800 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமசக்தி கிராமம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு

800 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமசக்தி கிராமம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு
  • கிராமிய மக்களின் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காகவே போதைப்பொருளுக்கு எதிரான விரிவான தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது – ஜனாதிபதி

 கிராமசக்தி மக்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் 800 இலட்ச ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள அநுராதபுரம், பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இன்று (09) முற்பகல் இடம்பெற்றது.

2018 டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் பளுகஸ்வெவ ஆசிரிகம கிராமத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது அங்குள்ள மக்கள் தமது குறைகள் குறித்து ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்திருந்தனர்.

அப்போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கேற்ப வறுமையை ஒழித்துக் கட்டுவதற்காக ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் உறுப்பு கிராமமொன்றாக இராணுவத்தினரின் உதவியுடன் ஆசிரிகம கிராமம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

பிரதேச விகாரைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைத்துக்கொடுத்தல் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளும் இரண்டு முன்பள்ளி பாடசாலைகளை அமைத்தல், “சேவா பியச” கட்டிடம் மற்றும் வீதி முறைமையை அபிவிருத்தி செய்தல் என்பனவும் இதன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதேச மக்களின் முக்கிய பிரச்சினையாக இருந்து வந்த சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆசிரிகம மக்களின் வீட்டுத் தேவைகளை நிறைவுசெய்து 43 வீடுகளின் நிர்மாணப் பணிகள், ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட 22 வீடுகளை ஜனாதிபதி அவர்கள் இன்று வழங்கி வைத்தார்.

தமது கோரிக்கைகளை ஏற்று அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக பிரதேச மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் கிராமிய மக்களின் வறுமை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் போதைப்பொருளாகும் என குறிப்பிட்டார்.

எனவே தான் போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் விரிவான நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எதிர்காலத்தில் சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்காக போதைப்பொருளிலிருந்து விடுதலைபெற்ற கிராமத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.

புதிய வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதி அவர்கள் இரு வீடுகளை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் ஏனைய வீட்டு உரிமையாளர்களுக்கான வீட்டினது சாவிகள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் கெக்கிராவ மத்திய கல்லூரியில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பீ.பி.அபேகோன் கேட்போர்கூடத்தை ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.

450 இலட்ச ரூபா செலவில் சகல வசதிகளுடன் இந்த கேட்போர்கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரும் நன்மதிப்பை பெற்ற அரசாங்க அதிகாரியுமான கெக்கிராவ மத்திய கல்லூரியின் பழைய மாணவர் பீ.பி.அபேகோன் அவர்களின் பெயரினை இந்த கேட்போர்கூடத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

கல்லூரியின் அதிபர்  ஐ.எம்.தயாரத்ன பண்டார உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW