2018 சுற்றாடல் மாநாடு ஜனாதிபதி தலைமையில்.

2018 சுற்றாடல் மாநாடு ஜனாதிபதி தலைமையில்.

“வனரோபா” மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்

பதவியிலிருந்த பெரும்பாலான முன்னாள் ஜனாதிபதிகள், ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதும் நிதியமைச்சினை தங்களுக்கு கீழ் கொண்டுவந்த போதும் தான் அவ்வாறு செய்யாமல் ஜனாதிபதி பதவியின் எல்லையற்ற அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்ததனை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், எதிர்கால தலைமுறைக்காக சுற்றாடலை பாதுகாக்கின்ற பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தான் சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

முக்கியமான பதவிகளை விடுத்து சுற்றாடல் துறை அமைச்சை தான் தெரிவு செய்தது மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களினதும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காகும் என்றும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இன்று (05) முற்பகல் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

சுற்றாடல் அழிவு இன்று மனிதனின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியிருப்பதாகவும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களினதும் எதிர்கால இருப்புக்காக சுற்றாடலை பாதுகாப்பது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது மேலும் தெரிவித்தார்.

மனிதனின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் சுற்றாடலை பிள்ளையை போன்று பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், சுற்றாடலை அழிவுக்குள்ளாக்குவதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

ஒரு மாவட்டத்தில் இடம்பெறும் சுற்றாடல் அழிவு குறித்து அம்மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க அதிகாரிகளும் பொறுப்பு கூற வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் அழுத்தங்கள் இருக்குமானால் அது பற்றி தனக்கு அறியத்தருமாறும் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

சுற்றாடலை பாதுகாப்பதற்கான அனைத்து சர்வதேச உடன்படிக்கைகளையும் இலங்கை பின்பற்றி வருவதுடன், சுற்றாடலை பாதுகாப்பதில் முக்கியமான பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி இத்தகைய சுற்றாடல் மாநாடு இடம்பெறுவது மாவட்ட மட்டத்தில் நிலவுகின்ற சுற்றாடல் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இதற்கு அனைவரும் செயற்திறனுடன் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அனைவரும் ஒன்றிணைந்து சுற்றாடல் உறுதிமொழியை எடுத்துக்கொண்டதன் பின்னர் தேசிய சுற்றாடல் மாநாடு ஆரம்பமானது. பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் மரக்கன்றுகளை வழங்கிவைக்கும் நிகழ்வையும் ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசில்களையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

அமைச்சர்களான மஹிந்த சமரசிங்ஹ, மஹிந்த அமரவீர, றிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்கள் ஸ்ரீயானி விஜேவிக்ரம, வீரகுமார திசாநாயக்க, பிரதியமைச்சர்கள் அங்கஜன் ராமநாதன், காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, மன்னார் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் 2018 தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (05) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் மன்னார் மடு வீதி தம்பனைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

அரச அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் விரிவான சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் பேரில் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “புனரோதய“ (மறுமலர்ச்சி) தேசிய சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இலங்கையின் வன அடர்த்தியை 32 சதவீதமாக அதிகரித்தல், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் தாக்கங்களை குறைத்தல் மற்றும் நாட்டை நீலப்பசுமை யுகத்தை நோக்கி கொண்டு செல்லுதல் என்பன இதன் நோக்கமாகும்.

மக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி கொண்டு செல்வதற்காக ஒக்டோபர் மாதம் தேசிய மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு திணைக்களம் 2018 வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் சுமார் இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

வேப்ப மரக்கன்றொன்றை நட்டு 2018ஆம் ஆண்டிற்கான வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இதனுடன் இணைந்ததாக பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மரநடுகை நிகழ்ச்சித் திட்டமொன்று இடம்பெற்றதுடன் நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுடன் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார்.

