதற்காக ஜனாதிபதி அவர்களினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆளுநர்கள் தற்போது நடைமுறையிலிருக்கும் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள், நிரல் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கிராமிய வறுமையை ஒழிக்கும் முக்கிய இயக்கமான கிராமசக்தி மக்கள் இயக்கம் இன்று வெற்றிகரமாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி செயன்முறைகளின் மூலம் வறுமையை ஒழித்து சுயமாக எழுந்திருக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்குவது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் விசேட அம்சமாகும். இவ்வருடம் இதனை மேலும் விரிவுபடுத்துவது ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும். அந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இம்மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கிராமசக்தி தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம், சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம், சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சித்திட்டம், பேண்தகு பாடசாலைகள் நிகழ்ச்சித்திட்டம், உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம், தேசிய போசணை நிகழ்ச்சித்திட்டம் அங்கவீனமுற்றோர் மற்றும் முதியோர் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம், கலாசார புத்தெழுச்சி நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள் பொதுமக்கள் நலன்பேணலுக்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் செயற்திறனை இவ்வருடம் மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொண்டு 2025ஆம் ஆண்டளவில் வறுமையற்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி அவர்களின் முழுமையான வழிகாட்டலின் கீழ் இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச பொறிமுறையை அறிவூட்டி 2019ஆம் ஆண்டின் புதிய இலக்குகளுடன் கூடிய நிகழ்ச்சித்திட்டங்கள் இன்றைய சந்திப்பின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

3% – 4% என்ற குறைந்த மட்டத்திலுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அரசியல் காரணங்களினால் மேலும் இவ்வருடத்தில் வீழ்ச்சியடையுமானால் நாடு என்ற வகையில் எழுந்திருப்பது கடினமானதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரித்து 21 மில்லியன் மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

அரச சேவையின் வினைத்திறனை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், இலக்குகளுடன் செயற்படும் அதேநேரம் நிதி ஏற்பாடுகளிலிருந்து உச்ச பிரயோசனத்தை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

தற்போது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், போதைப்பொருள் ஒழிப்பிற்காக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்று அதற்கு அடிமைப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வன அடர்த்தியை அதிகரித்து சுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் இங்கு விளக்கினார்.

மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான சென்சோ இயந்தி்ரம் முதல் பாரிய இயந்திரங்கள் வரை அனைத்து இயந்திரங்களுக்கும் கட்டாயமாக அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று புதிய சுற்றுநிரூபமொன்றை வெளியிடுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அந்த வகையில் இந்த இயந்திரங்களை தம்வசம் வைத்திருக்கின்றவர்கள் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் மார்ச் 01ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அவற்றை பதிவுசெய்துகொள்ள வேண்டும். அனைத்து பொலிஸ் நிலையங்களும் தமது அதிகார எல்லைக்குள் இத்தகைய இயந்திரங்களை வைத்திருக்கின்றவர்கள் பற்றிய பெயர்ப்பட்டியல் ஒன்றை பேணிவர வேண்டும் என்பதுடன், அவ் இயந்திரங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

அனுமதிப் பத்திரமின்றி அத்தகைய இயந்திரங்களை பயன்படுத்தினால் அவர்களை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த அனைத்து தீர்மானங்களும் எதிர்கால தலைமுறையின் நன்மைக்காகவே மேற்கொள்ளப்படுகிறன என தெரிவித்தார்.

கிராமசக்தி விசேட சந்திப்பில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 2019.02.11 (BMICH)

இங்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். நாட்டின் 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக இங்கு பிரதான உரையை நிகழ்த்திய பேராசிரியர்கள் முக்கியமான பல விடயங்களை முன்வைத்தனர். அரச சேவையில் உயர் பதவிகளை வகிக்கின்ற அதிகாரிகளும் நாட்டின் முக்கிய நிர்வாக பதவியில் இருக்கின்றவர்களும் இங்கிருக்கின்றனர். உங்களுக்கு இந்த துறைகளில் நீண்ட அனுபவமும் முதிர்ச்சியும் இருக்கும்.

இந்த கூட்டம் ஏன் என்று நீங்கள் சிந்திக்கலாம். எமக்கு ஏனைய கூட்டங்களைப்போன்று அறிவுரைகள், சுற்றுநிரூபங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக இந்த விடயங்கள் பற்றி அறிவூட்ட முடியும். அத்தகைய அனைத்து வழிகளிலும் அறிவூட்டல்கள் இடம்பெற்றுள்ளன என்று நான் நினைக்கிறேன். என்றாலும் இங்கு நாம் உங்களை அழைத்தமைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஊடகங்களின் வாயிலாக அரசியல் மட்டங்களில் தற்போது அடிக்கடி கேட்கக்கூடிய விடயமாக இருப்பது இந்த வருடம் தேர்தல் வருடம் என்பதாகும். அவர்கள் அனைவரும் தேர்தல் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர். அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டிருக்கின்றபோது அரசாங்க அதிகாரிகளான உங்களது கடமை மற்றும் பொறுப்புக்களையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் ஆற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். கடந்த கால நிகழ்வுகளை பேசுவதோ அல்லது நாளை இருப்பவை பற்றி பேசுவதை மற்றும் சிந்திப்பதை பார்க்கிலும் இன்று நாங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பொறுப்புடன் செயற்பட வேண்டியது முக்கியமானதாகும். தேர்தல் வருடம் என்பதனாலேயே நாம் உங்களை அழைத்திருக்கிறோம். எமது பொருளாதார வளர்ச்சி வேகம் பற்றி நீங்கள் அறிவீ்ர்கள். பொருளாதார வளர்ச்சி பற்றி ஒருவகையில் கணக்கிடும் ஜீ டி பி (மொ.தே.உ) போன்று பூட்டானின் ஜீ என் எச் (மொத்த தேசிய மகிழ்ச்சி) பற்றியும் இங்கு விளக்கப்பட்டது. நான் நினைக்கிறேன் இலங்கை மக்களுக்கு இந்த மகிழ்ச்சி பற்றி அளவிடுவதில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று அரசியல்வாதிகள் மற்றது ஊடகங்கள் ஆகும். இந்த இரண்டு தரப்பினரும் தான் மகிழ்ச்சி பற்றிய விடயத்தில் தடைகளை ஏற்படுத்துகிறவர்கள். மகிழ்ச்சியை ஏற்படுத்தவிடாது எப்போதும் வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றவர்கள். அவை ஜனநாயக நாடொன்றிலுள்ள மக்களுக்கு பாதிப்பாக அமையும் பண்புகளாகவே நான் கருதுகின்றேன்.

எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 03 – 04 வீதமாக உள்ளது என நான் நினைக்கிறேன். கடந்த மாதம் நான் பிலிப்பைன்ஸுக்கு சென்றிருந்தேன். அங்கு பொருளாதார வளர்ச்சி வேகம் 9.5 வீதமாகும். அரசியல் துறையிலுள்ள அனைவரும் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற சூழலில் நீங்கள் அமைதியாக இருந்தால், உங்களது வினைத்திறன் குறையுமாக இருந்தால், நீங்கள் அரசியல்வாதிகள் கூறுகின்ற விடயங்கள் பற்றி கவனம் செலுத்த தொடங்கினால், யார் அடுத்த அரசாங்கம்? யார் அடுத்த ஜனாதிபதி? பொதுத்தேர்தல் எப்போது? மாகாண சபைத் தேர்தல் எப்போது? என நீங்கள் ஒரு பக்கத்திற்கு சாய்ந்தால் அடுத்த வருடத்தில் நாம் எதிர் மறையான விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படலாம். இவ் வருடத்தை நாம் நாட்டின் பொருளாதார துறையில் திருப்பு முனையாக மாற்ற வேண்டும்.

தேர்தல் வருடம் என்பதால் ஏனைய துறைகள் அபிவிருத்தியில் பின்னடைந்து விடுமா என்ற பெரியதோர் பயம் எனக்கு இருக்கிறது. அடுத்து வருகின்ற அரசாங்கத்தை யார் அமைத்தாலும் அவர்கள் இந்த வருடத்தில் நாம் வீழ்ச்சியடைவோமாக இருந்தால் பூச்சியத்தில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கும். சிலபோது அது அந்த நிலையை பார்க்கிலும் வீழ்ச்சியடையக்கூடும். எனவே எம் அனைவருக்கும் முக்கியமான பொறுப்புள்ளது. இது எமது கூட்டு முயற்சியை வேண்டி நிற்கிறது. ஒன்றாக இருந்து செயற்படும் முறைமையொன்றின் மூலம் நாம் வினைத்திறனாகவும் உரிய முறையிலும் அந்த பணியை நிறைவேற்ற வேண்டும்.

எமது நாட்டில் வேலை வாய்ப்பின்மை வீதம் சுமார் 5 – 6 வீதமாகும். வறுமை 40 வீதத்திற்கும் மேற்பட்டதாகும். நான் சுதந்திர தினத்தின் போது ஆற்றிய உரையில் அது பற்றி கூறியிருந்தேன். இரண்டு வாரங்களுக்குள் அந்த விடயங்கள் பற்றி பேசும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். அது இந்த நாட்டின் பொறுப்பு வகிக்கின்ற அனைவருக்கும் இந்த விடயத்தை வலியுறுத்த வேண்டும் என்பதாலும் இந்த விடயத்தில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்பதாலும் ஆகும். எமது பிள்ளைகளும் உங்களது பிள்ளைகளும் இந்த நாட்டிலுள்ள ஏனைய பிரஜைகளின் பிள்ளைகள் அனைவரும் நாளை பாரிய சவால் ஒன்றிற்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். இங்கு உரையாற்றிய பேராசிரியர்கள் பல முக்கியமான விடயங்களை முன்வைத்தார்கள். புதிய சமூக ஆய்வறிக்கைகளுக்கேற்ப நாட்டின் அரச துறையில் வினைத்திறன் 30 வீதமாகும். இந்த நாட்டில் சுமார் 16 லட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். எமது கிராம சேவகர் பிரிவு உள்ளிட்ட சிறிய அதிகார எல்லையில் உள்ளதைப்போன்று கள அலுவலர்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா? என்பது எனக்கு தெரியாது. அரச சேவையின் வினைத்திறன் 30 வீதமாக இருக்கின்ற நிலையில் நாம் செல்ல வேண்டிய இலக்கு எது? நாம் எப்படி எமது வினைத்திறனை 70 வீதமாக அதிகரிப்பது? இது சவாலான ஒன்றாகும். இது பாரிய பிரச்சினைக்குரிய நிலைமையாகும். உங்களது செயலமர்வில் இது பற்றி கலந்துரையாட இடமளிக்கப்பட்டால் இங்கு வருகைதந்திருக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் இது பற்றிய இன்னும் பல பிரச்சினைகளை முன்வைக்கக்கூடும் இந்த பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகாண வேண்டும். அரச சேவையின் வினைத்திறனை 70 வீதமாக அதிகரிப்பது கடினமானது. என்றாலும் 50 வீதமாவது அதிகரிக்க நாம் முயற்சிக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடுகின்றபோது அடிப்படையில் 30 வீதத்தை 70 வீதமாக அதிகரிப்பது கடினமானது என்றாலும் குறைந்த பட்சம் நாம் இன்றுள்ள 30 வீதத்தை 40 வீதமாகவாவது மாற்றமுடியும்.

இத்தகைய பிரச்சினைகளில் நூற்றுக்கு நூறு முழுமையாக செய்ய முடியாதென்பது உங்களுக்கு தெரியும். எனவே இந்த விடயத்தில் நாம் செய்ய வேண்டிய பணிகளில், தேவையான மாற்றங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். பிரதேச செயலகங்களில் உள்ள பணிக்குழாமினர், நிரல் அமைச்சுகள், மாகாண சபை பணிக்குழாமினர்கள் மற்றும் பிரதேச செயலாளருடன் நேரடியாக தொடர்புபடும் இந்த அனைவரையும் வினைத்திறனாக செயற்பட வைக்க முடியுமாக இருந்தால் நாம் எதிர்பார்க்கின்ற இந்த இலக்கில் குறிப்பிட்ட வீதத்தை அடைந்துகொள்ள முடியுமாக இருக்கும். இந்த விடயத்தில் நீங்கள் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். உங்களது அறிவு, ஆற்றல், முதிர்ச்சி, அனுபவம் என்பவை காரணமாகவே நீங்கள் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். இங்கு அரச சேவையில் பல்துறை சார்ந்தவர்கள் உள்ளனர். இதனை உங்களால் செய்ய முடியும். எனவே நான் உங்களிடம் அன்புடன் வேண்டிக் கொள்வது கிராமிய பாஷையில் சொல்வதனால் கடவுளின் பெயரால் நாட்டுக்காக அரசியல்வாதிகளை பார்க்காது உங்களது பணிகளை சரியாக செய்யுங்கள்.

