கனமழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

கனமழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வெள்ள அனர்த்தம் முழுமையாக நீங்கும் வரை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு தேவையான வசதிகளை தாமதமின்றி வழங்குமாறும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறும் அமைச்சரவை செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார் பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி அவர்கள், வட மாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர்கள், இராணுவ தளபதி மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் ஒன்றிணைந்து நிவாரண வேலைத்திட்டங்களை துரிதமாக செயற்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக பெருக்கெடுத்துள்ள இரணைமடு உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தத்தின் காரணமாக முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் பல்வேறு இன்னலுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அம்மாவட்டங்களில் செயற்படும் 40 பாதுகாப்பு முகாம்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேற்கொண்டுள்ளது.

Share This Post

NEW