மன்னார் மாவட்ட சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை 2018.10.05

நாம் இன்று மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். இதுபோன்ற பல சுற்றாடல் மாநாடுகளை நாடளாவிய ரீதியில் நடத்தியிருக்கிறோம். இதேபோன்று போதைப்பொருள் ஒழிப்பு மாநாடும் பல மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களை பாதுகாப்பது சம்பந்தமான மாநாடும் பல்வேறு மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த அனைத்து திட்டங்களும் ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

பதவியிலிருந்த பெரும்பாலான முன்னாள் ஜனாதிபதிகள், ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதும் நிதியமைச்சினையே தங்களுக்கு கீழ் கொண்டு வந்தனர். நான் அவ்வாறு செய்யாமல் ஜனாதிபதி பதவியின் எல்லையற்ற அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்திருந்தேன். எதிர்கால தலைமுறைக்காக சுற்றாடலை பாதுகாக்கின்ற பொறுப்பை நிறைவேற்றுவதற்காக நான் சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்றேன்.

நாம் ஏன் இந்த சுற்றாடல் பற்றி பேச வேண்டும். சுற்றாடல் என்பது முழு உலகிலும் பாரிய பிரச்சினையாக உள்ளது. சுற்றாடல் தொடர்பான சவாலுக்கு எமது நாட்டு மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்து நாடுகளிலுமுள்ள உயிரினங்கள், மனிதர்கள், இயற்கை ஆகிய அனைத்தும் முகங்கொடுத்துள்ளன. எனவே இன்று உலகத் தலைவர்கள் சுற்றாடல் பற்றி பேசுகின்றனர். சுற்றாடல் பற்றி முக்கியமாக உலகிற்கு கூறியவர் புத்த பெருமான் ஆவார். இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றி அவர் போதித்துள்ளார். அதேபோன்று கிறிஸ்தவ சமயத்திலும் இஸ்லாம் மற்றும் இந்து சமயங்களிலும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிருக்கின்ற பிள்ளைகள் அல்பேர்ட் ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியை பற்றி அறிந்திருப்பார்கள். என்னைத் தவிர ஏனைய அனைத்துமே சுற்றாடல் என்று ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். அவர் கூறியதையே இன்று நானும் கூறுகின்றேன். என்னைத் தவிர ஏனைய அனைத்துமே சுற்றாடல் என்பதாகும். இங்கு நாம் மிகுந்த சிரமத்துடன் இருக்கின்றோம். இங்கு இருக்கின்றவர்கள் கையிலிருக்கின்ற பத்திரங்களைக்கொண்டு காற்று வீசிக்கொள்வதை நான் காண்கிறேன். சுற்றாடல் பற்றிய சவால் இல்லையென்றால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டவர்கள் நாங்கள் தான். மக்கள் வாழ முடியாத சூழலை ஏற்படுத்தியவர்கள் மக்களே. முழு உலகும் இந்த சாவலுக்கு முகங்கொடுத்துள்ளது.

இன்று எமது நாட்டின் வன அடர்த்தி 29 சதவீதமாகும். இலங்கையில் வன அடர்த்தி மிகவும் குறைந்த மாவட்டமாக கம்பஹா உள்ளது. இங்கு 2 சதவீதமே வனப்பிரதேசம் உள்ளது. அடுத்த மாவட்டமாக கொழும்பு 3 சதவீதத்தில் உள்ளது. அதற்கடுத்த நிலையில் யாழ் மாவட்டம் 5 சதவீதமாகவுள்ளது. உங்களுடைய மாவட்டத்திற்கு வந்து நீங்கள் மகிழ்ச்சியடையக் கூடிய ஒரு விடயத்தை நான் கூறுகின்றேன். இலங்கையில் வன அடர்த்தி கூடிய மாவட்டம் வவுனியாவாகும். இங்கு வன அடத்தி 65 சதவீதமாகும். அதற்கடுத்த இடத்தில் முல்லைத்தீவு மாவட்டம் 64 சதவீதமாக உள்ளது. இலங்கையில் வன அடர்த்தியில் மூன்றாம் இடத்தில் இருப்பது மன்னார் மாவட்டமாகும். இங்கு வன அடர்த்தி 63 சதவீதமுள்ளது. அப்படியிருந்தும் இங்கிருக்கின்றவர்கள் காகிதங்களைக்கொண்டு காற்று வீச வேண்டிய நிலைக்குள்ளாகி இருக்கின்றனர். மனிதனைப் போன்றே மிருகங்களுக்கும் வாழ்வதற்கு ஒட்சிசன் மற்றும் நீர் அவசியமாகும். அதற்கடுத்ததாக உணவு அவசியமாகும். இம் மூன்றையும் பெற்றுக்கொள்வதற்கு எமக்கு வனம் அவசியமாகும்.

