இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் நாக மரக்கன்றினை ஜனாதிபதி அவர்கள் அன்பளிப்பு செய்தார்

இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் நாக மரக்கன்றினை ஜனாதிபதி அவர்கள் அன்பளிப்பு செய்தார்

இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் கம்போடியாவின் ஓக் தோங் மலையில் அமைந்துள்ள தியான நிலையத்திற்கு (Meditation center of ouk Dong mountain) இலங்கையின் தேசிய மரமான 10 நாக மரக்கன்றுகளை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (10) முற்பகல் வழங்கிவைத்தார்.

பௌத்த மதத்தை அடிப்படையாகக்கொண்ட இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான தொடர்பை அனைத்து துறைகளிலும் மேம்படுத்தும் நோக்கில் கம்போடிய மன்னரால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பின்பேரில் ஜனாதிபதி அவர்கள் கம்போடியாவிற்கான விஜயத்தை அண்மையில் மேற்கொண்டார். இது இலங்கை ஜனாதிபதி ஒருவர் கம்போடியாவில் அரசமுறை சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் அதேவேளை, தேரவாத பௌத்த தர்மத்தை பாதுகாத்து உலகெங்கும் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இலங்கையில் விரிவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இச்சந்தர்ப்பத்தில் தேரவாத பௌத்தத்தினை போஷிக்கும் நாடு என்ற வகையில் கம்போடியாவிற்கு ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட இந்த சுற்றுப் பயணமானது மிகுவும் முக்கியத்துவம் வாய்ந்ததுடன், இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுவூட்டும், பௌத்த மத உறவுகளை மேம்படுத்து நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சித் தொடரின் பிரதான நிகழ்வாக நாக மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பெளத்த மதத்தை முதன்மையாக கொண்டிருக்கும் கம்போடியாவில் நாக மரம் காணக் கிடைப்பதில்லை என்பதும், பௌத்த மத ரீதியாக சிறப்பு வாய்ந்த நாக மரக்கன்றுகளை வழங்கி வைத்ததனூடாக இரு நாடுகளுக்கிடையே பௌத்த மத நல்லுறவுகள் மேலும் வலுவடையும்மென்றும் அந்நாட்டு மகாசங்கத்தினர் கருத்து தெரிவித்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த அந்நாட்டு மகாசங்கத்தினர் இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான பௌத்த மத நல்லுறவு மிகவும் பழமை வாய்ந்ததென்றும், நிகழ் காலத்தில் இரு நாடுகளுக்கிடையிலான பெளத்த மத நல்லுறவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் நாமம் வரலாற்றில் பொறிக்கப்படுமென்றும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வண. கலாநிதி ஓமல்பே சோபித்த நாயக்க தேரர், புனித பௌத்த தர்மத்தை பாதுகாப்பதுடன், அதனை உலகம் முழுவதும் வியாபிப்பதன் முக்கியத்துவத்தை பெளத்த தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இனங்கண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஆசிய பௌத்த சங்கமொன்றை நிறுவி ஆசிய கண்டத்தின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சோபித்த நாயக்க தேரர், அடுத்து ஜனனிக்கவுள்ள மைத்ரி புத்த பெருமான் நாக மர நிழலில் முக்தி அடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அத்தகைய மகத்துவம்மிக்க நாக மரக் கன்றுகளை வழங்கி வைத்தமை உன்னத நிகழ்வாக ஆன்மீக வரலாற்றில் இந்நிகழ்வு இணைக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

கம்போடியா மகாசங்கத்தினர் மற்றும் இலங்கை – கம்போடியா பக்தர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW