ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா மொனராகலை மாவட்ட காரியாலயத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா மொனராகலை மாவட்ட காரியாலயத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

இளைஞர்களின் எதிர்காலத்தை சௌபாக்கியமாக மாற்றியமைக்கும் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிறுவன வலையமைப்பை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மொனராகலை மாவட்ட தொழில் வழிகாட்டல் நிலையத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (06) நண்பகல் திறந்து வைத்தார்.

நாட்டில் தொழில்வாய்ப்பின்மைக்கு தீர்வுகாணும் முகமாக அனைத்து தொழிற்பயிற்சி மற்றும் வள நிலையங்களை ஒன்று திரட்டி உயர் தொழிநுட்ப பொறிமுறையினூடாக தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல் மற்றும் தொழில் வழங்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலுக்கமைய ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிறுவனம் இயங்கி வருகின்றது.

இளைஞர், யுவதிகளின் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் தொழிற்துறையில் வெற்றிகரமான பயணத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குதல், தொழில் முயற்சி வாய்ப்புகள், தொழில் வங்கிகள் உள்ளிட்ட தொழில் தகவல்கள் தொடர்பிலான இணையத்தள சேவைகைளை வழங்குதல், தனியார் தொழில் வழிகாட்டல் நிபுணர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்குதல், தொழில் வழிகாட்டல் சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல் மற்றும் நாடு முழுவதும் காணப்படும் தொழில் வழிகாட்டல் நிறுவனங்களின் வலையமைப்பை கட்டியெழுப்புவது இந்நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோளாகும்.

ஐக்கிய நாடுகள் சபையை அடிப்படையாகக்கொண்ட பேண்தகு அபிவிருத்தி மற்றும் பேண்தகு வாழ்வாதார அபிவிருத்தி போன்றவற்றிற்கு இளைஞர்களை ஊக்குவித்தல், இளைஞர் சமுதாயத்தின் தொழிலின்மையை நீக்குதல், இயற்கை வளங்களை சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்தக்கூடிய புதிய தொழில் மற்றும் முதலீட்டு செயற்பாடுகளை அறிமுகம் செய்து வைத்தல் போன்ற உலகளாவிய நோக்கங்களும் இதன்மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது.

மொனராகலை பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கபட்டுள்ள ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் மொனராகலை காரியாலயத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டதுடன், இளைஞர் யுவதிகளுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, ரஞ்சித் மத்தும பண்டார, தயா கமகே, ரவீந்திர சமரவீர உள்ளிட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிறுவன பணிப்பாளர் நாயகம் எரிக் பிரசன்ன வீரவர்தன உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

Share This Post

NEW