கௌரவ மைத்திரிபால சிறிசேன

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி

பள்ளேவத்தே கமரால-லாகே மைத்ரிபால யாபா சிரிசேன அவர்கள் 1951ம் ஆண்டு ஐப்பசி மாதம் 3ம் திகதி பிறந்தார். இவர் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1989 இல் பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்தார். அக்காலம் தொடக்கம் 1994 வரை பல அமைச்சுப் பதவிகளை வகித்தார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை நீண்டகாலம் வகித்ததுடன், 2015ஆம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார். ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்தி, சகலருக்கும் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக இந்தத் தேர்தலில் இலங்கை மக்களின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

இன்றைய அரசியலில் வன்முறை அல்லது ஊழல் கறைபடியாமல், சிறந்ததொரு கடந்த கால வரலாற்றைக் கொண்ட அபூர்வமானதொரு கனவான் அரசியல்வாதியாக மைத்ரிபால சிரிசேன திகழ்கிறார். இவர் மெய்யான தேசிய சிந்தனையுள்ள அரசியல் தலைவர் ஆவார்.

ஒரு விவசாயியின் மகனாக, இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகச்சிறந்த குணாதிசயங்கள் என்று கருதப்படக்கூடிய மத்திய போக்கிலான, மிதவாத, தூய்மை அரசியல் பாரம்பரியத்தை இவர் கடைப்பிடித்தார்.

மைத்ரிபால சிரிசேன அரசியல் சமூக விபரக்கோவை

1967 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் அங்கத்தவராகவும், பொலன்னறுவை றோயல் மத்திய கல்லூரியில் ஜீசீஈ சாதாரண தரப் பரீட்சையை பூர்த்தி செய்த காலப்பகுதியில், அதன் பொலன்னறுவைத் தொகுதிக்கான செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். இவர் 1970 இல் ஒரு மாணவராக SLFP இன் தேர்தல் பிரசாரத்தில் ஊக்கத்துடன் பங்கேற்றார்.

1973ம் ஆண்டு குண்டசாலை விவசாயக் கல்லூரியில் ‘கமத்தொழில் டிப்ளோமா’ பட்டம் பெற்றார்.

1971ம் ஆண்டு JVP கிளர்ச்சியைத் தொடர்ந்து, மைத்ரிபால கைது செய்யபட்டார். இந்தக் கிளர்ச்சியில் இவருக்கு தொடர்பேதும் இருக்கவில்லை.

1974 – தமது முதலாவது தொழிலாக பொலன்னறுவையில் கூட்டுறவு கொள்வனவு உத்தியோகத்தராக பதவியேற்றார்.

1976 – இவர் – பிரதம அரச உத்தியோகத்தரான – கிராம உத்தியோகத்தராக கடமையேற்று, நாளாந்த நிர்வாக விடயங்களில் அயல் கிராமங்களுக்கும் சேவையாற்றினார்.

1977 – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினது மத்திய குழுவின் பொலன்னறுவைத் தேர்தல்  தொகுதி செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் 1977 தேர்தலில் முக்கிய பங்கு வகித்ததுடன், தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகள் காரணமாக பல சிரமங்களை எதிர்கொண்டார்.

1978 – இவர் வேலையை ராஜினாமா செய்து, முழுநேர அரசியலில் களமிறங்கினார். அதேவருடம் கியுபாவில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்றார்.

1979 – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொலன்னறுவை மாவட்ட செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் குடியுரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்க்கும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

1980 – மாவட்ட மட்டத்தில் SLFP வழிநடத்துவதற்காக அதன் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். ரஷ;யாவைச் சேர்ந்த மாக்ஸிம் கோர்க்கி கல்விக் கூடத்தில் அரசறிவியல் டிப்ளோமா பட்டம் பெற்றார்.

1981 – அகில இலங்கை SLFP யின் இளைஞர் ஸ்தாபனத்தின் பொருளாளராக மைத்ரி மாறினார். அதன் மூலம் SLFP யின் உயர்மட்ட தீர்மானங்களை எடுக்கும் அமைப்பான SLFP மத்திய குழுவின் அரசியல்பீடத்தின்) அங்கத்தவராகும் வாய்ப்பை அவர் பெற்றார்.

1989 இல் மைத்ரி அவர்கள் முதற்தடவையாக பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 1989ஆம் ஆண்டு மாசி மாதம் 15ம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இவர் இலங்கையில் பரவலாக அறியப்பட்ட SLFPயின்கை சின்னத்தில் போட்டியிட்டார். கை சின்னம் இலங்கை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இறுதி ஆண்டு இதுவாகும்.

1994ஆம் ஆண்டு கால பொது தேர்தலில் பொலன்னறுவ மாவட்டத்தில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, நீர்ப்பாசனப் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1997– இவருக்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் என்ற அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதுடன், SLFP இன் உதவிச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

2000 – மைத்ரி அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்; உபதவிசாளராக தெரிவானர்.

2001 – அவர் 12ஆவது பாராளுமன்றத்திற்குத் தெரிவானதுடன், அமைச்சர் மைத்ரிபால சிரிசேன 2001 ஆடி மாதம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.இந்தக் கட்சியின் வரலாற்றில் மிகவும் நீண்டகாலம் பதவி வகிக்கும் செயலாளர் என்ற ரீதியில், இவர் இன்னமும் இதே பதவியில் சேவையாற்றி வருகிறார்.

2004 மாசி மாதம் சிரிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP), மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகியவற்றிற்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MOU), JVP பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுடன் சேர்ந்து கைச்சாத்திட்டார். இதன் மூலம் சமகால கூட்டணி அரசாங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) உருவானது.

அவர் இலங்கையின் 13வது பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, அமைச்சரவை அந்தஸ்துடைய மகாவலி, ஆற்றுப்படுக்கை மற்றும் ரஜரட்ட அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் பாராளுமன்ற சபை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார்.

2005ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இலங்கை அரசாங்கத்தில் மைத்ரிபால சிரிசேன அவர்களுக்கு இரு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.

  • சுற்றாடல், நீர்ப்பாசன, மகாவலி அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சர்
  • சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர்

2006ஆம் ஆண்டு மைத்ரிபால சிரிசேன அவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP), ஐக்கிய தேசிய கட்சி (UNP) ஆகியவற்றிற்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MOU), ஐக்கிய தேசிய கட்சியின் அப்போதைய தவிசாளர் திரு.மலிக் சமரவிக்ரமவுடன் கைச்சாத்திட்டார். இது சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பது தொடர்பான உடன்படிக்கையாகும்.

2007 இல் இவர் விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றினார்.

இந்தக் காலகட்டத்தில் அமைச்சின் விவசாய அபிவிருத்தி முன்முயற்சியான “பயிர் வளர்ப்போம் – நாட்டைக் கட்டியெழுப்புவோம் “ (API WAWAMU – RATA NAGAMU) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த அவரால் முடிந்தது. இது இலங்கையில் விவசாயத்துறையின் நிலைபேற்றுத்தன்மையைப் பேணும் வகையிலான துரித பயிர் உற்பத்தி அடங்கலாக இலங்கை முழுவதும் விவசாய மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.

2007ஆம் ஆண்டு தை 25ஆம் திகதி மகாவலி பிரதான திட்டத்தின் கீழ் மொரகஹகந்த – களுகங்கை கருத்திட்டத்தை அமைச்சர் தொடக்கி வைத்தார். இது 90 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டமாகும். வடமத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பாசன நீரையும், குடிநீரையும் வழங்குவதற்கு அப்பால், மொரகஹகந்த திட்டத்தின் மூலம் 25 மெகாவோட் மின்வலு உற்பத்தி செய்யப்பட்டு, வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் நீண்ட நாட்கள் நிலவிய மின்வலுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்தது.

2007 ம் ஆண்டு மார்ச் மாதம் வெலிகந்த பிரசேத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சியில் இருந்து அமைச்சர் உயிர்தப்பினார். பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கத்தவர்கள் மூன்று பேர் தேடப்பட்டார்கள். தாம் கைது செய்யப்பட்ட தருணத்தில் அவர்கள் தமது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சயனைட் குப்பியை விழுங்கி தற்கொலை செய்து கொண்டார்கள்.

2008 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ம் திகதி LTTE இயக்கத்தால் அமைச்சர் இலக்கு வைக்கப்பட்டார். பண்டாரகம பிரதேசத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்தில் கலந்து கொண்டு திரும்பிய சமயம் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் அமைச்சர் அதிசயமாக உயிர் தப்பி நாட்டுக்கு சேவையாற்ற தமதுயிரைக் காப்பாற்றிக் கொண்டார். துரதிருஷடவசமாக, தாக்குதலில் நால்வர் பலியாகியதுடன், 15 பேர் காயமடைந்தனர்.

2009ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருந்த சமயம், திரு.மைத்ரிபால ஐந்து தடவைகள் இலங்கையின் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். போரின் இறுதி நாட்களிலும் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில், இவரே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றினார்.

2010ஆம் ஆண்டு மைத்ரிபால மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி, UPFA அரசாங்கத்தில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

‘இலங்கை – தேசிய ஓளடதக் கொள்கை சட்டம்’ 2010-2014 ஆண்டு காலப்பகுதியில் பரவலாக அறியப்பட்ட பிபிலே ‘ஒளடதக் கொள்கை சட்டத்தை’ மீள அறிமுகப்படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். இலங்கைக்கான தேசிய ஒளடதக் கொள்கை சட்டகத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில், அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இந்த சட்டம் அமைச்சரவை அனுமதிக்காக காத்துக் கிடக்கிறது.