நாம் கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து 02 வருடங்களாகின்றன. அதன் முன்னேற்றத்தை இங்கு நீங்கள் பார்த்திருப்பீர்கள். கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டம் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி இங்கு துறைசார்ந்தவர்களால் விளக்கப்பட்டது. நான் கிராமசக்தி வாரமொன்றை பிரகடனப்படுத்தியுள்ளேன். 18ஆம் திகதி முதல் ஒரு வார காலப்பகுதிக்கு இவ்வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாரத்தில் கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டத்தை போன்று ஏனைய பணிகளிலும் நீங்கள் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டின் வறுமை பற்றிய பிரச்சினைகளை புள்ளி விபரங்களின்றி நான் கூறுகின்றேன். அதிக வறுமை உள்ள பிரதேசமாக வடக்கும் அதற்கடுத்ததாக கிழக்கும் உள்ளன. அதாவது யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்கள், இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களையும் எடுத்துக்கொண்டால் புள்ளிவிபரங்களின் படி பொருளாதார, கலாசார, சமூக பின்புலத்தில் வெவ்வேறு விதமாக உள்ளன. சிங்கள மொழியை பேசுகின்றவர்களிடத்திலேயே சிங்கள மொழியில் எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன. தெற்கில் காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களில் பேசுகின்ற சிங்களத்திற்கும் மாத்தளை மற்றும் கண்டி பிரதேசங்களில் பேசுகின்ற சிங்களத்திற்கும் பாரிய மாற்றங்கள் உள்ளன. எமது நாடு ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த நாடாகும். இருந்தாலும் ஏன் நாம் பின்தங்கியிருக்கிறோம். எமது இந்த நூற்றுக்கு 30, நூற்றுக்கு 70 எப்படி போனாலும் நூற்றுக்கு 50 என்ற இலக்கை நிர்ணயித்து நூற்றுக்கு 40 யாவது அடைய முயற்சி செய்யுங்கள். இதனை தலைகீழாக மாற்றுவதற்கு தலைமைத்துவத்தை வழங்குங்கள் என நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டம் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று அரச துறை, தனியார் துறை மற்றும் மக்கள் என்ற முத்தரப்பும் ஒன்றிணைந்த விரிந்ததோர் தேசிய நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான விரிவானதொரு நிகழ்ச்சித்தி்ட்டமாகும். அதேபோன்று இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னுரிமைப் படுத்தப்படுபவர்கள் பெண்களும் இளைஞர்களும் ஆவர். நாம் எமது உற்பத்தி செயன்முறைகளில் எமக்குள்ள பாதிப்பான விடயம் தேசிய உற்பத்திகள் வீழ்ச்சியடைந்து செல்வதாகும். எனவே வெளிநாட்டு சொத்துக்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. தேவையை பார்க்கிலும் தேவையற்ற விடயங்கள் சந்தையில் மலிந்துள்ளன. இவற்றை எடுத்து நோக்கும் போது இந்த கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டம் தெளிவான ஒரு உற்பத்தி செயன்முறையாகும். உற்பத்தி செயன்முறையிலும் வறுமையை குறைப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை போன்று குடும்ப கட்டமைப்பில் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகும். வெளிநாட்டு சொத்துக்களை அதிகரிப்பதாகும். எமது நாட்டில் தயாரிக்கக்கூடிய பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இது பற்றி பேராசிரியர்கள் இங்கு விளக்கிக் கூறினார்கள். நாம் சிறுபராயத்தில் பாடசாலை விட்டதும் ஓடிச் சென்று தாய்மார்களை வற்புறுத்தி 15, 20 சதங்களை பெற்றுக்கொண்டு நிறத்தாள்களையும் நூலையும் வாங்கி மூங்கிலைக்கொண்டு பட்டம் செய்வோம். இன்று எமது சிறுவர்கள் பட்டமொன்றை செய்யும் அளவுக்கும் ஆக்கத்திறனற்றவர்களாக மாறியுள்ளனர். அவையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதுதான் இன்றைய நிலைமை. நாம் எப்படி இவற்றிலிருந்து விடுபடுவது.

நாம் பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகளை கிராமசக்தி அலுவலர்களாக பயன்படுத்துவது பற்றியும் அவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படுவதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த பொறுப்பை வகிப்பவர்கள் மட்டுமல்ல இன்று நாட்டில் உள்ள பொருளாதார சமூக பின்புலத்தை எடுத்து நோக்குகின்ற போது மிகவும் முக்கியமானது மாவட்ட செயலாளர்களின் அலுவலகத்தில் மாவட்ட பணியார்களையும் பிரதேச செயலாளர்களின் தலைமைத்துவத்தில் பிரதேச செயலக அலுவலர்களையும் வலுவூட்டுதல், வினைத்திறனாக செயற்பட வைத்தல் போன்ற விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டம் வறுமை ஒழிப்பை நோக்கமாக கொண்ட திட்டம் என்பதை நீங்கள் அறிவீ்ர்கள்.

போதைப்பொருள் ஒழிப்பிற்காக தற்போது நாம் முன்வைத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள். சுகாதார அமைச்சராக இருந்தபோதே நான் இதனை கொண்டு வந்தேன். கடந்த காலங்களில் அதனை நான் பலப்படுத்தியுள்ளேன். பொலிஸ் திணைக்களத்தை எனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் பல பெறுபேறுகளை காணக்கூடியதாக உள்ளது. போதைப்பொருள் பற்றிய பிரச்சினையில் நாங்கள் உங்களுக்கு கடந்த சில வருடங்களில் பல சுற்றுநிரூபங்களை அனுப்பியுள்ளோம். இவற்றில் இரண்டு சுற்றுநிரூபங்களில் அமைச்சுக்களின் செயலாளர்களின் தலைமையில் அமைச்சுக்களிலும் மாவட்ட செயலாளர்களின் தலைமையில் மாவட்ட செயலகங்களிலும் பிரதேச செயலாளர்களின் தலைமையில் பிரதேச செயலகங்களிலும் அனைத்து அரசாங்க திணைக்களங்களிலும் அனைத்து நிறுவனங்களிலும் நிறுவனத் தலைவர்களின் தலைமைத்துவத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவொன்றையும் போதைப்பொருள் ஒழிப்பு குழுவொன்றையும் ஆரம்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த சுற்றுநிரூபத்திற்கமைவாக அந்த விடயங்கள் நடைபெறுகின்றனவா என்பது பற்றி எனக்கு தெரியாது. என்றாலும் சில இடங்களில் அந்த சுற்றுநிரூபங்களுக்கு அப்பால் சென்று பிரதேச செயலாளர்களும் கள அலுவலர்களும் குறிப்பாக பொதுச்சுகாதார பரிசோதகர்களும் குடும்ப சுகாதார பரிசோதகர்களும் கிராம சேவகர்களும் இணைந்து சில கிராமங்களை போதைப்பொருளே இல்லாத கிராமங்களாக மாற்றியிருக்கின்றனர். அதேபோன்று இன்னும் சில பிரதேசங்களில் இத்தகைய எந்த நிகழ்ச்சித்திட்டமும் கவனத்திற்கொள்ளப்படாது போதைப்பொருட்களினால் சீரழிந்த நிலைமைகள் உள்ளன.

எனது அனுபவத்தின் படி நான் வடக்குக்கு சென்ற மூன்றரை வருட காலப்பகுதியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பிரதேசங்களில் எந்தவொரு கிராமத்திற்கு சென்றாலும் காணாமல் போன பிள்ளைகளின் தாய்மார்கள் என்னை சூழ்ந்துகொண்டு தங்களது பிள்ளைகளை தேடித்தருமாறு கோரி நின்றனர். தற்போது 10 வருடங்களாகின்றன. அவற்றுக்கும் தீர்வுகள் வழங்கப்பட்டு அவற்றிற்கு ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியும். எனவே அந்த குரல்கள் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளன. இப்போது நான் வடக்கிற்கு செல்கின்றபோது அங்குள்ளவர்கள் எதனை கேட்கிறார்கள்.

அண்மையில் நான் இரணைமடு நீர்த்தேக்கத்தை திறந்து வைக்கச் சென்றிந்தேன். அங்குள்ள மக்கள் எமக்கு இங்கு வாழ முடியாது. இப்பிரதேசத்தில் சாராயம், கசிப்பு, கஞ்சா போன்றவற்றை ஒழிப்பதற்கு உதவுங்கள் எனக் கூறுகின்றனர். பிள்ளைகளை கேட்ட தாய்மார்கள் தற்போது போதைப்பொருட்களை ஒழிக்குமாறு கேட்கின்றனர். இது இன்று முழு நாட்டினதும் குரலாக மாறியிருக்கின்றது. இதன் முக்கியத்துவம் மற்றும் இதன் பின்னணி காரணமாகவே நாம் அதனை ஒழிப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். நான் மூன்று வாரங்களுக்கு முன்னர் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபையொன்றை அமைப்பதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டேன். இதில் முக்கியமாக அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. இந்த நாட்டில் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றவர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமாகும். புனர்வாழ்வு அளிக்கும் நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன. இருக்கின்றவை பற்றியும் திருப்தியடைய கூடிய நிலையில்லை. இந்த போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதேபோன்று அதற்கு அடிமைப்பட்டிருப்பவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்துவது பற்றியும் இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி அலுவலகத்தினால் பல முக்கிய நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். நான் கடந்த சில தினங்களாக பல கிராமங்களுக்கு சென்ற வேளையில் பலரும் எனது தலையில் புதியதோர் பிரச்சினையை போட்டார்கள். எவ்வளவு தான் நாம் மரங்களை நாட்டினாலும் மாலையில் பார்க்கின்ற மரங்கள் காலையாகும் போது காணக்கிடைப்பதில்லை. காடுகளில் மட்டுமல்ல கிராமங்களிலும் முக்கியமாக இருக்க வேண்டிய மரங்களுக்கு என்ன நடக்கின்றன என்பது தெரியாது. ஒருவர் என்னிடம் கூறினார் நான் குறிப்பிட்ட ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறேன். மாலையில் செல்லும்போது அந்த மரம் அங்கிருக்கிறது. அடுத்த நாள் காலையில் செல்லும் போது மரம் இல்லை எனக் கூறினார். அதற்கு என்ன தீர்வு என அவரிடம் கேட்டேன். எல்லா இடங்களிலும் குறிப்பிடப்பட்ட விடயம் தான் சென்சோ இயந்திரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பதாகும். சிறிய இயந்திரங்கள் முதல் பாரிய இயந்திரங்கள் பல உள்ளன. மரம் இருந்த இடமே தெரியாத அளவுக்கு ஆச்சரியப்படத்தக்க வகையில் மரங்கள் வெட்டப்படுகின்றன. எனவே சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருதி சுற்றுநிரூபமொன்றை இவ்வாரம் வெளியிடுவதற்கு நான் தீர்மானித்தேன். நாளை முதல் இது பற்றி ஊடகங்களினூடாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும். பெப்ரவரி 15 திகதி முதல் மார்ச் 01ஆம் திகதி வரை தங்களிடமுள்ள சென்சொ இயந்திரங்கள் பற்றி அருகிலுள்ள பொலிஸில் பதிவுசெய்ய வேண்டும். இதுபற்றி பொலிஸாருக்கு சுற்றுநிரூபமொன்று அனுப்பி வைக்கப்படும். பொலிஸார் அதுபற்றி அறிக்கையை தயாரிக்க வேண்டும்.

