ஊழல், மோசடிகளுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. – ஜனாதிபதி

ஊழல், மோசடிகளுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. – ஜனாதிபதி

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரான 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக மேற்கொள்ள முடியாது போன பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டு, ஊழல், மோசடிகளற்ற தூய்மையான ஆட்சியொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு நல்லாட்சி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இன்று (05) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவை சுயாதீன ஆணைக்குழுவாக பலப்படுத்துதல் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழுவை அமைக்கக் கிடைத்தமை இதன் முக்கிய வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.

40, 50 வருட காலமாக பேச்சளவில் மட்டுமே இருந்துவரும் கணக்காய்வு சேவையை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

ஊழல், வீண்விரயம் மற்றும் திருட்டுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் இருந்துவரும் காலதாமதம் தொடர்பாக நாட்டு மக்களின் கவலை  குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக தான் நியமித்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்தி தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

இதன்போது மக்களின் சொத்துக்களையும் அரச நிதியையும் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்தில் மரண தண்டனையையும் உட்படுத்த வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அரச வர்த்தக துறைகளில் எழுச்சியை ஏற்படுத்தும் போது ஊழல் மோசடிகள் இல்லாத வகையில் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், ஊழல் மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் நிறுவனங்களின் பௌதீக மற்றும் மனித வளங்களை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கணக்காய்வாளர் நாயகத்தினால் அரச நிறுவனங்கள் தொடர்பாக கணக்காய்வு விசாரணைகளை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை பரிசீலனை செய்யும் பாரம்பரிய முறைமைகளைக் கடந்து அரச கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் கண்காணிப்புக்கு உட்படும் அனைத்து அரச நிறுவனங்களினதும் நிதி நிர்வாகம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டிருத்தல் மற்றும் செயலாற்றுகை தொடர்பான தகவல்களை கணனி மயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பெற்று அதன் பின்னர் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தினால் அத்தகவல்களை பகுப்பாய்வும் விசாரணையும் செய்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம் உயர் செயலாற்றுகையை வெளிப்படுத்தும் நிறுவனங்களை பாராட்டும் வகையில் இரண்டாவது முறையாகவும் இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2016 நிதி ஆண்டிற்கான முதலாவது பாராளுமன்றத்தின் கணனி மயப்படுத்தப்பட்ட தகவல் முறைமையின் மூலம் நாடெங்கிலும் உள்ள சகல அரசாங்க நிறுவனங்களினதும், அதாவது மத்திய அரசாங்கத்தின் சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், விசேட செலவுப் பிரிவுகள், மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட 837 நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை மதிப்பீடு செய்ததன் பின்னர் பல்வேறு பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குறித்த நிதி ஆண்டில் அதிக செயலாற்றுகையை வெளிப்படுத்திய 101 நிறுவனங்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க, அரச கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அரச கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 05.09.2018, பாராளுமன்ற வளாகம்

பாராளுமன்றத்தில் இடம்பெறும் செயற்பாடுகளில் பெரும்பாலும் அங்கு இடம்பெறும் பாராளுமன்ற விவாதங்கள் தொடர்பிலேயே பொதுமக்கள் அறிகின்றனர். ஆயினும் அதற்கு மேலதிகமாக அரச நிர்வாகத்தின் பல முக்கிய செயற்பாடுகளை பாராளுமன்றம் நிறைவேற்றுகின்றது என்பதை நாம் அறிவோம். பாராளுமன்றத்தின் அரச கணக்குகள் மற்றும் பொது வியாபார முயற்சிகள் பற்றிய பாராளுமன்ற குழுக்கள் அவற்றுள் மிக விசேடமானவை. அதன் தலைவரும் உறுப்பினர்களும் தமது பதவிக்காலத்திற்குள் தமக்கான கடமைகளையும் பொறுப்புக்களையும் உரியவாறு நிறைவேற்றுவார்களாயின் அரச சேவையில் இடம்பெறும் கணக்கு நடவடிக்கைகள், கண்க்காய்வு செயற்பாடுகள் மிகத் தூய்மையாகவும் வினைத்திறனாகவும் இடம்பெறுவதுடன், நாட்டின் அபிவிருத்திக்கும் அவை பாரிய பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும். ஆகையினால் லசந்த அழகியவண்ண அமைச்சருக்கு நான் முதலில் நன்றி கூறவேண்டும். அத்துடன் இக்குழுவில் செயலாற்றும் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த நாட்டின் அரச சேவையிலுள்ள பல்வேறு துறைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், வியாபார பிரிவுகளில் எழுச்சியை ஏற்படுத்த அவர்களது முயற்சியே காரணமாகும். ஊழல், மோசடி மற்றும் முறைக்கேடுகளின்றி செயற்படுவதற்கான எமது முயற்சி பல சந்தர்ப்பங்களில் பலரதும் கேலிபேச்சுக்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. நல்லாட்சி எண்ணக்கரு பற்றிய உண்மையான நோக்கில் அரச நிர்வாகத்தில் அதனை​ அறிமுகப்படுத்தி நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் அதனை தெளிவுபடுத்த வேண்டுமாயின் ஊழல், மோசடிக்கு எதிரான செயற்பாடுகளை மேலும் பலப்படுத்த வேண்டும். அரச கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் செயற்பாடு இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்பணிகளில் கௌரவ சபாநாயகரின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலை நான் மிகவும் பாராட்டுகின்றேன்.

எமது நாட்டில் 14 இலட்சத்திற்கும் அதிகமான அரச சேவையாளர்கள் உள்ளனர். தனியார் துறையில் 22 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அவ்விரு தரப்பினரும் அவ்விரு துறைகளிலும் ஆற்றும் செயற்பாடுகளில் காணப்பட வேண்டிய வெளிப்படைத்தன்மை, வினைத்திறன், முறையான தன்மை ஆகியனவற்றைக் கருத்திற்கொள்ளும்போது நாட்டிற்கு அவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இந்த நாட்டின் கடந்த சில தசாப்தங்களை கருத்திற்கொள்ளும்போது சகல அரசாங்கங்களும் இதுபோன்ற சிறந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சட்டதிட்டங்களை உருவாக்கியுள்ளன. புதிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளன. அவற்றுள் ஒரு சில நோக்கங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. சில நிறைவேற்றப்படவில்லை. சில தோல்வியடைந்துள்ளன. அதனடிப்படையில் நோக்குவோமாயின், நாட்டின் குறிக்கோள்களை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டுமாயின் அரச கணக்குகளுக்கான பாராளுமன்ற குழுவின் நடவடிக்கைகளை வினைத்திறனாகவும் சரியாகவும் பேணப்பட வேண்டியது அவசியமாகும். அதனால் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளில் விசேடமாக அரச நிறுவனங்களிலிருந்து கிடைக்கப்பெறும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை கணக்காய்வு செய்து வழங்கப்படும் இந்த விருது விழா மிகவும் முக்கியமானது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற விருது விழாவில் உரையாற்றிய விடயங்கள் இன்றும் எனக்கு ஞாபகம் வருகின்றது. அதிக புள்ளிகளை பெற்றவர்களைப் பாராட்டி விருது வழங்கப்படுவதைப் போன்றே குறைந்த புள்ளிகளை பெறுபவர்களுக்கும் சான்றிதழ் வழங்கினால் சிறப்பானதாக இருக்கும். இதனால் அவர்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்பதற்கான காரணத்தை அறிவார்கள். பெரும்பாலும் இந்த போட்டிகளில் சிறந்தவர்களுக்கே விருதுகள் வழங்கப்படுகின்றன. பாராட்டப்படுகின்றனர். இறுதியாக வந்தவர்களுக்கு ஏன் அவ்வாறு நேர்ந்ததென்பதை நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய நிகழ்வுகள் இடம்பெறுவதில்லை. விருது பெறாதவர்கள் விருதுகளை வெற்றிகொள்ள வேண்டுமாயின் விருது பெறாதவர்களையும் இணங்கண்டு அவர்கள் பாராட்டப்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் என்ற வகையில் நாம் நல்லாட்சி எண்ணக்கருவுடன் நாட்டின் அரச சேவையில் ஊழல், மோசடி மற்றும் முறைக்கேடுகளை இல்லாதொழிப்பதற்கு புதிய நிறுவனம் ஒன்றை அமைத்தோம். பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதனூடாக ஊழல், மோசடி பற்றிய விசாரணை ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவாக பலப்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊழல், மோசடி பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாடு என்ற வகையில் கருதும்போது தூய்மையான அபிவிருத்தி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக முக்கியமானவை என்பதை மறுக்க முடியாது.