‘சிகரட் பைக்கற்றுகளில் படங்களுடன் கூடிய எச்சரிக்கை’ – இவர் புகைத்தலின் தீமைகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு புகையிலை / சிகரட் பைக்கற்றுக்களில் ‘எச்சரிக்கைப் படங்களை’ அச்சிடும் நடைமுறையை அறிமுகப்படுத்த பாடுபட்டார். இந்த முயற்சிக்கு நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியும் விளைந்த அச்சுறுத்தல்களின் மத்தியில் பல்தேசிய புகையிலைக் கம்பனிகளுடன் போரிட்டார். இந்த ஒன்றரை வருடகாலம் நீடித்த சட்ட நடவடிக்கையில், பல மணித்தியாலங்கள் அமர்ந்து நீதிமன்ற அமர்வுகளை செவிமடுத்து, ஈற்றில் தமது முயற்சியில் வெற்றியும் பெற்றார். இதன் பிரகாரம், 2015 ஜனவரியின் பின்னர் ஒவ்வொரு சிகரெட் பைக்கற்றின் மேற்பரப்பின் 60 சதவீத மேற்பரப்பு புகைத்தலின் பாதிப்பை சித்தரிக்கும் படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கும்.

‘உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம்’ – இலங்கையில் புகைத்தலை தடுப்பதில் காட்டிய அர்ப்பணிப்பிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ‘World No Tobacco Day Award 2013′ விருதை வென்றார். இலங்கையர் ஒருவருக்கு இந்த விருது கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

‘சுகாதாரத்தில் அமைச்சுமட்ட தலைமைத்துவ ஹார்வாட் விருது’ – 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொதுச் சுகாதார ஹார்வாட் கல்லூரி மற்றும் கென்னடி அரச கல்லூரியின் ‘சுகாதாரத்துறை சார்ந்த அமைச்சு மட்ட ஹார்வாட் விருதைப்’ பெற்றார். இந்த விருது இலங்கையின் சுகாதார அமைச்சராக புதுமை மிக்க தலைமைத்துவத்தில் கொண்டிருந்த திடசங்கற்பத்திற்காக வழங்கப்பட்டது. இத்தகைய விருதின் மூலம் இலங்கையர் ஒருவர் கௌரவிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

‘ஜெனீவா உலக சுகாதார மாநாடு’ – 2013ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதாரக் கூட்டத்தில் ஜீ-15 நாடுகளுக்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சுகாதார விவகாரங்கள் தொடர்பான ஜீ-15 அறிக்கையை வாசித்தார்.

2014ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலக சுகாதார கூட்டத்தில் நான்கு உபதலைவர்களுள் ஒருவராகத் தெரிவானார்.

உள்ளுர் மருந்து உற்பத்தியாளர்களை வலுவூட்டல் – சுகாதார அமைச்சிற்காக உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்து வகைகளை மாத்திரம் நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேன அனுமதி பெற்றதன் மூலம் உள்ளுர் மருந்த உற்பத்தியாளர்களை வலுவூட்டக்கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் எட்டப்பட்டது.

அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கம் மருந்துப் பொருட்களை வாங்கும் முதலாவது பொறிமுறை – பங்களாதேஷ மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் திரு.மைத்ரிபால அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கம் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் பொறிமுறையை ஆரம்பித்தார். கூடிய விலை கொடுத்து மருந்து வகைகளை வாங்க முடியாதுள்ள இலங்கை மக்களுக்கு நியாயவிலையில் தரமான மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய பின்னணியை உருவாக்கியது.

2014 நவம்பர் – 2015 ஜனாதிபதி தேர்தல் – பொது வேட்பாளர் – அமைச்சர் மைத்ரிபால சிரிசேன 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு, பொது வேட்பாளராக பிரகடனப்படுத்தப்பட்டார்.

 

வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

தேர்தல் தொகுதி: பொலன்னறுவை மாவட்டம்

ஆரசியல் கட்சியின் பெயர்: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP)

பிறந்த தினம்: 03.09.1951

திருமண விபரம்: திருமணமானவர்

மனைவியின் பெயர்: திருமதி ஜயந்தி புஷபகுமாரி

பிள்ளைகள்: இரு மகள்மார், ஒரு மகன்

சமயம்: பௌத்தம்

கல்வி: 1955 லக்ஷh-உயன பாடசாலையில் ஆரம்பக் கல்வி (BOP-292) – பொலன்னறுவை – தப்போவௌ மகாவித்தியாலயம் – பொலன்னறுவை ரோயல் மத்திய கல்லூரி – நுண்கலைக் கல்வியில் திறமை (ஆடல், பாடல், கலாசார நடவடிக்கைகள்) – 1973 விவசாயத்தில் டிப்ளோமா (இலங்கை விவசாயக் கல்லூரி, குண்டசாலை) – 1980 அரசறிவியல் டிப்ளோமா, மாக்சிம் கோர்க்கி கல்விக்கூடம் ரஷயா.

தொழிற்றுறை: விவசாயி

Share This Post

NEW