பயங்கரவாதத்தை உலகிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும் – உலகத் தலைவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிப்பு

பயங்கரவாதத்தை உலகிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும் – உலகத் தலைவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிப்பு

சமய தீவிரவாதத்தினால் உருவாகும் பயங்காரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இன்று (15) முற்பகல் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் தலைமையில் இன்று முற்பகல் பீஜிங் நகரில் ஆரம்பமானதுடன், அம்மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.

47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்ததுடன், உலகளாவிய ரீதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் மனித இனத்தின் இருப்புக்காக உலக மக்கள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் ஆசிய நாகரிகங்கள் பற்றிய விரிவாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுதல் இந்த மாநாட்டின் நோக்கமாகும். இம்மாநாடு மே 22ஆம் திகதி வரை பிஜிங் நகரில் நடைபெறும்.

ஆசிய நாகரிகங்கள் பற்றி கலந்துரையாடும் இந்த மாநாட்டில் எழும் குரல்களும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் தலைமைத்துவத்தில் நட்புறவு அமைப்பாக உருவாகும் ஐக்கியமும் சர்வதேச பயங்கரவாதத்தையும் சமயத் தீவிரவாத பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கான சக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் இம்மாநாட்டில் கருத்து தெரிவித்தார்.

ஒரு நாகரிகத்தை மற்றுமொரு நாகரிகத்தினால் அடிமைப்படுத்த முடியாது என்றும் நாகரிகத்தையும் கலாசாரத்தையும் சட்டத்தினால் அல்லது சர்வதேச கட்டளையினால் அடிமைப்படுத்த முடியாதென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கையின் நாகரிகம் 2600 வருடங்களுக்கு மேற்பட்ட பௌத்த நாகரிகத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருப்பதுடன், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலேயர், பறங்கியர் ஆகிய இனங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர்கள் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

எந்தவொரு நாட்டுக்கும் எந்தவொரு இனத்திற்கும் எந்தவொரு நாகரிகத்திற்கும் அல்லது கலாசரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் செயற்பட்டுவரும் ஒரு நாடு என்ற வகையில் இலங்கையின் நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு மறைமுகமான சக்திகளினால் விடுக்கப்படும் சவால்களின்போது அனைவரும் ஒருமித்து கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

எனவே தமக்கே உரித்தான நாகரிகம் மற்றும் கலாசரத்தின் முக்கியத்துவத்துடன் ஒரே தேசமாக அனைத்து நட்புறவு நாடுகளுக்குமிடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான சர்வதேச நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், சீனா போன்ற  பெரும் நாகரிகமொன்றைக் கொண்டுள்ள நாட்டில் இவ்வாறானதொரு மாநாடு நடத்தப்படுவதன் மூலம் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதாகுமென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பமளித்தமைக்காக சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

 

Share This Post

NEW