ஜனாதிபதியின் நாட்டுக்கான முயற்சிகளுக்கு மகா நாயக்க தேரர்கள் பாராட்டு

• தேசிய பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு தேரர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு…

அண்மையில் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், அதனைத்தொடர்ந்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்து நாட்டின தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

முதலில் மல்வத்தை மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்தை பீடத்தின் மகா நாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது நாட்டின் தற்போதைய பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்கள் மகா நாயக்க தேரருக்கு விளக்கினார்.

நாட்டில் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு அனைவருக்கும் பொதுவான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இதன்போது மல்வத்த மகா நாயக்க தேரர் சுட்டிக்காட்டியதுடன், தேசிய மற்றும் சமய ரீதியாக அனைவருடனும் கலந்துரையாடி நாட்டில் அமைதியானதொரு சூழலை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

வெசாக் கொண்டாட்டம் மற்றும் அதனை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் மல்வத்தை மகா நாயக்க தேரர்களுடன் கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்று சியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரை சந்தித்தார்.

நாட்டுக்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்களை தேரர் அவர்கள் பாராட்டியதுடன், தனது முழுமையான ஆசிர்வாதத்தையும் வழங்கினார்.

நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பற்றி தேரர்களுக்கு விளக்கிய ஜனாதிபதி அவர்கள், மீண்டும் நாட்டை மோதல் நிலைமைக்குள் தள்ளிவிட எவருக்கும் இடமளிக்காது, அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தான் முன்னெடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் விளக்கினார்.

அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர், ஸ்ரீ தலதா மாளிகையின் சங்கைக்குரிய நாரன்பனாவே ஆனந்த நாயக்க தேரர் மற்றும் அஸ்கிரி விகாரையின் சங்கைக்குரிய கும்பக்கன்தன்வல புஞ்ஞரத்ன தேரரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் மல்வத்தை பீடத்தின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு வேலைத்திட்டங்கள், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு, பொதுமக்கள் கூடும் இடங்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் தேரருடன் கலந்துரையாடினார்.

மேலும் இன்று சமூகத்தில் காணக்கூடியதாக உள்ள தேவையற்ற பயம், பீதி மற்றும் போலிப்பிரசாரங்களை தவிர்த்து அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தேரர் அவர்கள் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து ராமஞ்ஞ மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய நாபாண பேமசிறி தேரர் தங்கியுள்ள கண்டி மெனிக்கின்ன உரிகடுவ ஸ்ரீ வித்யாசாகர விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

நாட்டையும் மக்களையும் பாதுகாத்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை தேரர் பாராட்டியதுடன், அந் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதங்களையும் வழங்கினார்.

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணவர்தன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW