“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சமய மறுமலர்ச்சியை நோக்காகக் கொண்டு ஹிங்குரக்கல, லும்பினி ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தர்ம போதனை கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (08) பிற்பகல் இடம்பெற்றது.
இன்று பிற்பகல் விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து தர்ம போதனை கட்டிடத்தை திறந்து வைத்தார். இதற்காக 35 இலட்ச ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வட மத்திய ஆகிய மூன்று மாகாணங்களினதும் பிரதான சங்க நாயக்கர் பொலன்னறுவை இசிபத்தனா ராமாதிபதி வண. உடகம தம்மானந்த நாயக்க தேரர் மற்றும் ஹிங்குரக்கல ரஜமகா விகாராதிபதி பொலன்னறுவை ஸ்ரீ விஜயபா பிரிவெனாவின் கலாநிதி வண. ரம்படகல்லே சந்ரவிமல நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.