இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது – ஜனாதிபதி வலியுறுத்து

இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது – ஜனாதிபதி வலியுறுத்து

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் அமைப்பிற்கு புதிய யோசனை

இயற்கையின் இருப்புக்கு மானிட செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என்பதோடு மனித சமுதாயத்தின் முதன்மையான பொறுப்பு இயற்கையை பலப்படுத்துவதே ஆகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வலியுறுத்தினார்.

இன்று (25) சிங்கப்பூரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை ஆற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பூகோளத்தின் ஒட்டுமொத்த உயிரினங்களையும் நிலையாக பேணும் பொறுப்பு மனிதனுக்குரியது என்பதை பௌத்த மதத்தை பின்பற்றி வருபவன் என்ற வகையில் தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார். மனிதன் தான் வாழ்வதற்கு பொருத்தமான சூழலை கட்டியெழுப்பவும் சூழல் நேயமான முறையில் உலகளாவிய பொருளாதாரத்தை வழிநடத்துவதும் இன்று எமது முதன்மை பொறுப்புகளாகுமென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சுற்றாடலுக்கான கடமைகளை நிறைவேற்றுவதில் பிராந்திய ஒத்துழைப்பினை விருத்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

பெருமைமிகு விவசாய பொருளாதார நாகரீகத்துடன்கூடிய தேசம் என்ற வகையில் இலங்கை சுற்றாடல் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், உணவு வீண்விரயமாவதை கட்டுப்படுத்துவதற்கு பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயற்படுதல் தொடர்பான முன்மொழிவொன்றையும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் முன்வைத்தார்.

பேண்தகு பசுமை தொழிற்துறையை பலப்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்பொன்றினை ஏற்படுத்திக்கொள்வதற்கு வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவி அவசியமாகும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், காலநிலை மாற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்படுகின்ற இலங்கை போன்ற நாடுகளுக்கு தமது பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையக்கூடியவாறு நிதியை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறை ஒன்றின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். காலத்திற்கு உகந்தவாறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுற்றாடல் சமவாயத்தினை திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், சுற்றாடல் சமவாயத்தின் கீழ் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக உறுப்பு நாடுகளை பலப்படுத்தும் முறையான திட்டம் தொடர்பிலும் ஆலோசனைகளை முன்வைத்தார்.

அத்தோடு சூழல் கட்டமைப்பினை விசேடமாக ஈர நிலங்களை இரசாயன கழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி அவர்கள், கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையினால் நிறைவேற்றப்படும் விசேட செயற்பணிகள் தொடர்பில் விளக்கமளித்தார். கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்காக உலகளாவிய ரீதியில் பரிபூரண செயற்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணை ஒன்றையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்விற்காக முன்வைத்தார்.

பூகோள வெப்பமாதலின் பாதிப்புகளின் மத்தியிலும் இலங்கை பாரிய பசுமை முதலீடாக மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு நீர்வளத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளதென்பதை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இது சுற்றாடல் மாற்றங்களின் தாக்கங்களை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும் என்பதையும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் நிறுவன தலைவர்கள் மாநாடு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (25) முற்பகல் சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் ஆரம்பமானது.

“சுற்றாடல் சவால்கள், பேண்தகு பயன்பாடு மற்றும் உற்பத்திக்கான செயற்திறன்மிக்க தீர்வுகள்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 40 நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அந்நாடுகளின் சுற்றாடல் அமைச்சர்களும் உயர்மட்ட பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.

மாநாட்டு மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை  சிங்கப்பூர் பிரதி பிரதமர் Teo Chee Hean, துவாலு நாட்டின் பிரதமர் Enele Sosene Sopoaga ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

சுற்றாடலை பாதுகாப்பதற்காக விசேட அர்ப்பணிப்புடன் செயற்படும் சுற்றாடல் சார்ந்த கொள்கை ரீதியான தீர்மானங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ள அரச தலைவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி அவர்களின் உரை மாநாட்டில் கலந்துகொண்டவர்களது விசேட கவனத்திற்குள்ளாகியது.


சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை நிறுவனங்களின் மூன்றாவது மாநாட்டில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை
2019.01.25

மாநாட்டின் தலைவர் அவர்களே,

டுவாலு நாட்டின் பிரதமர் அவர்களே,

சிங்கப்பூர் குடியரசின் பிரதிப் பிரதமர் அவர்களே,

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் அமைச்சர்களே, பிரதி அமைச்சர்களே,

மதிப்பிற்குரிய அதிதிகளே,

எனது இந்த விஜயத்தில் எனக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்ட அமோக வரவேற்பு மற்றும் உபசரிப்புக்காக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் மக்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை ஆரம்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த மாநாட்டை முன்னிட்டு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருப்பதையிட்டு ஐ.நா சுற்றாடல் பேரவைக்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.

உலகளாவிய சமூகம் சூழலியல் சவால்களை எதிர்கொண்டு, பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைய முயற்சித்துவருகின்ற இச்சூழ்நலையில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை நிறுவனங்களின் இந்த கருத்தரங்கில் இலங்கையின் சார்பில் பிரதான உரையை நிகழ்த்தக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

உலக அளவில் தீர்வுகளை வேண்டி நிற்கும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றாடல் விடயங்களில் இன்று உலகின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. எனவே, உலக அளவில் அதன் முன்னணி பாத்திரத்திற்கும், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் ஐ.நா ஆசிய பசுபிக் சுற்றாடல் பேரவைக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகளாவிய ரீதியிலும் குறிப்பாக எமது பிராந்தியத்தின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் துறைகளில் காலநிலை மாற்றம் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்தகையதொரு சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் சுற்றாடல் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கான புத்தாக்க தீர்வுகளை நோக்கி மனித அறிவு மற்றும் திறன்களை மையப்படுத்தியதாக ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

பௌத்த தத்துவத்தை பின்பற்றுகின்றவன் என்ற வகையில் மனிதனுடைய மட்டுமன்றி இப்புவியில் வாழும் அனைத்து உயிரினங்களினதும் இருப்பை பாதுகாக்கின்ற பொறுப்பை நாம் கொண்டுள்ளோம் என நான் உறுதியாக நம்புகிறேன்.

எனவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் உலகின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒரு பயனுறுதி வாய்ந்த நிகழ்வாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

பாதுகாப்பானதொரு சூழலில் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதும் பேண்தகு பூகோள பொருளாதார நிலைமைகளை கட்டியெழுப்புவதற்கு சுற்றாடல் ரீதியாக பலமான பொருளாதார போக்குகளை அறிமுகப்படுத்துவதும் எமது முக்கிய கடமையாகும். எனவே சுற்றாடல் பொறுப்புக்களையும் கடப்பாடுகளையும் நிறைவேற்றும் வகையில் எமது பிராந்திய கூட்டுறவை பலப்படுத்துவது முக்கியமானதாகும்.

கீர்த்திமிக்க விவசாய நாகரீகத்தின் வாரிசுகள் என்ற வகையில் முழுவுலகினதும் நன்மைக்காக இலங்கையின் ஒரு சில அனுபவங்களை பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எமது முன்னோர்கள் இயற்கையை மதித்ததுடன் உணவுப் பாதுகாப்பையும் அருளாக பெற்றிருந்தார்கள்.

இன்று பூகோள உணவுப் பாதுகாப்பிற்கான புத்தாக்க ஆராய்ச்சிகள் மூலம் பேண்தகு நுகர்வு முறைமைகளை வலுப்படுத்தியிருக்கும் அதேநேரம், இலங்கை எதிர்வரும் ஐ.நா சுற்றாடல் பேரவையில் உணவு விரயமாவதை முகாமைத்துவம் செய்வது பற்றிய தீர்மானமொன்றை முன்மொழியவுள்ளது.

மனித நடவடிக்கைகள் இயற்கையின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடாது. இயற்கையின் இருப்பை வலுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது மனித இனத்தின் முக்கிய பொறுப்பாகும்.

வளமான மண் இயற்கையின் இதயம் போன்றதாகும். மண் வளங்களை வளப்படுத்தும் காடுகளும் அதேபோன்று நீர்நிலைகளும் பூமித்தாயின் இரத்த நாளங்களாகும். அவற்றை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

சூழல் முறைமைகளை குறிப்பாக ஈர நிலங்களை இரசாயன கழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். பூகோள சுற்றாடல் பாதுகாப்பிற்கு அதன் பங்களிப்பை வழங்குவதில் இலங்கை எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் பொதுநலவாய பசுமைத்திட்டத்தின் உறுப்பினர் என்ற வகையில் நாம் முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றோம். கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கு பூகோள ரீதியில் விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடருக்கு இலங்கை தீர்மானமொன்றை முன்மொழியவுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விளைவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஐ.நா சுற்றாடல் பேரவைகளின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். மேலும் ஒரு பிராந்திய அமைப்பு என்ற வகையில் ஆசிய பசுபிக் அலுவலகம் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதன் முன்னேற்றங்கள் பற்றி கண்காணிப்பதற்கு ஒரு வினைத்திறனான பொறிமுறையை அமைப்பதில் தலையிடுவதற்கு ஐ.நா சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்தை கோர வேண்டும்.

மேலும் காலத்தின் தேவைகளுக்கேற்ற வகையில் புதிய நடவடிக்கைகளை எடுக்கவும், சுற்றாடல் மாநாடுகளை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும் சுற்றாடல் மாநாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட அர்ப்பணிப்புகளை வெற்றிகரமாக அடைந்துகொள்வதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கின்ற ஒரு முறைமையை தாபிக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.

காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவுவதற்கான வளமானதொரு நிதியளிப்பு பொறிமுறை பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு தாபிக்கப்பட வேண்டும். நீலப் பசுமை பொருளாதாரத்தின் நன்மைகளை அடைந்துகொள்வதற்கு பேண்தகு கைத்தொழில் துறைகளை பலப்படுத்தும் வகையில் அபிவிருத்தியடைந்த நாடுகளினதும் பிராந்திய கூட்டுறவு அமைப்புகளினதும் ஒத்துழைப்பு விரிவாக்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் “தூய சமுத்திரம்” வேலைத்திட்டம் உலகளாவிய ரீதியில் சமுத்திரங்களை பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்கேற்ப இலங்கை மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளிட்ட நிலப் பிரதேசத்தில் இடம்பெறும் நடவடிக்கைளின் மூலம் சமுத்திரங்கள் மாசடைவதை குறைக்கும் வகையில் நான்காவது ஐ.நா சுற்றாடல் பேரவைக்கு மற்றுமொரு தீர்மானத்தை முன்மொழிகின்றது. ஒரு பிராந்திய அமைப்பு என்ற வகையில் எமது பிராந்தியத்தில் கடல் மாசடைகின்ற முக்கிய பிரச்சினைக்கு புத்தாக்கமிக்க சூழல் நட்புடைய தீர்வுகளை ஊக்குவிப்பதற்கு நாம் நெருங்கிப் பணியாற்ற வேண்டும்.
இலங்கை 2019 பூகோள காலநிலை இடர் சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்ற விடயத்தை கவலையுடன் உங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன். ஒரு சம சீதோசன காலநிலையைக்கொண்ட தீவான இலங்கை அதன் நிலப் பிரதேசத்தின் 70 வீதம் உலர் வலயத்திற்கு சொந்தமாக இருப்பதுடன், வருடத்தில் 1500 மில்லிமீற்றரை பார்க்கிலும் குறைவான மழைவீழ்ச்சியையே பெற்று வருகிறது.

காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புக்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை அண்மையில் அதன் பாரிய பசுமை முதலீடாக மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு நீர்வள திட்டத்தை ஆரம்பித்தது. இது காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புக்களை குறைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இது உலர்வலயத்திலுள்ள சமூகங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய நோக்கங்களுக்கான நீரை வழங்குகின்றது. 817 மில்லியன் கியூபிக் மீற்றர் கொள்ளளவை கொண்ட இந்த இரட்டை நீர்த்தேக்கங்கள் 84,000 ஹெக்டயர் விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக விளங்குகின்றது. இத்திட்டத்தின் மூலம் 25 மெகா வோட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. யுனெஸ்கோ நிறுவனத்தினால் உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள எமது பாரம்பரிய நீர்ப்பாசன முறைமையை நாம் பாதுகாத்து வருகின்ற அதேநேரம், நாம் பசுமை உட்கட்டமைப்பிலும் முதலீடு செய்துள்ளோம். இத்திட்டம் 2500 நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பதையும் 260 கிலோமீற்றருக்கும் அதிக நீளமான நீர்ப்பாசன கால்வாய்களை புனரமைப்பதையும் உள்ளடக்கியதாகும்.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலப் பிரதேசத்தை கொண்டிருந்த போதும், இலங்கை அரசாங்கம் 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் வன அடர்த்தியை 29 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக அதிகரிப்பதற்கு “வனரோபா” தேசிய மரநடுகை திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதிகரித்துவரும் பூகோள வெப்பமாதல் சவால்களை எதிர்கொண்டு, பசுமை சூழலை பாதுகாப்பதற்கான இந்த பசுமை திட்டங்களின் முன்னேற்றத்தை பார்ப்பதற்கு எமது நாட்டுக்கு வருகை தருமாறு நான் உலகத் தலைவர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

ஆசிய பசுபிக் பிராந்திய பங்காளர் என்ற வகையில் இந்த கூட்டத்தின் பெறுபேறுகள் எதிர்வரும் ஐ.நா சுற்றாடல் பேரவை கூட்டத்தொடருக்கான பெறுமதியான பிராந்திய கண்ணோட்டங்களை வழங்கும் என்று இலங்கை நம்புகிறது. இந்த மாநாடு எமது பகிர்ந்த பொது பிராந்திய இலக்குகளை அடைந்துகொள்ள உதவும் என நான் நம்புவதுடன், இந்த மாநாடு முழுமையாக வெற்றிபெற வாழ்த்துகிறேன். உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி கிடைக்கட்டும்.

Share This Post

NEW