நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது அன்று போன்றே இன்றும் எனது அரசியல் கொள்கையாகும் – ஜனாதிபதி

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது அன்று போன்றே இன்றும் எனது அரசியல் கொள்கையாகும் – ஜனாதிபதி

தவறான முறையில் வழக்கு தாக்கல் செய்ய ஆலோசனை வழங்கிய கீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை திருமதி.தில்ருக்ஷி டயஸ் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலை அவர்களின் கோரிக்கைக்கு அமையவே ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவில்லை…

நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை இரத்து செய்ய வேண்டும் என்பது அன்று முதல் இன்று வரை தான் பின்பற்றும் அரசியல் கொள்கையாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அச்செயற்பாடுகளுக்கு தடையாக இருந்தது தான் அல்ல பாராளுமன்றமே என்றும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் அதற்காக முயற்சிப்பது வேடிக்கையான விடயம் என்றும் தெரிவித்தார்.

இன்று (21) பிற்பகல் நாவுலவில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்டத்திற்கான மாநாட்டின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்காக அண்மையில் கூட்டப்பட்ட அவசர அமைச்சரவைக் கூட்டமானது, தனது தேவைக்காக கூட்டப்பட்டதாக பிரதமரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் அந்த அமைச்சரவைக் கூட்டம் பிரதமரின் தேவைக்கமையவே கூட்டப்பட்டதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தற்போது ஊடகங்களில் வெளியாகியிருக்கும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்தின் ஒளிநாடா குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவிக்காமல் இராஜினாமா செய்ததாகவும் முன்னாள் முப்படைத் தளபதிகளை நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றபோது தான் கூறிய விடயம் ஒன்றிற்காக பதவி விலகினார் என்றும் தெரிவித்தார்.

காலை முதல் பிற்பகல் 04.00 மணி வரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் கடமைகளை நிறைவுசெய்து பிற்பகல் 06.00 மணிக்கு பின்னர் அலரிமாளிகையின் இலஞ்ச, ஊழல் செயலகத்தில் கடமைபுரியும் திருமதி.தில்ருக்ஷி டயஸை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு அண்மையில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், தில்ருக்ஸி டயஸின் ஒளிநாடாவில் குறிப்பிட்டுள்ள விதத்தில் தவறான முறையில் வழங்குத் தாக்கல் செய்வதற்கு அவருக்கு ஆலோசனை வழங்கிய கீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை நாட்டுக்கு வெளிக்கொண்டு வருமாறும் அதனை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது மிகவும் அவசியமான விடயம் என்றும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி அவர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தனது தேவைக்காக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்று கூறப்படும் பொய் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அந்த கலந்துரையாடலை ஆரம்பம் முதல் இறுதி வரை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதற்கு தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்ததாகவும் அதனை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று பாராளுமன்ற தெரிவுக்குழுவே கோரிக்கை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தெரிவுக்குழு தன்னிடம் கோரிக்கை முன்வைத்ததாகவும் தனது விருப்பத்தின்படி செயற்படலாம் என சட்டமா அதிபர் தெரிவித்திருந்த போதிலும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் தான் அந்த குழுவின் கோரிக்கையை ஏற்றதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தன்னிடம் மூடி மறைப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லாமையினால் அனைத்து விடயங்களையும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு தான் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மாத்தளை மாவட்ட மாநாடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பெருந்திரளான கட்சி உறு்பபினர்களின் பங்குபற்றலில் இன்று பிற்பகல் நாவுலயில் இடம்பெற்றது.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், புதிதாக எத்தனை அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றாலும் அக்கட்சிகளின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம் எந்தளவிற்கு மக்களுக்கு நன்மை பகர்க்கும் என்பதை பொதுமக்கள் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு வலுவான அரசியல் கட்சி என்றும் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடுவதை விட அரசியல் கட்சியின் தரத்தை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சக்தியினூடாகவே ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

அனைவரையும் அரவணைத்து நாடு தொடர்பில் சிந்திக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றினை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கும் என்றும் அதன் ஆற்றலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் புதிதாக தோன்றியுள்ள அரசியல் கட்சிகளை விட வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஊழல், இலஞ்சம், சந்தர்ப்பவாதம், குடும்ப அரசியல் போன்ற எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாத கட்சி என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, திலங்க சமதிபால, சாந்த பண்டார, மாத்தளை மாவட்ட அமைப்பாளர் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த மாநாடு நாளைய தினம் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் இடம்பெறும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட மாநாட்டில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை.  21.09.2019 – நாவுல

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட ரீதியாக நடத்தும் மாநாட்டுத் தொடரின் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்வதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த வாரம் இரத்தினபுரி மாவட்டத்தில் எமது முதலாவது கட்சி மாநாட்டை நடத்தியிருந்தோம்.

