நாட்டின் எதிர்காலத்திற்காக ஊழலில் இருந்து விடுபட்ட ஜனநாயக அரச நிர்வாகம் தேவை  –   ஜனாதிபதி

நாட்டின் எதிர்காலத்திற்காக ஊழலில் இருந்து விடுபட்ட ஜனநாயக அரச நிர்வாகம் தேவை  –   ஜனாதிபதி

நாட்டுக்காக அரசியல் புரியும் பெரும்பான்மையானோரை மக்களின் ஊழியர்களாக வழங்குவதற்கே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முயற்சிப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (05) பிற்பகல் எல்பிட்டிய பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தொடர்புகளை அடிப்படையாகக்கொண்டு ஊழலுக்கு வழிவகுப்பது அரசியல் கொள்கையாக அமையக்கூடாதென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் எதிர்காலத்திற்காக ஊழலில் இருந்து முற்றிலும் விடுபட்ட மக்கள் நேய அரசியல் ஒன்றே தேவை என்றும் தெரிவித்தார்.

தனது ஐந்து வருட கால ஆட்சி காலத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் தன்னால் முன்னெடுக்கப்பட்டதென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் ஊழல்களைப் போன்றே தற்போதைய அரசாங்கத்தின் ஊழல்களையும் கண்டறிவதற்கு ஆணைக்குழுக்களை உருவாக்கிய ஒரே ஜனாதிபதி தான் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதிகளுக்கு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களான கொலை, தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அரசியல் பழிவாங்கல்கள் போன்ற எந்தவொரு குற்றச்சாட்டும் தன்மீது சுமத்தப்படவில்லை என்றும், எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஆட்சி காலத்தை நிறைவு செய்து விடைபெறும் தனக்கு மேற்குறிப்பிட்ட எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி தூய்மையான அரசியல்வாதியாக அடுத்தக் கட்டத்தில் காலடி எடுத்து வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது தூய்மையான மற்றும் சரியான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

“தீர்ப்பு சரியான திசையில்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடளாவிய ரீதியில் நடத்திவரும் மாநாட்டுத் தொடரின் காலி மாவட்டத்திற்கான மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் எல்பிட்டிய பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, வீரகுமார திசாநாயக்க, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் த சில்வா, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, எல்பிட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அமில காரியவசம் ஆகியோர் உள்ளிட்ட பிரதேசத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலரும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW