இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் (Seychelles) இடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலா தொடர்புகளை பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் இணக்கம்

இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் (Seychelles) இடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலா தொடர்புகளை பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் இணக்கம்

இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரண்டு கைச்சாத்து

 

இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்நோக்கிக் கொண்டு செல்ல இரு நாட்டு அரச தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி போவினால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பின் பேரில் சீஷெல்ஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி போவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றதுடன், இதன்போதே இவ்விடயம் தொடர்பில் அரச தலைவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.

இன்று பிற்பகல் சீஷெல்ஸ் அரச மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை சீஷெல்ஸ் ஜனாதிபதி அன்புடன் வரவேற்றார்.

மரியாதை வேட்டுக்கள் சகிதம் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன், ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கிடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

சுற்றுலா கைத்தொழில் மற்றும் மீன்பிடித் துறை ஆகியவற்றினூடாக முறையாக அபிவிருத்தி அடைந்துவரும் சீஷெல்ஸ் அரசாங்கம், ஆபிரிக்க வலயத்திலுள்ள அபிவிருத்தியடைந்த நாடாகும். இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலா தொடர்புகளை புதிய பரிணாமத்துடன் விரிவுபடுத்தி, பலப்படுத்தி முன்நோக்கி கொண்டு செல்வது தொடர்பாக இதன்போது அரச தலைவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக சமூகங்களுக்கிடையிலான தொடர்புகளை விருத்திசெய்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய துறையினருக்கு ஆலோசனை வழங்குவதாக தெரிவித்தார்.

இவ்வருட இறுதியில் சீஷெல்ஸில் இடம்பெறவுள்ள வர்த்தக கண்காட்சியில் அதிகளவிலான இலங்கை வர்த்தகர்களை பங்குபற்ற வைக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர முக்கியத்துவமுள்ள இருதரப்பு மற்றும் பிராந்திய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை பெரிதும் பாராட்டிய சீஷெல்ஸ் ஜனாதிபதி, தமது நாட்டிற்கும் அச்சுறுத்தலாக காணப்படும் போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

சீஷெல்ஸ் நாட்டின் சுகாதார துறையின் முன்னேற்றத்திற்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்த சீஷெல்ஸ் ஜனாதிபதி, அந்நாட்டு மருத்துவர்களுக்கு இலங்கையில் பயிற்சி வாய்ப்பொன்றினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அத்தோடு சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினருக்கு இலங்கையில் இராணுவ பயிற்சி வாய்ப்பொன்றினையும் நீதிமன்ற மற்றும் சட்டவாக்கத் துறையினருக்கு தேவையான பயிற்சியை பெற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பமளிக்குமாறும் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், அதற்கான வாய்ப்புகள் தொடர்பில் துரிதமாக கண்டறிவதாக தெரிவித்தோடு, சீஷெல்ஸ் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி துறையில் வருடாந்தம் 10 புலமைப்பரிசில்களை வழங்கவும் இணக்கம் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி போ, நட்பு நாடு என்ற வகையில் மாத்திரமன்றி சகோதர தேசமாக இலங்கை தமது நாட்டிற்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களை பெரிதும் பாராட்டுவதாக தெரிவித்தார்.

பொருளாதார, வர்த்தக துறைகளின் அபிவிருத்திக்கும் இலங்கைக்கு தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எத்தகைய உதவிகளையும் வழங்க தாம் தயாராக இருப்பதாக சீஷெல்ஸ் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்கள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் இந்த விஜயம், இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளில் புதியதோர் மைல்கல்லாக அமையும் எனவும் சீஷெல்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சீஷெல்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1988 ஒக்டோபர் 03ஆம் திகதி ஆரம்பமான போதிலும் சீஷெல்ஸுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் 2013ஆம் ஆண்டிலேயே ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது வாடகை அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அந்த அலுவலகத்திற்கு நிலையான கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான காணியை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சீஷெல்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போது சுமார் 2,400 இலங்கையர்கள் சீஷெல்ஸ் நாட்டில் தொழில் புரிவதுடன், அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சீஷெல்ஸ் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

இதனிடையே இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் வகையிலான இரண்டு புதிய ஒப்பந்தங்கள் அரச தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான புதிய ஒப்பந்தம் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் சீஷெல்ஸ் நாட்டின் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழத்திற்கும் இடையே கைச்சாத்திடப்பட்டதுடன், தொழிற்பயிற்சி துறை தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் சீஷெல்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் கைச்சாத்திட்டன.

 

 

 

Share This Post

NEW