பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்

பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்

ஜனாதிபதி அவர்களால் சீன அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற, பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அவர்கள் இன்று (28) பார்வையிட்டார்.

தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாண தளத்திற்கு இன்று காலை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அதன் நிர்மாணப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

சிறுநீரக நோயினால் அல்லலுறும் மக்களுக்காக நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் கொண்டிருந்த நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், ரூபா 12,000 மில்லியன் செலவில் தெற்காசியாவில் விசாலமான சிறுநீரக மருத்துவமனையாக இது நிர்மாணிக்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்தில் மாத்திரமன்றி, நாடு பூராகவும் காணப்படும் சிறுநீரக நோயாளிகளுக்காக நிர்மாணிக்கப்படும் இந்த மருத்துவமனை உலகின் நவீன ஆய்வுகூட மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது.

24 மாத காலத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ள இச்செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை 2020 ஜூலை மாதத்தில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தி, அதன் அனுகூலங்களை அப்பாவி சிறுநீரக நோயாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டினார்.

அதன் பின்னர் பராக்கிரம சமுத்திர பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், அங்கு சிறிது நேரம் தங்கியிருந்தார்.

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வரலாற்று புகழ்மிக்க பொலன்னறுவை புண்ணிய பூமிக்கு வருகை தந்திருந்த மக்களுடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களிடம்  அம்மக்கள் தமது பிரச்சினைகளை தெரிவித்தனர்.

இதனிடையே பொலன்னறுவை நகரத்தின் பொசொன் பௌர்ணமி தின கொண்டாட்டங்களை இரசித்தவாறு நேற்றிரவு அப்பிரதேசத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், கதுருவெல விவசாய பொருளாதார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொசொன் வலயத்தையும் பார்வையிட்டார்.

ஜனாதிபதி செயலகம், முப்படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து இந்த பொசொன் வலயத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

 

Share This Post

NEW