மேலும் இவற்றிற்கு அனுமதிப் பத்திரங்கள் பெறப்பட வேண்டும். இதற்கு நாம் கால அவகாசம் ஒன்றை வழங்குவோம். மார்ச் மாதம் முழுவதும் சென்சோ இயந்திரங்களுக்கான அனுமதி பத்திரங்களை பெறுவதற்கான மாதமாக வழங்கப்படும். வீதியில் எடுத்துச் செல்வதாயினும் மரங்களை வெட்டுவதாயினும் இந்த அனுமதி பத்திரம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கைது செய்யப்பட்டு காடழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும். தற்போது நாட்டின் வன அடர்த்தி 28% ஆகும். இதனை 32% ஆக அதிகரிக்க நாம் முயற்சி செய்கிறோம். ஒவ்வொரு வருடமும் 1.5% குறைந்து கொண்டே செல்கிறது. எனவே இன்னும் சில வருடங்களில் இந்த 28% அழிந்து விடமுடியும். அப்போது செவ்விந்தியர்களின் தலைவர் கூறிய கதைதான். வளியும் இல்லை, நீரும் இல்லை, மரம் செடிகளும் இல்லை.

எனவே முக்கியமாக இந்த விடயங்களில் நாம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்துவதைப்போன்று நாட்டுக்காக, எமது எதிர்கால தலைமுறைக்காக சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு நீங்கள் அனைவரும் உறுதிபூண வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். மரங்கள், காடுகள் வாழ்நாள் முடிந்து இறந்து விட்டால் அவை உரமாகவும் விறகாகவும் பயன்படுத்தப்படுகின்றன. விலங்குகள் இறந்துவிட்டால் அவற்றின் எலும்புக்கூடுகள் கண்காட்சிக்காக எடுக்கப்படுகின்றன. பொருட்கள் தயாரிப்பதற்காகவும் மருந்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் உயிரினங்களில் சிரேஷ்டமான உயிரினமான மனிதன் இறந்து போனால் எதற்காகவும் அந்த உடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. வெறும் பூமியோடு மண்ணாய் போகிறது. மரம், செடி, கொடிகள், விலங்குகள் மனிதனைப்போல் அல்லாது தெளிவாக பேண்தகு அபிவிருத்திக்கு பயன்படுகின்றன.

பேண்தகு தேசிய கொள்கை இன்று ஐக்கிய நாடுகள் அமைப்பினூடாக புதிய எண்ணக்கருவின் படி நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பேண்தகு அபிவிருத்தியின் கருத்தாவாக இருப்பவர் புத்தபெருமான் ஆவார். அதுபோன்று கிறிஸ்தவம், இந்து மற்றும் இஸ்லாம் சமயங்களும் இதுபற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளன. உலகில் தோன்றிய அனைத்து சமய பெரியார்களும் சுற்றாடல் பாதுகாப்பு பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

மாவட்ட விவசாய குழு தற்போது சேனா படைப்புழு பற்றிய பிரச்சினையை போன்று விவசாயத் துறை முகங்கொடுத்துள்ள சவால்களை பற்றி கவனம் செலுத்தி வருகிறது. அண்மையி்ல் வெளியிடப்பட்ட காலநிலை மாற்றம் பற்றிய சர்வசே அறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 2019ஆம் ஆண்டின் காலநிலை மாற்றம் பற்றிய பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்துவரும் காலங்களில் எத்தகைய காலநிலை மாற்றங்களுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது. எமது இடர் முகாமைத்துவ பிரிவு, மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அமைச்சு மட்டங்களிலுள்ளவர்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மட்டுமன்றி அனைவரும் அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக இருப்பதுடன், குறித்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனவே அனைவரும் தேவையான விடயங்களுக்கு அரச அதிகாரிகள் என்ற வகையில் தலைமைத்துவத்தையும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். இவை நாம் செய்ய வேண்டிய பணிகளாகும். மாகாண சபைகள் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 30 வருடங்கள் ஆகின்றன. எனினும் அபிவிருத்தி பிரச்சினைகள் இன்னும் தீர்ந்தததாக இல்லை. எனவே நிரல் அமைச்சுக்கள், மாகாண சபைகள் நெருங்கிப் பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.

இக்காலப்பகுதியில் பெரும்பாலான மாகாண சபைகளில் பொறுப்பு ஒருவரிடமே உள்ளது. ஆளுநர்கள் 06 மாகாணங்களை நிர்வகிக்கின்றனர். அரசியல் தலைமைகள் இருக்கின்ற போதுதான் இந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன. எனவே ஆளுநர்கள் உள்ள 06 மாகாண சபைகளினதும் முதலமைச்சர்கள் இங்கிருக்கிறார்கள். நிரல் அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிநிதிகள் இங்கிருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினையான நிலைமைகளை தவிர்த்து தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுங்கள். ஆளுநர்களுக்கு சில திடீர் நிலைமைகளுக்கு தீர்வுகளை வழங்க முடியாது. அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்கிறார்கள். தேவையான அரசியல் தலைமைத்துவம் இருக்கின்ற போதுதான் அவர்கள் அவற்றை செய்கிறார்கள். எனவே குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாத 06 மாகாண சபைகளிலும் கல்வித்துறையில் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நான் ஆளுநர்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இங்கு முன்வைக்கப்பட்ட விடயங்களில் உங்களுக்கு சிறந்த தெளிவு கிடைத்திருக்கும் என நான் நம்புகிறேன்.

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் தனியார் துறை இந்த அனைத்தும் ஒன்றாக இணையும் போதுதான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். பொருளாதார வளர்ச்சி வேகம் இருக்கின்ற நிலையில் நாம் இன்னும் அமைதியாக இருந்தால் நாம் மேலும் பின்னடைய வேண்டியேற்படும். இந்த விடயங்கள் கசப்பாக இருந்தாலும் உண்மையை கூறுவதில் சிலருக்கு விருப்பமில்லை. என்றாலும் இந்த கசப்பான விடயங்களை நான் தொடர்ந்தும் கூறுவது இருக்கின்ற நிலைமைகளை விளங்கிக்கொண்டு அவை குறித்து கவனம் செலுத்தி எமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதனால் ஆகும்.

இந்த மண்டபத்தில் 25 மாவட்ட செயலாளர்களும் 332 பிரதேச செயலாளர்களும் உள்ளனர். என்றாலும் நாட்டின் சுமார் 21 மில்லியன் மக்களின் பொறுப்புகள் உங்களது கைகளிலேயே உள்ளன. வினைத்திறன் மற்றும் நியமங்களுடன் ஊழல், மோசடி இல்லாத அபிவிருத்தி திட்டங்கள் பற்றி என்னை சந்திக்க வந்த பெரும்பாலானவர்கள் என்னிடம் கேட்பது எமக்கு இந்த வேலையை படையினரை கொண்டு செய்து தாருங்கள் என்பதாகும். ஏனென்றால் படையினர் முறையாகவும் வினைத்திறனாகவும் அந்த பணிகளை செய்கின்றனர். எனவே அனைத்து அபிவிருத்தி பணிகளுக்கும் இராணுவத்தினரை கேட்கும் புதிய கலாசாரம் ஒன்று நாட்டில் உருவாகியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையிலும் பொலிஸ் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என்றாலும் கொடூர பயங்கரவாதத்தை தோல்வியுறச்செய்த எமது படையினர் பற்றி வடக்கு மக்களிடம் எத்தகைய விமர்சனங்கள் இருந்தபோதிலும் கிராமங்களிலுள்ள பொதுமக்கள் அவர்களை மிகவும் நேசிக்கின்றனர். அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகளின் போதும் எமது படையினர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். நியமங்கள், வினைத்திறனாயினும் தூய்மையாகவும் ஊழல் மோசடியில்லாமலும் பணிகளை மேற்கொள்ள இராணுவத்தினரை கோருவதாக இருந்தால் எமது அடுத்த படையினரே நிர்வாக சேவையிலுள்ளவர்கள். கணக்கீட்டு சேவை, திட்டமிடல் சேவை, கல்வி, சுகாதாரம், விவசாயம் இவையனைத்தும் படைப்பிரிவுகளாகும். ஆனால் மக்கள் இதனை மறந்து ஏன் இராணுவத்தினரை கேட்கின்றனர். அது உங்களுக்கு விளங்கும் என நான் நினைக்கிறேன்.

இன்று இந்த நிகழ்விற்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கிய உங்கள் அனைவருக்கும் இங்கு உரைகளை நிகழ்த்தியவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம்.

நன்றி

 

Share This Post

NEW