கணக்காய்வு ஆணைக்குழு நிறுவப்பட்டமை நாம் பெற்ற வெற்றிகளுள் மிக முக்கியமானதாகும். சுதந்திரத்தின் பின்னர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல், மோசடியை தடுப்பதற்காக, அரச சேவையில் தூய்மையான நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட முடியாதிருந்த முக்கிய பல தீர்மானங்களை நாம் மேற்கொண்டோம். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவாக பலப்படுத்தப்பட்டு அதற்கு தேவையான சட்டதிட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டமை அவற்றுள் முதன்மையானதாகும். கணக்காய்வு ஆணைக்குழுவுடன் கணக்காய்வு சேவையை நிறுவுதலையும் மிகத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அதற்கமைய கணக்காய்வு சேவையை வெகுவிரைவில் ஸ்தாபிக்க எதிர்பார்க்கின்றேன்.

ஊழல், மோசடி, திருட்டு தொடர்பாக கருதுகையில் நாட்டில் இதுவரை அமுலிலுள்ள சட்டதிட்டங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளை நாம் அவதானிக்கின்றோம். அந்த குறைபாடுகளினால் தண்டனை வழங்கப்படுதல் தாமதமாகின்றன. பெரும்பாலும் சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தினால் அந்நாடுகளில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பல ஆண்டுகள் வரை தொடர் வழக்கு விசாரணைகள் இடம்பெறமாட்டாது. இலங்கையில் மரண தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்கள் எவை? இலங்கையில் கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. இராஜ துரோகத்திற்கு மரண தண்டனை உள்ளது. கூட்டு வன்புணர்வுக்கு மரண தண்டனை உள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்கும் மரண தண்டனை உள்ளது. எனினும் இவை எவையும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே தண்டனைகள் சட்ட புத்தகத்தில் இருந்தபோதும் தவறிழைப்பவர்கள் அதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் அவர்களே! சபாநாயகர் அவர்களே! நான் இந்த பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் இதுபோன்றதோர் முக்கியமான பணியை நிறைவேற்றும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இந்த நாட்டில் அரச சொத்துக்களை திருடுவதற்கு எதிராக, ஊழலுக்கு எதிராக மரண தண்டனை சட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டும். இக்காலத்தில் அது செய்யப்படுமானால் எனது பதவிக்காலத்தில் ஓரிருவருக்கேனும் அந்த தண்டனையை வழங்கி விட்டுச்செல்ல நான் தயாராக இருக்கிறேன். தண்டனை இல்லாத காரணத்தினால் அனேகமானவர்கள் பயமின்றி குற்றங்களை செய்கிறார்கள்.  இந்த அழகிய தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் உலகில் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளின் வளமான நிலைக்கு கட்டியெழுப்ப வேண்டும். நாம் எமது பணிகளை சரியாக செய்வோமேயானால் எமக்கு நீண்ட காலம் அதற்குத் தேவையில்லை. ஒவ்வொருவரும் கூட்டாக தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவார்களேயானால் எமக்கு 05 வருட காலப்பகுதியில் அதனை செய்யமுடியும். மேல் மட்டங்களில் இருக்கின்றவர்கள் திருடுவதை நிறுத்துவது அதில் முக்கியமானதாகும். அரசியல்வாதிகளைப் போன்றே அவர்களுக்கு கீழே இருக்கின்றவர்களும் ஒரு நாளில் உரிய நேரத்திற்கு வேலைசெய்ய வேண்டும். 08 மணித்தியாலங்களேனும் சரியாக வேலை செய்வதில்லை என்று சபாநாயகர் அவர்கள் குறிப்பிட்டார். நான் கூறுவது என்னவென்றால் அரசியல் துறையிலும் அரச அதிகாரிகளும் மேற்கொள்கின்ற பாரிய ஊழல், மோசடிகளை ஒழித்து அரச சேவையில் கீழ் மட்டங்களில் உள்ளோரும் ஏனைய வெளி நிறுவனங்களில் நாளொன்றிற்கு 04 மணித்தியாலம் சரியாக வேலை செய்வார்களேயானால் இந்த நாட்டை 05 ஆண்டில் ஒரு அழகிய நாடாக மாற்ற முடியும்.

நான் கடந்த வாரம் நேபாளத்திற்கு சென்றிருந்தேன். இதுபோன்று ஒரு நாட்டுக்கு செல்கின்றபோது தான் எமது நாடு எவ்வளவு சிறந்த நிலையில் உள்ளது என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த நாடுகளிலுள்ள நிலைமைகளையும் நாம் இருக்கின்ற நிலைமையையும் ஒப்பிட்டு பார்த்தால் எமக்கு இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு மிகவும் சொற்பமான பணிகளே உள்ளன என்பதை விளங்கிக்கொள்ள முடியும். அடுத்த விடயம் ஊழல், மோசடிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கின்ற போது அந்த நிறுவனங்களை வளப்படுத்துவதும் அவற்றில் பணி செய்கின்றவர்களை வளப்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், அவர்களுக்கு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுத்தல். அவர்களுக்கு தேவையான பௌதீன மற்றும் மனித வளங்களைப் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும். கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளம் தொடர்பான திருத்தங்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளாக காலந்தாழ்த்தப்பட்டு வருகின்றது. ஏன் இப்படி நடைபெறுகின்றது என்பது எனக்கு தெரியாது. இப்படி நடக்குமானால் நேர்மையாக பணிசெய்கின்ற அதிகாரிகளும் பலவீனமடையும் நிலை ஏற்படும். தனது சம்பளம் கூட சரியாக கிடைக்காமல் இருப்பது பாரிய பிரச்சினையாகும். எனவே அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களை நாம் பலப்படுத்த வேண்டும். அப்போது தான் பணிகள் சிறப்பாக நடக்கும். ஒவ்வொரு துறைகளிலுமுள்ள சேவைகளை எடுத்துக் கொண்டால் ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பாக நான் நியமித்த ஆணைக்குழுவின் நிலைப்பாட்டினால் ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அங்கு எவ்வளவு ஊழல் இடம்பெற்றுள்ளது. எவ்வளவு தூரம் முறையற்ற விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீ்ர்கள். எனவே அவ்வாறு தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதை துரிதப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். 32 முறைப்பாடுகள் தொடர்பில் அண்மையில் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கெளரவ பிரதமர் அவர்களே! சபாநாயகர் அவர்களே! அந்த ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படுவது மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுவதாக நான் காண்கிறேன். மத்திய வங்கி தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பான இந்த விசாரணை அறிக்கைகள் மற்றும் விசாரணையின் மூலம் கிடைக்கப்பெறும் பெறுபேறுகள் நாட்டின் பொதுமக்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும். தண்டனை வழங்கப்படுவது துரிதப்படுத்தப்படுகின்றது. இந்த செயற்பாட்டில் ஏற்படும் மந்த கதியின் விளைவு பாதிப்பானதாகும். காலஞ்செல்கின்ற போது அவை நீண்ட நாள் பிரச்சினையாக மாறிவிடுவதுடன், பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் காணாமல்போய் விடுவார்கள். விசாரணைகள் கைவிடப்படும். அதிகாரிகள் இறந்து விடுவார்கள். அரசாங்கங்கள் மாறிவிடும். இதன் மூலம் மக்கள் கவலையடைகின்றனர்.

இவற்றிற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொண்டு நிறைவான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராக இருக்க வேண்டும். தண்டனைகளை வழங்க வேண்டும். இதன்மூலம் இந்த நடவடிக்கைகளில் சிறந்த வெற்றிகளை காண முடியும். அந்த வகையில் அரச கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழு தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருதுகளை பெற்றுக்கொள்கின்ற நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன். இதன்மூலம் நீங்கள் உங்களது பொறுப்புக்களை நிறைவேற்றி இருக்கின்றீர்கள். அதேபோன்று நாம் எதிர்பார்க்கின்ற நோக்கங்களை  அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி.

 

Share This Post

NEW