மாத்தளை மாவட்டம் நாட்டின் விவசாயத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மையப்புள்ளியாகுமென்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இங்கு அதிகளவிலான விவசாய மக்கள் வாழும் செழிப்பான மாவட்டம் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். அதனைத் கருத்திற்கொண்டு மாத்தளை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு மொரகஹகந்த – களுகங்கை போன்ற பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கங்களின் முக்கியத்துவத்தை மக்கள் சரியாக உணர்ந்துகொள்வதற்கு மேலும் 10 வருடங்கள் கடந்துபோக வேண்டியிருக்கும் என நான் நினைக்கின்றேன். மாத்தளை மாவட்டம் ஊடாக செல்லும் எலஹெர, வயம்ப கால்வாய்கள் போன்ற கால்வாய்களும் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான குளங்களையும் புனரமைத்து வருகின்றோம். இவை நிறைவடையும் தருணத்தில் நீங்கள் வலுவான பொருளாதார பின்புலத்தை கொண்டிருப்பீர்கள்.

2007ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய தருணம் முதல் அதனுடன் தொடர்புடைய இம்மாவட்டத்தின் பல குளங்களை நாம் புனரமைத்தோம். லக்கல, பல்லேகம பிரதேசங்களில் அமைந்திருக்கும் பழைய குளங்களை புனரமைத்தமையை சுட்டிக்காட்டலாம். நீங்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதை நான் அறிவேன். நீங்கள் ஒருபோதும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்ததில்லை. முதலாளித்துவ சமூகம் ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுவது அரசியல் கோட்பாடாக மாறிவிட்டது. நீங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி துன்பப்படுவதை உணரும் தலைவனாக நீங்கள் முகம்கொடுக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் வகையிலேயே நான் இந்த நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தேன். அதனூடாக பிரதிபலன்களை பெறுவதற்கு இன்னும் 05,06 வருடங்கள் தேவைப்படலாம்.

இந்த மாவட்டத்தில் சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களும் வாழ்கின்றார்கள். 2015 ஜனவரி மாதம் 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மாத்தளை மாவட்ட மக்கள் எனக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்தனர். அதேபோன்று 2015 ஓகஸ்ட் மாதம் பாராளுமன்ற தேர்தலின்போது இம்மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிகொடி நாட்டியது என்பதை மறக்க வேண்டாம். இறுதியாக இடம்பெற்ற இரண்டு தேர்தல்களின் நிலைமையும் அதுவே. இந்த சூழலை கருத்திற் கொண்டு மாத்தளை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முற்போக்கான அரசியல் வேலைத்திட்டங்களை வலுவூட்டுவது எவ்வாறென நாங்கள் சிந்திக்க வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிகள் தோற்றம் பெறலாம். ஆனால் அக்கட்சிகளின் அரசியல் கொள்கைகள், தொலை நோக்கு வேலைத்திட்டங்கள் எந்தளவுக்கு மக்களுக்கு நன்மை பயக்கிறது என்பதையும் கண்டறிய வேண்டும்.

எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்கள் மாத்தளை மாவட்டத்தில் பர்னாட் அலுவிகாரை என்பவரை செயலாளராக நியமித்துக்கொண்டு டி.வி.தென்னகோன் போன்றவர்களை இணைத்துக்கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுவடைய செய்து முதலாவது அரசாங்கத்தை உருவாக்கினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சியாகும். தற்போது உருவாக்கப்படும் பல கட்சிகள் மக்கள் நலனை புறம் தள்ளிவிட்டு தத்தமது தேவைகளுக்காகவே செயற்பட்டு வருகின்றன. வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்றதன் பின்னர் அந்த ஆட்சியிலிருந்த எந்தவொரு விடயமும் மாற்றம் பெறாமையினால் பண்டாரநாயக்க அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நிறுவி நாட்டில் சமூகப் புரட்சியை ஏற்படுத்தினர். வறிய மக்களை மீட்டெடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இலங்கையின் கல்வியை வலுவடையச் செய்தார். பிக்கு சமூகத்தை வலுவூட்டினார். தேசிய தன்மை, தேசிய கலாசார உரிமைகளை வலுவடையச் செய்தார்.

1958, 1959 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிங்கள மொழியில் பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் பண்டாரநாயக்க அவர்களினாலேயே கிடைக்கப்பெற்றது. அதுவரை இலங்கை பல்கலைக்கழகங்களிலிருந்து ஆங்கிலமொழி பட்டதாரிகளே வெளி வந்தனர். கடந்த 50, 60 ஆண்டு காலமாக இலங்கையின் ஏழை, எளிய, கிராமிய குடும்பங்களில் உள்ள மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பண்டாரநாயக்க தம்பதிகளுமாகும் என்பதை குறிப்பிட வேண்டும். பண்டாரநாயக்க அவர்களின் வேலைத்திட்டங்கள் முற்போக்கானவை மக்கள் நல செயற்திட்டங்கள், காப்புறுதி முறைகள், விவசாய மக்களுக்கான நலன்புரி வேலைத்திட்டங்கள், தொழிலாளர் வர்க்கத்தினருக்கான மாபெரும் சேவைகள் போன்றவையும் மாபெரும் அபிவிருத்தி புரட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே மேற்கொண்டது. வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே நடவடிக்கை எடுத்தது. இதன் பிரதிபலன்களைத்தான் இன்று அனைவரும் அனுபவிக்கின்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை உறுதி செய்யும் நல்லிணக்கத்தை வலுவூட்டும் அரசியல் கட்சி என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முதலாவது செயலாளர்களில் ஒருவராக பேர்னாட் அலுவிகாரை நியமிக்கப்பட்டார். அவ்வேளையில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்காகவும் இரண்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிகார பகிர்வு தொடர்பில் செல்வநாயகம் போன்றவர்களுடன் முதலாவதாக கலந்துரையாடலை ஆரம்பித்ததும் பண்டாரநாயக்க அவர்களே என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். பண்டாரநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் அந்த செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால். பிரபாகரனோ எல்ரீரீஈயோ தோற்றம் பெற்றிருக்காது. கொடிய யுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது. பண்டாரநாயக்க அவர்களின் வேலைத்திட்டத்தை சிதைத்து அவரை கொலை செய்துவிட்டனர். அதன் பிரதிபலன்களே கடந்த காலங்களில் மிக மோசமாக மக்களை வாட்டிவதைத்தது.

2015ஆம் ஆண்டு 62 இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எதற்காக என்னை ஜனாதிபதியாக நியமித்தார்கள். என்னை ஜனாதிபதியாக வெற்றிபெறச் செய்த அச்சந்தர்ப்பத்தில் எவரும் உணவு பஞ்சத்திற்கு தீர்வளிக்குமாறோ தொழில்வாய்ப்புகளை பெற்றுத் தருமாறோ கேட்கவில்லை. அனைத்து மக்களும் ஒரே குரலாக ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுத் தருமாறுதான் வேண்டுகோள் விடுத்தனர். அப்போதைய அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் உங்களுக்கே நன்றாக தெரியும்.

கடந்த ஐந்து வருடக் காலத்தினுள் நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்து சுதந்திரமான சமூகத்தை உருவாக்கியுள்ளேன். அச்சம் இல்லாது வாழ்வதற்கான சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட நான் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவிற்கு என்னால் நிறைவேற்ற முடிந்துள்ளது. அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லும்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தவறான அரசியல் பயணம் ஒன்றை ஆரம்பித்தது. நான் பொலன்னறுவையை பிறப்பிடமாக கொண்ட காரணத்தினால் என்னை ஜனாதிபதியாக நியமித்துவிட்டு, அவர்களின் தேவைக்கு உகந்தவாறு அரசாங்கம் பணிகளை முன்னெடுக்கலாம் என்று ரணில் விக்கிரமசிங்க கருதினார். 2015க்கு முன்னர் இடம்பெற்ற ஊழல்களை விட ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர்களது சகாக்கல் ஊழல் புரிந்துள்ளார்கள். மத்திய வங்கி பிணை முறி மோசடியே அதற்கான சிறந்த உதாரணமாகும். அதேபோன்று தேசியத்தை மதிக்காத இனத்தை காட்டிக்கொடுக்கும் நாட்டுப்பற்று அற்ற அந்நிய நாட்டு சக்திகளின் தேவைக்கேற்ப ஆட்சியை கொண்டு செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முயற்சித்தார். எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அங்கம் பெற்றுள்ளார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் பங்குபற்றியதன் காரணத்தால் ரணில் விக்கிரமசிங்கவின் தவறான ஆட்சியிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு என்னால் முடிந்தது.

2015 ஜனவரி மாதம் 08ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையின் அரசியல் மேடைகளில் பேசப்பட்ட விடயங்களை நீங்கள் அறிவீர்கள். மின்சார கதிரைகள். வெளிநாட்டு நீதிபதிகளால் வழக்கு விசாரணை இடம்பெறுவது, முப்படையினருக்கு வழங்கப்படும் தண்டனைகள், மனித உரிமை மீறல்கள் ஆகிய கூற்றுக்களை எனது ஆட்சியுனுள் நான் முற்றாக அகற்றியுள்ளேன். மற்றுமொரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். எனக்கு முன்னர் பதவி வகித்த ஐந்து நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதிகளுக்கும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. அவர்கள் ஜனாதிபதியாக ஆட்சிபுரிந்த சந்தர்ப்பங்களில் முப்படையினரை தவறான முறையில் பயன்படுத்தியமை, மனித கொலைகள், வீடுகளுக்கு தீ மூட்டுதல், ஊடகவியலாளர்களை துன்புறுத்துதல், அரசியல் பழிவாங்கல்கள், ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளின் மூலம் பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொண்டது தொடர்பில் அவர்களுக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அத்தகைய எந்த குற்றச்சாட்டும் என்மீது சுமத்தப்படவில்லை. நான் ஊழல், இலஞ்சம், திருட்டு, விரயம் போன்றவற்றுக்கு எதிரான எனது கொள்கையை இக்கால கட்டத்தில் மேலும் வலுவூட்டியுள்ளேன். இந்த அரசாங்கத்தினுள் பிரச்சினை ஏற்படுவதற்கும் இதுவே காரணம்.

நாட்டுக்காக அரசியல் புரிபவர்கள் யார், சுயநலத்திற்காக அரசியல் புரிபவர்கள் யார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இலங்கையில் காணப்படும். சமூக பொருளாதார அரசியல் பிச்சினைகளுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு காரணம் என்ன? ஒரு சில அரசியல்வாதிகளே நாட்டுக்காக அரசியல் புரிகின்றனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் தமது செல்வாக்கை அதிகரிப்பதற்கும் தமது பதவியை பாதுகாத்துக்கொள்வதற்குமே அரசியல் புரிகின்றனர். அதன் காரணத்தினால்தான் இலங்கையில் வறுமை சமூக பிரச்சினைகள் பொருளாதார நெருக்கடிகள் போன்றவை தேன்றியுள்ளன. இவை அனைத்தையும் தீர்ப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாம் சரியான அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தூய்மையான கட்சியாகும். எண்ணிக்கையைவிட தரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தாமரை மொட்டு, ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் போட்டியிட்டன. நான் ஜனாதிபதி என்ற வகையில் அந்த தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் ஊழல்களை பகிரங்கப்படுத்தியதன் காரணத்தினால் மக்கள் மொட்டுக்கு வாக்களித்தனர். 330 உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் 230 உள்ளூராட்சி மன்றங்களில் மொட்டு வெற்றிபெற்றது. கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது மக்கள் வேட்பாளர்கள் யார் என்பதை கருத்திற்கொள்ளவில்லை.

அன்று கிடைத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வெற்றியை கருதிற்கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போதும் அத்தகைய வெற்றியை பெற்றுவிடலாம் என்று நினைப்பது மாபெரும் தவறாகும். இந்த ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள் வேட்பாளர் யார் என்பதை உன்னிப்பாக கவனிப்பர். உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது வேட்பாளர் யார் என்பதை கருத்திற்கொள்ளவில்லை. அரசாங்கத்திற்கு எதிராகவே மக்கள் வாக்களித்தனர். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நானே கருத்து வெளியிட்டேன். அந்த வாக்குகள் தான் மொட்டுக்கு திரும்பியது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றபோது மிக முக்கியமாக பார்ப்பது வேட்பாளர் யார்? அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலமைப்பின் வேலைத்திட்டங்கள், கொள்கைகள் என்ன? என்பதாகும். அந்த வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தனித்துவத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டியது முக்கியமானதாகும். கிராமங்களிலுள்ள கட்சி உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டியது முக்கியமாகும். நாட்டிலுள்ள எமது சுமார் 1300 பிரதேச சபை உறுப்பினர்களின் கௌரவத்தையும் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டியது முக்கியமானதாகும். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற தேர்தலில் எமது கட்சியில் போட்டியிட்ட சுமார் 8000 உள்ளூராட்சி பிரதிநிதிகளை பாதுகாக்க வேண்டியதும் முக்கியமானதாகும். நாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையிலேயே தேர்தலுக்கு முகங்கொடுக்கிறோம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு முடிவுகட்ட எவருக்கும் முடியாது. அவசரத்தில் உருவான கட்சிகளை பார்க்கிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு வரலாறு உள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் இந்த நாட்டின் எதிர்காலமாகும். இன்று அரசியல் கட்சிகளை எடுத்துக்கொண்டால் ஊழல், மோசடிகள், சந்தர்ப்பவாதம், குடும்ப ஆதிக்கம் போன்றவற்றை பார்க்கின்றபோது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இத்தகைய குற்றச்சாட்டுக்கள் கிடையாது. எனவே தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் கொள்கை மற்றும் வேலைத்திட்டங்களுக்குள் அரசாங்கமொன்று அமையப்பெற வேண்டுமென்று நாம் கூறுகிறோம். எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் ஜனாதிபதியானாலும் அந்த ஜனாதிபதியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தின் மூலம் மட்டுமே தெரிவுசெய்ய முடியுமென்பதை நான் தெளிவாக குறிப்பிடுகின்றேன்.

அரசியலில் இருக்கின்ற போட்டி, பொறாமை, வைராக்கியம் என்பவற்றை மறந்து குறிப்பாக நாட்டை பற்றி சிந்திக்கும் அரசியல் இயக்கமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் பலப்படுத்தி இருக்கிறோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிக வேகமாக பலம்பெற்று வருகிறது. எனவே நீங்கள் அந்த பலமான முற்போக்கு இடதுசாரி அரசியல் இயக்கத்தை மக்களை நேசிக்கும் அரசியல் இயக்கமாக கட்டியெழுப்ப நீங்கள் முன்வர வேண்டும். அரசியல் தலைவர்கள் மக்களை நேசிக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ளக்கூடிய இயலுமை அரசியல் தலைவர்களுக்கு இருக்க வேண்டும். இன்று அரசியல் செய்யும் பலர் மேடைகளில் மட்டுமே பேசுகின்றவர்கள் நடைமுறையில் கிடையாது. எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பது உண்மையான மனித நேய, முற்போக்கு தேசப்பற்றுடைய அரசியல் கட்சியாகும்.

அண்மையில் ஊடகங்களில் வெளியான சில விடயங்களைப் பற்றி நான் இங்கு கூறவேண்டும். இது பற்றி மக்கள் மத்தியில் கலந்துரையாடப்படுகிறது. ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் காரணமாக பல அப்பாவி மக்கள் உயிரிழந்ததைப்போன்று பொருளாதாரத்திற்கும் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி 07 உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் 05 வழக்குகள் உள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் இடம்பெறுகின்றன. நான் நியமித்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. இது பற்றி ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தெரிவுக்குழு முன் அமைச்சர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், புலனாய்வுத் துறையினர் என பலரும் ஆஜராகினர். இறுதியில் தெரிவுக்குழு ஜனாதிபதியையும் சந்திக்க தீர்மானித்தது. தேசியப் பாதுகாப்பு தொடர்பாக ஜனாதிபதியின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்காக என்னை சந்திக்க வேண்டும் என தெரிவுக்குழுவிடமிருந்து கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றது. நான் இது பற்றி சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டேன். நீங்கள் விரும்பினால் இந்த ஆணைக்குழுவின் முன் ஆஜராக முடியும் விரும்பாவிட்டால் ஆஜராகாது இருக்க முடியும். அரசியல் ரீதியில் அதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என சட்டமா அதிபர் எனக்கு கூறினார். ஜனநாயகத்தை மதிக்கும் ஒருவன் என்ற வகையில் நான் தெரிவுக்குழுவை எனது அலுவலகத்திற்கு வருமாறு கூறி எனது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வழங்க தீர்மானித்தேன்.

நேற்று காலை 10.00 மணிக்கு தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர். ஆரம்பத்திலிருந்தே எனது கூற்றுக்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு நான் ஏற்பாடுகளை செய்திருந்தேன். என்றாலும் ஊடகங்களுக்கு வழங்க முடியாது இங்கு கெமராக்கள் அவசியமில்லை என தெரிவுக்குழு ஏகமனதாக தெரிவித்தது. இதற்கு முன்னர் தெரிவுக்குழுவின் முன் ஆஜரான அனைவருடைய கூற்றுக்களும் நாட்டு மக்களுக்கு பார்க்கக்கூடிய வாய்ப்பு இருந்ததே என்றும் ஏன் என்னுடைய கூற்றை மட்டும் தெரியப்படுத்த முடியாது எனக் கேட்டேன். அப்போது ஊடகங்களின்றி எனது கூற்றினை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் கூறினார்கள். ஆரம்பத்திலேயே குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் அதற்கு உடன்பட்டேன். குறிப்பாக ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நான் உண்மையான விடயங்களையும் எனது தரப்பு கருத்துக்கள், முன்மொழிவுகளையும் வழங்கினேன். இதுபற்றி பல்வேறு பிழையான கருத்துக்கள் சமூகத்தில் பரவி வருகின்றன. தெரிவுக்குழுவிற்கும் எனக்குமிடையிலான கலந்துரையாடலை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தக் கூடாதென நான் கேட்டுக்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. அது முற்றிலும் பிழையானதாகும். ஊடகங்களுக்கு வெளியிட அவர்கள் தான் விரும்பவில்லை.

அடுத்த விடயம் நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது பற்றி அண்மையில் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதியின் தேவைக்காகவே கூட்டப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாக சனிக்கிழமை பத்திரிகைகளில் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கூற்றை ஆடை அணிந்த நிலையிலா கூறுகிறார் என கேட்கத் தோன்றுகிறது. வியாழனன்று, மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க காலையில் தொடர்புகொண்டு அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை கூட்ட வேண்டியுள்ளது. பிரதமரும் நாமும் அது பற்றி கலந்துரையாடியிருக்கின்றோம். ஜனாதிபதியிடம் இது பற்றி கூறுமாறு பிரதமர் என்னிடம் கூறினார். எனவே இன்று அமைச்சரவையை கூட்ட முடியுமா? என என்னிடம் கேட்டார். அதற்கு நான் அதுபற்றி நீங்கள் கூற முடியாது. பிரதமர் என்னிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் எனக் கூறி தொடர்பை துண்டித்தேன். 10, 15 நிமிடங்களுக்கு பின்னர் ரவி கருணாநாயக்க இரண்டாவது முறையாகவும் தொடர்புகொண்டு பிரதமரும் அமைச்சர்களும் அமைச்சரவையை கூட்டுமாறு கூறுகின்றார் எனக் கூறினார். அப்படியானால் என்னுடன் பேசுமாறு பிரதமருக்கு கூறுங்கள் என்று கூறினேன். எனினும் அழைப்பு கிடைக்கவில்லை. பின்னர் நான் பிரதமரை தொடர்புகொண்டேன். ரவி கருணாநாயக்க குறிப்பிட்ட விடயங்களைக்கூறி நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்குவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட வேண்டிய தேவையுள்ளதா? அதற்காக அமைச்சரவை கூட்டமொன்று கூட்டப்பட வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு பிரதமர் ஆம், நாங்கள் அதுபற்றி கலந்துரையாடியிருக்கிறோம். எமது கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. இன்னும் காலம் உள்ளது. ஜனாதிபதி அவர்களே! இன்று மாலை அமைச்சரவையை கூட்டுங்கள் என கூறினார். நான் 3.00 மணிக்கு கூட்டத்தை கூட்டினேன். எனினும் அவ்விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு பகல் 12 மணியளவில் பிரதமரிடமிருந்து அமைச்சரவைக் குறிப்பொன்று அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட்ட நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவைக் குறிப்பொன்று அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சரவை செயலாளர் என்னிடம் கூறினார். சிங்களம், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் உள்ளன. சிங்கள மொழி மூலமான குறிப்பில் கைச்சாத்திடப்படவில்லை. ஆங்கில குறிப்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனக் கூறினார். அப்படியானால் அது போதுமானது அதனை சமர்ப்பியுங்கள் எனக் கூறினேன். 3.00 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது. அங்கு பிரதமர் அமரும்போதே அமைச்சரவை செயலாளரிடம் சென்று நான் அனுப்பிய அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டாம் என கூறியது எனக்குக் கேட்டது. நான் கேட்காததுபோல் இருந்தேன். அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமானது. விசேட அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டுமாறு என்னிடம் கூறப்பட்டது. தற்போது கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. விசேட விடயம் என்னவென்பதை கூறுமாறு கேட்டேன். அப்போது பிரதமர் இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும். இது ஜனாதிபதி அவர்கள் வழங்கிய உறுதிமொழியாகும் என்று கூறினார். எனக்கு அந்த விடயத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நான் எப்போதும் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன் என்று கூறினேன். உங்களது பாராளுமன்றம் தான் அதனைச் செய்யவில்லை. எனவே நீங்கள் விரும்பியதை செய்யுங்கள் எனக் கூறினேன்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு அவ்வளவுதான் கூறக்கிடைத்தது. ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், ஏனைய சிறுபான்மை கட்சிகளை சேர்ந்தவர்கள், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேஷன், ரஞ்சித் மத்தும பண்டார, சம்பிக்க ரணவக்க, ஹரீன் பெர்ணான்டோ ஆகிய அனைவரும் எழுந்து பிரதமரின் முன்மொழிவுக்கு எதிராக கருத்துக்களை கூறினார்கள். அமைச்சரவையில் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது. நான் கூறினேன் இதனை என்னால் தீர்க்க முடியாது. கூட்டத்தை கூட்டுமாறு கூறியதற்கு ஏற்பவே கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் பற்றி உங்களது கட்சியில் தீர்மானியுங்கள். இங்கு குழப்பத்தை ஏற்படுத்தாது செல்லுங்கள் எனக் கூறி கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன். நிலைமை இவ்வாறு இருக்க ஜனாதிபதியின் தேவைக்காகவே கூட்டம் கூட்டப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.  செய்ய வேண்டியதெல்லாம் செய்துவிட்டு விடயம் குழம்பியவுடன், அதனை என்மீது சுமத்திவிட முயற்சிக்கின்றார்கள்.

நான் நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவி நீக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை கொண்டவன். பாராளுமன்றம் தான் அதனைச் செய்யவில்லை. அதனைச் செய்யாது இருந்து விட்டு தேர்தல் தொடர்பாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதனைச் செய்வது வேடிக்கையானதாகும். அமைச்சரவையில் அது நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 151 வாக்குகளை பெற வேண்டும். அதன் பின்னர் நான் மக்கள் கருத்துக் கணிப்பொன்றை கோர வேண்டும். அதனை ஜனாதிபதிக்கு மட்டுமே செய்ய முடியும். அதன்பின்னர், அது நிறைவேற்றப்பட்டு 21 நாட்களுக்குள் மக்கள் கருத்துக் கணிப்பு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பயன்படுத்தப்பட வேண்டும். கருத்துக் கணிப்பிற்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்ட வாக்குகளில் 51 வீதம் கிடைக்கப்பெற வேண்டும். இது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதை கூற முடியாது. அன்று இருந்த அதே கொள்கையிலேயே இன்றும் நான் இருக்கிறேன். என்றாலும் அதனைச் செய்வதற்கான நேரம் இதுவல்ல. போலியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டமையினாலேயே இதுபற்றி விளக்க வேண்டி ஏற்பட்டது.

இதேநேரம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க அம்மையாரின் ஒளிப்பதிவு நாடா ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.  உங்களுக்கு நினைவிருக்கும் எமது முப்படைத் தளபதிகளை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற போது பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் எனது பணிப்புரையின்றி நான் ஆற்றிய குறையொன்றினால் தான் தில்ருக்ஷி டயஸ் பணிப்பாளர் நாயகம் பதவியை விட்டுச் சென்றார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 72 பேருக்கு இலஞ்ச, ஊழல் செயலகத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்காக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்கவே என்னிடம் கூறியிருக்கின்றார். ஏன் சுதந்திரக் கட்சிக்கு மட்டும் என்று நான் கேட்டேன். ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உள்ளூராட்சி உறுப்பினருக்கு கூட ஒரு வழக்கும் இல்லை. எனவே தான் தில்ருக்ஷி டயஸ் செய்வது தவறான விடயம் என கூறினேன். அவர் பதவியை விட்டுச் சென்றார். உயர்நீதிமன்றத்தின் நீதியரசராக தில்ருக்ஷி டயஸை நியமிக்குமாறு 03, 04 மாதங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். தற்போது உலாவிவரும் தில்ருக்ஷி டயஸின் ஒளிநாடாவை நீங்களும் கேட்டிருக்க முடியும். அந்த ஒளி நாடாவிலிருந்தே அவர் இந்த பதவிக்கு பொருத்தமற்றவர் என்பது விளங்கியிருக்கும்.

அதேபோன்று அந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகளாகும். காலையிலிருந்து மாலை 4.00 மணி வரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் கடமை புரியும் தில்ருக்ஷி டயஸ் மாலை 6.00 க்கு பின்னர் அலரி மாளிகையிலுள்ள ஊழலுக்கு எதிரான பணியகத்தில் செயலாற்றி வருகிறார். அப்படிதான் அவர் கடமையாற்றி வருகிறார். அதனைத் தெரிந்து கொண்டுதான் அவர் இந்த பதவிக்கு பொருத்தமற்றவர் எனக் கூறினேன். எனவே தான் இந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் இருப்பவர்களை பற்றி தெரிந்திருக்கும். என்றாலும் பிரச்சினை அதுவல்ல. தற்போது தில்ருக்ஷி டயஸ் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார். இந்த ஒளி நாடாவில் அவர் இந்த மோசடி நிறைந்த அரசியல்வாதிகளினால் நான் இந்த தீர்மானங்களை மேற்கொண்டு வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்தேன். அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை. மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸுக்கு நான் கூறுகின்றேன். அந்த ஒளிநாடாவில் மோசடி ஆட்சியாளர்கள் தான் பிழையாக வழக்குத் தொடரவும் ஆட்களை சிறையில் தள்ளவும் அழுத்தம் கொடுத்தார்கள். ஆலோசனை வழங்கினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு உங்களுக்கு ஆலோசனை வழங்கிய அரசியல்வாதிகள் யார்? என்பதை முடியுமானால் கூறுங்கள் என்று நான் அவரிடம் கேட்கிறேன். அது நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் அரசியல் ஒழுக்கம், சட்ட ஆட்சி, ஜனநாயகம், மக்களின் சுதந்திரம் இவை அனைத்தும் ஒரே வழியில் செல்ல வேண்டும். கடந்த நான்கு வருட காலப்பகுதியில் மத்திய வங்கி கொள்ளையிலிருந்து தில்ருக்ஷி டயஸின் ஒளி நாடாவின் பின்புலத்தை எடுத்துக் கொண்டால் பிழையாக அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி பிழையான விடயங்கள் எவ்வளவு இந்த நாட்டில் செய்யப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.

எனவே நாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் தூய்மையான அரசியல் கட்சி என்ற வகையில் மக்களை நேசிக்கும் கட்சி என்ற வகையில் அமரர் பண்டாரநாயக்கவின் இரத்தத்திலும் பண்டாரநாயக்க அம்மையாரின் கண்ணீரினாலும் போஷிக்கப்பட்ட கட்சி என்ற வகையில் தூய்மையான அரசியல் இயக்கத்தை முன்னெடுப்பதில் ஒன்றுபடுவோம்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 

Share This Post

NEW