இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

“இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக வருகை தந்திருக்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்டிருக்கும் அவரது அழைப்பை கௌரவத்துடன் ஏற்றுக்கொண்டேன். அத்தோடு இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை பலப்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்த்துள்ளேன்” என்று ஜனாதிபதி அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திரக்கின்றார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் ஒரு சுமூகமான சந்திப்பை மேற்கொண்டேன். அமைதி, முன்னேற்றம், சுபீட்சம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இணைந்து பணியாற்றுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியை அவரிடம் தெரிவித்தேன். அவரது தலைமைத்துவத்தின் கீழ் இந்திய இலங்கை உறவுகள் சிறந்த உச்சத்தை அடையுமென்று நம்புகின்றேன்” என இச்சந்திப்பு தொடர்பாக கலாநிதி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Share This Post