நாம் இந்த நாட்டில் மரங்களை வளர்ப்பதற்கு “வனரோபா” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். தேசிய மரநடுகை திட்டத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தை நாம் பிரகடனப்படுத்தியிருக்கிறோம். இந்தப் பணியை இன்று நாம் ஆரம்பித்து வைத்தோம். ஜனவரி மாதமாகின்றபோது 10 இலட்சத்தினால் முன்னேறிச் செல்ல எதிர்பார்க்கின்றோம். நாம் 50 இலட்சம் என்ற இலக்கை வைத்து இந்நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். உங்களைப்போன்று இந்த பணியில் அனைவரும் இணைந்து கொண்டால் ஜனவரி மாதத்தில் எமக்கு 50 இலட்சம் என்ற இலக்கை அடைந்துகொள்ள முடியும்.

ஒரு பிள்ளையின் பெறுமதியை இங்கிருக்கின்ற அனைவருமே அறிவர். சுற்றாடலின் பெறுமதியைப் போன்று மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டால் இதன் பெறுமதி பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியது முக்கியமானதாகும். இந்த சவால் பாரியொன்றாகும். ஒரு கையில் ஒரு பிள்ளையையும் அடுத்த கையில் மரக் கன்றொன்றை எடுப்போம். இரண்டினதும் பெறுமதி ஒன்று தான். ஒரு மரத்தை வெட்டினால் 100 மனிதர்கள் அழிவுக்குள்ளாகின்றனர். ஒரு மரக் கன்று அழிவுற்றால் 100 பிள்ளைகளின் வாழ்க்கை அழிந்துபோக கூடும். இது ஒரேயடியாக நிகழ்ந்து விடக் கூடியது அல்ல. காலப்போக்கில் நிகழக்கூடிய மாற்றமாகும். எனவே பிள்ளையைப் போன்றே மரக்கன்றின் பெறுமதியுமாகும்.

2016ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் பற்றிய சவாலை வெற்றி கொள்வது தொடர்பாக  ஐக்கிய நாடுகள் சபையில் விசேட மாநாடு ஒன்று இடம்பெற்றது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். அங்கு ஒரு பிரகடனம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அந்த பிரகடனத்தில் அடங்கியிருந்த விடயங்களை நாம் நடைமுறைப்படுத்துகின்றோம். எனவே நாம் அனைவரும் பேசுகின்ற பேண்தகு அபிவிருத்தியின் முக்கியமான விடயம் சுற்றாடல் பாதுகாப்பாகும். நாம் சுற்றாடலையும் இயற்கை வளத்தையும் பாதுகாக்க வேண்டும்.

அன்று பரிஸ் நகரத்தில் கைச்சாத்திடப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கை முன்னணியில் உள்ளது. இந்த பரிஸ் உடன்படிக்கையிலிருந்து சிலர் விலகிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் இயற்கையை விரும்பாதவர்கள். அப்படி விலகியிருக்கின்றவர்களின் நாடுகளிலுள்ள மக்கள் வாழ்வதற்கு எம்மைப்போன்ற சிறிய நாடுகளில் தான் மரங்களை வளர்க்கின்றோம். எனவே பிள்ளைகளை போன்று பெற்றோர் இடத்திலும் நான் கேட்டுக் கொள்வது பிறந்த தினத்திற்கு கேக் வெட்டாதீர்கள். கேக்குக்கு பதிலாக அந்த பணத்திற்கு மரக்கன்றொன்றை வாங்குங்கள். ஒவ்வொரு பிறந்த தினத்திற்கும் மரக்கன்றொன்றை நட்டுங்கள். அந்த மரக்கன்றிற்கு உங்களது பெயரை சூட்டுங்கள். இங்கிருக்கின்ற சிறிய பிள்ளைகளிடமும் நான் அதனை கூறுகின்றேன். அக்கன்றிற்கு பெயரை வைத்துப்பாருங்கள். அது நன்றாக வளரும். நீங்களும் நன்றாக வளருவீர்கள். அதன் மூலம் உங்களுக்கு நல்ல உளத் திருப்தி கிடைக்கும்.

மாவட்டத்தின் சுற்றாடல் நிலைமைகள் பற்றி இங்கு உங்களது மாவட்ட செயலாளர் குறிப்பிட்ட விடயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சுற்றாடல் எவ்வளவு தூரம் அழிவுக்குள்ளாகியுள்ளது என்பதை பார்த்திருப்பீர்கள். கடற்கரையோரங்களிலும் அதேபோன்று எல்லா இடங்களிலும் குப்பைகள் நிறைந்து இருப்பதை பார்த்திருப்பீர்கள். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் நிறைந்து காணப்படுகின்றன. மண்வெட்டுதல், மணல் அகழ்தல் போன்ற விடயங்களினாலும் மாவட்டம் பெரிதும் அழிவுகளுக்கு முகங்கொடுத்துள்ளது. இவற்றிற்கு வகை கூறுகின்றவர்கள் யார்? மாவட்ட அதிபர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் அனைவரும் இதற்கு வகைகூற வேண்டும். இந்த அழிவுகளுக்கு அரசாங்க அதிகாரிகளைப் போன்று பொலிஸாரும் வகை கூற வேண்டும். இவ்வாறான தவறுகளை செய்கின்றவர்களுக்கெதிராக நீங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியல் அழுத்தங்கள் இருக்குமானால் என்னிடம் கூறுங்கள். எனக்குத் தெரிந்த வகையில் அரசியல்வாதிகள் அல்ல. கொள்ளை வியாபாரிகளே அதற்கு காரணம். யார் செய்தாலும் இது தவறுதான்.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தான் இத்தகைய சுற்றாடல் மாநாட்டின் நோக்கமாகும். எனவே நாம் அனைவரும் இந்தப் பொறுப்பை விளங்கிக்கொள்ள வேண்டும். உலகில் நவீன தொழிநுட்ப வளர்ச்சியுடன் சுற்றாடல் அழிவுகளும் ஏற்படலாயின. கைத்தொழில் நடவடிக்கைகளினாலும் சுற்றாடல் அழிவுற்றது. எனவே நாம் அனைவரும் பொறுப்புக்களை நிறைவேற்றுவோம். இந்த பொறுப்பை நானும் ஏற்றுள்ளேன். இதற்காகவே தான் நான் சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்றேன். அனைத்து மக்களும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். நாம் அழகியதோர் தேசத்தை உருவாக்குவோம்.

எமது நாட்டில் இன்றும் வரட்சி மிக மோசமாகவுள்ளது. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் குடிப்பதற்கும் கூட நீருக்கு கஷ்டப்படுகின்றனர். பணம் கொடுத்துத்தான் குடிநீரைப் பெற்றுக்கொள்கின்றனர். இது வரட்சியினால் ஏற்பட்ட சவாலாகும். நாட்டின் மற்றுமொரு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றிற்கு நாம் தீர்வு காண வேண்டும். மூன்று வகையான தீர்வுகள் உள்ளன. இவை குறுகிய கால, இடைக்கால, நீண்டகால தீர்வுகளாகும். நீண்டகால தீர்வுகளில் முதலிடத்தில் இருக்கின்ற விடயம் மரக் கன்றுகளை நடுவதும், மரங்களைப் பாதுகாப்பதுமாகும். இதேபோன்று குறுகிய கால, இடைக்கால தீர்வுகளில் மணல் அகழ்தல், மண்வெட்டுதல் போன்றவற்றிலிருந்து பூமியை பாதுகாப்பதாகும். அரசாங்கம் என்ற வகையில் நாம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதற்கு உங்கள் அனைவருடையவும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். சுற்றாடலை பாதுகாப்பதன் மூலம் உங்களது வாழ்க்கையை பாதுகாக்க முடியும். அது அழிவுற்றால் உங்களது வாழ்க்கையும் அழிவை சந்திக்கும். இது முழு உலகமும் முகங்கொடுத்துள்ள சவாலாகும். இது பற்றி சிந்தியுங்கள். நித்திரைக்கு செல்லும் போதும் காலை எழுகின்றபோதும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சிந்தியுங்கள். அவ்வளவுக்கு இது முக்கியமான விடயமாகும்.      

 

Share This Post

NEW