இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு

இந்திய பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை அடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமருக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி அவர்கள், நரேந்திர மோடியினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பில் இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வெற்றியானது நரேந்திர மோடி தலைமை வகிக்கும் கட்சிக்கும் அதன் கூட்டு அரசியல் கட்சிகளுக்கும் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு அந்நாட்டு மக்களால் மீண்டும் ஒருமுறை வழங்கப்பட்ட சிறப்பான சந்தர்ப்பம் இதுவென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிகாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த கால ஆட்சி காலத்தில் இந்தியா பல வெற்றிகளை அடைந்துள்ளதாகவும் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மறுசீரமைப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே வலுவான நட்புறவு பேணப்பட்டு வருவதுடன், நரேந்திர மோடியுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்ற வகையில் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலகின் பலமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியா, இந்து சமுத்திர வலயத்தின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கை ஆற்றிவருவதுடன், அந்த எண்ணங்கள் வெற்றியடைவதற்கு இலங்கை இந்தியாவுடன் நெருங்கி செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Share This Post

NEW