“தேசிய விருது விழா 2019” ஜனாதிபதி தலைமையில்

“தேசிய விருது விழா 2019” ஜனாதிபதி தலைமையில்

தாய்நாட்டுக்காக உன்னத பணியினை மேற்கொண்ட இலங்கையர்களுக்கு தேசிய விருது வழங்கும் “தேசிய விருது விழா 2019” ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (19) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தாய்நாட்டின் புகழை உயர்த்துவதற்காகவும் தேசத்தின் கௌரவம் மற்றும் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்பை செய்த இலங்கையர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நாட்டுக்காக உன்னத பணியினை மேற்கொண்ட 70 இலங்கைப் பிரஜைகளுக்கு ஜனாதிபதி அவர்களினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை மற்றும் பொதுவாக மனித இனத்திற்காக மேற்கொண்ட சிறப்பான சேவைகளை பாராட்டி இலங்கை பிரஜையல்லாதோருக்காக வழங்கப்படும் ஸ்ரீ லங்கா ரத்ன விருது ஜப்பான் நாட்டவரான யஸூஷி அகாஷி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தேசத்திற்காக சிறப்பு வாய்ந்த சேவைகளை வழங்கியமையை பாராட்டும் முகமாக 06 தேசமானி விருதுகள் வழங்கப்பட்டதுடன், அஜித் டி செய்சா, கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, மெரில் ஜோசப் பெர்னாண்டோ, மொரகொடகே கிறிஸ்டோபர் வோல்டர் பின்டோ, பேராசிரியர் மொஹான் குணசிங்க, கலாநிதி சுரக் விக்ரமசிங்க ஆகியோர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் 10 தேசபந்து விருதுகள், 06 வித்யாஜோதி விருதுகள், 09 கலா கீர்த்தி விருதுகள், 08 ஸ்ரீ லங்கா சிகாமணி விருதுகள், 03 வித்யாநிதி விருதுகள், 11 கலாசூரி விருதுகள், 11 ஸ்ரீ லங்கா திலகம் விருதுகள், 02 வீர பிரதாபம் விருதுகள், 03 ஸ்ரீ லங்கா ரஞ்சன விருதுகள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நடராசா பிள்ளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எசெல வீரகோன் ஆகியோர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், கலைஞர்கள், கல்விமான்கள் உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW