ஆரோக்கியமான மக்கள் வாழும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்  – ஜனாதிபதி

ஆரோக்கியமான மக்கள் வாழும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்  – ஜனாதிபதி

நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுகளுக்காக வருடாந்தம் செலவாகும் பெருந்தொகை பணத்தை நாட்டில் மீதப்படுத்த முடியுமாயின் வறுமையை ஒழிப்பது கடினமானதல்ல என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

மின்னேரியா “ஹெல பொஜூன்“ சுதேச  உணவகம் மற்றும் “ஹரித்த பிரஜா” சந்தைத் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (03) பிற்பகல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போட்டித்தன்மை வாய்ந்த வாழ்க்கை முறைக்குள் சிறைப்பட்டுள்ள மக்களுக்கு இலகுவாக போசணை உணவை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் “எழுச்சிபெறும் பொலன்னறுவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 14 மில்லியன் ரூபா செலவில் விவசாயத் திணைக்களம் இந்த தேசிய உணவகத்தை திறந்து வைத்துள்ளது.

இலங்கையில் தொற்றாத நோய்களுக்கு ஆட்படுகின்றவர்களின் வீதம் வேகமாக அதிகரித்து வருவதுடன், முறையற்ற உணவு பழக்கம் இதற்கு பிரதான காரணமாகுமென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியான உணவு பழக்கத்திற்கும் சரியான ஒழுங்கிற்கும் மக்களை பழக்கப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், ஆரோக்கியமான மக்கள் வாழும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகுமென்றும் குறிப்பிட்டார்.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து தேசிய உணவகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனைப் பார்வையிட்டார்.

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அம்சமான வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்களை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

விவசாயம் பற்றிய இரண்டு நூல்களும் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

அமைச்சர் சுஜீவ சேனசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்ட பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன, விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளியு.என்.டப்ளியு.வீரக்கோன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இன்று பொலன்னறுவையில் மேலும் பல நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சமய மேம்பாட்டை நோக்கமாகக்கொண்டு வெலங்கட்டுவ ஸ்ரீ சைல கங்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பிக்குகளுக்கான தங்குமிட கட்டிடத்தை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த புதிய கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக 3.47 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எலஹெர பகமுனவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுதேச உணவகத்தை திறந்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும் கோட்டபிட்டிய ஸ்ரீ புத்தகயா பிரபாஸ்வர பிரிவெனாவில் சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பிக்குகளுக்கான தங்குமிட கட்டிடத்தை ஜனாதிபதி அவர்கள் மகாசங்கத்தினரிடம் கையளித்தார்.

பிரித் பாராயணத்திற்கு மத்தியில் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அங்கு மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் மகாவலி வலயத்தை சேர்ந்த மூன்று விகாரைகளுக்கான காணி உறுதிகளையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

விகாராதிபதி சங்கைக்குரிய மாதொல சேனானந்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பிரதேச அரசியல் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW